சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 12
12
உலகத்திலேயே தன்னை விட அழகும், தன்னை விட செல்வச் செருக்கும் உடையவர்கள் கிடையாது என்கிற எண்ணம் பரிபூர்ணமாயிருக்கும் ப்ரக்ருதியாகையால், ஸ்ரீமதி உஷா தேவி எந்த அம்சத்திலும், தனித்த முறையிலேயே நடந்து வந்தாள். தன் விவாக விஷயத்திலும், தன்னுடைய சுயம்வரமே பலித்துவிட்ட குதூகலத்தில், மகத்தான சந்தோஷத்துடன் துள்ளுகிறாள். இன்று, தன்னைப் பார்க்க தாமோதரன் வீட்டவர்கள் வரப் போகிறார்களென்பதை யறிந்து, வீட்டை தேவேந்திர பட்டணத்திற்கு ஒப்பாக அலங்காரம் செய்ததோடு, வருகிற விருந்தினர்களை உபசரித்துச் செய்ய வேண்டிய முறையை, வெகு சிறப்பாக நடத்திப் புகழ் பெற எண்ணி, ஜவுளிக் கடையை ஒன்று அப்படியே கொண்டு வைத்து விட்டாள். வருகிறவர்கள் எத்தனை பெயர்களோ, அத்தனை பேர்களுக்கும் புடவைகள், ரவிக்கைகள், அங்கவஸ்திரம், ஸூட்டு, முதலிய ரகம் வாரியாகக் கொடுத்துப் பெருமை அடைவதற்காகத் தயார் செய்து விட்டாள். தன்னுடைய செல்வத்தைப் பிறர் அறியும் நோக்கத்துடனும் இம்மாதிரி செய்தாள் என்றால் மிகையாகாது. தனது சினேகிதைகள், உறவினர்கள் எல்லோருக்கும் அழைப்புகள் அனுப்பி வரவழைத்தாள்.
மாலை 4 மணிக்கு ஸ்ரீதரன் உள்பட பலரும் வருவதாக செய்தி முன்பே தெரிந்திருந்ததால், நான்கு மணியை எதிர் பார்த்திருந்தார்கள். உண்மையில் உஷா தேவியின் அழகை வர்ணிக்கவே முடியாது. அத்புதமான வசீகரமும், தனித்த ஒரு கவர்ச்சியும் கொண்டு, ஜகஜ்ஜோதியாய் ப்ரகாசிப்பதைக் கண்டால், எத்தகைய இளம் வாலிபர்கள் மனமும் சற்று கலங்கத்தான் செய்யும் என்றால் மிகையாகாது. அதிலும், இன்று பரத்யேகமாய் செய்து கொண்டுள்ள செயற்கை யலங்காரத்தின் சிறப்பால், கந்தர்வ கன்னியோ, தேவ மாதோ, வன மோகினியோ என்ற ப்ரமிப்புடன்தான் காட்சியளித்தாள்.
கெடுவான் கேடு நினைப்பான்… காமாலைக்காரன் கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாகத்தான் தோன்றும்… குற்றமுள்ள நெஞ்சு குருகுரு என்னும்… சந்தேக நெஞ்சமும், சளி பிடித்த மூக்கும் சும்மா இருக்காது… என்பது போன்ற பழமொழிகள் சும்மா பிறக்குமா… கட்டை ப்ரம்மசாரியான தன் அண்ணன், உஷாதேவியைப் பார்த்தால், ஒரு வேளை, அவன் மனமும் மாறி, அவளிடம் ப்ரேமை கொண்டு விட்டால், என்ன செய்வது என்கிற ஒரு குறும்புத்தனமான எண்ணம் தாமோதரனின் கள்ள மனத்தில் தோன்றியதால், தானும் கூடவே, அவர்களுடன் போக வேண்டுமென்று தீர்மானித்துத் தன்னை ப்ரமாதமாய் அலங்கரித்துக் கொண்டு கிளம்பினான்.
முதலில் அவன் வருவதாக எண்ணாததால், மற்றவர்கள் கிளம்பிய போது, தானும் வருவதாகக் கூடவே, முந்திக் கொண்டதைக் கண்டு, அவனுடைய சகோதரிகள் இருவரும் நகைத்தார்கள். மகா விவேகியான ஸ்ரீதரனுக்கு
பக்கம் 80
இச்செய்கையின் உண்மை பளிச்சென்று மனத்தில் தோன்றி, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
குறித்த நேரத்திற்கு எல்லோரும் மங்களகரமான தாம்பூல சகிதம் கிளம்பினார்கள். உஷா தேவியின் பங்களாவின் முன்புறத்துத் தோட்டத்தின் அழகையும், அதை அலங்கரித்துள்ள அபூர்வ சிங்காரத்தையுங் கண்டு எல்லோரும் ப்ரமித்தார்கள்.
வண்டிகள் வந்து நின்ற உடனேயே உஷா தேவியே, தங்கப் பன்னீர்ச் சொம்பினால், பன்னீரைத் தெளித்துக் கொண்டே, “வர வேணும்! வர வேணும்” என்று தானே வரவேற்புக் கூறினாள். உஷாவின் தாயாரும் வெகு உத்ஸாகத்துடன், தடபுடல் அலங்காரவதியாய் வரவேற்றாள்.
தாமோதரனின் சகோதரிகளாகிய இந்திரா, சந்திரா இருவருக்கும் உள்ள சந்தோஷமும், வரவேற்பைக் கண்டதும் அபாரமான மதிப்பும் சொல்லத் திறமற்று விட்டது. வெகு அடக்கமும், மரியாதையும் உள்ள கமலவேணியம்மாளுக்கு இந்த ப்ரமாத வரவேற்பினால், எத்தகைய அதிசயமோ, ப்ரமிப்போ தோன்றவில்லை. டாக்டர் ஸ்ரீதரனுக்கு இந்த தடபுடல் அட்டகாஸங்களும், வரவேற்பும் ட்ராமாவைப் போல், நாட்டியத்தைப் போல் தோன்றியதேயன்றி, சாதாரண குடும்பத்திற்குள்ள கண்ணியமும், கம்பீரமும் காண்பதாகத் தோன்றவில்லை. பன்னீர் தெளிக்கும் பெண்தான் கல்யாணப் பெண் என்று ஒருவருக்கும் தெரியாதாகையால், அந்தப் பெண்ணின் செய்கைக்கு கமலவேணியும், ஸ்ரீதரனும் ‘சற்றும் அடக்கமற்ற அதீத முறையில் செல்லும் பெண் எவளோ ஒருத்தி’ என்று எண்ணினார்கள்.
இதற்குள், “ஹல்லோ தாமோதரன்”… என்று கை குலுக்கி, தாமோதரனை வரவேற்ற போது, எல்லோருக்கும் சந்தேகம் உண்டாகி, விழித்தார்கள். அதே சமயம் தாமோ
தரன்: அம்மா… அண்ணா… இவர்கள்தான் ஸ்ரீஉஷாதேவி; நான் தெரிவித்த நாரீமணி; நீங்கள் பார்க்க வந்துள்ள பெண்மணி.. என்று அடுக்கும் போது, உஷா, “நமஸ்காரம்… நமஸ்காரம்…” என்று எல்லோரையும் தானே வரவேற்று அழைத்துச் சென்றாள்.
கல்யாணப் பெண்ணே முதல் முதல் வரவேற்பது என்கிற அதீத நாகரீகத்தைக் கண்டதும், ஒவ்வொருவரும் உள்ளுக்குள் வியப்புற்று, ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
இது வரையில், எத்தனையோ படித்த மகா மேதைகள் வீட்டுக் கல்யாணங்களை எல்லாம் பார்த்திருக்கிறோம். அஸல் மேல் நாட்டவர்களைப் போன்ற பழுத்த நாகரீகப் பேர்வழிகளின் வீட்டுக் கல்யாணங்களையும் பார்த்திருக்கிறோம். கல்யாணமாகிய பிறகு, வரவேற்பு நடத்துகையில், தம்பதிகள் வழியிலேயே நின்று, கைகுலுக்கிப் பல்லிளித்து, கரங்குவித்துப் பலவிதமாகச் செய்வதைப் பார்த்திருக்கிறோமே யன்றி, இம்மாதிரி கல்யாணத்திற்காகப் பெண் பார்க்க வரும் போதே, கல்யாண பெண்ணே இப்படி வரவேற்புக் கூறுவதும், கைகுலுக்குவதும் அடேயப்பா! விபரீத நாகரீகமாயிருக்கிறதே! கல்யாண வயது வருவதற்கு முன்பே, பழய காலத்தில் விவாகத்தைச் செய்து விட்டதே, சகல அம்சங்களிலும் வெகு மேன்மையாயிருக்கிறது. வயது வந்த பிறகுதான் விவாகம் செய்ய வேண்டும் என்கிற கால தேச வர்த்தமானத்தை யொட்டி, சட்டம் வந்து விட்டது என்றாலும், அந்தந்த வயது திட்டத்தின்படியாவது, விவாகத்தைச் செய்தால்தான் பெண்களுக்கு சகல விதத்திலும் நன்மையேயன்றி, வீணாக வயதை வளர்த்தி, வேடிக்கைப் பார்க்கும் மிகக் கொடுமையான செய்கையினால், எத்தனை இடங்களில், எத்தனை பெண்களுடைய வாழ்க்கையே பாழாகி விடுகிறது. நிரபராதிகளான பெண்களாயினும், அனாவசியமான அபவாதத்திற்குக் கூட ஆளாகி, அதனால், வாழ்க்கையில் களங்கம் உண்டாகி விடுகிறது. இம்மாதிரி பெற்றோர்களே வைத்து வேடிக்கைப் பார்ப்பது, தீமையிலும் தீமையாம். கல்யாணம் செய்யாமல் வைத்துள்ள பெண்களை சரியான கட்டு திட்டங்களுடன் பெற்றோர்கள் சில இடங்களில் கண்காணிப்புடன் பார்க்காது விட்டு விடும் பரிதாபத்தினால், அப்பெண்களின் பெயருக்கு எத்தனை களங்கமும், அவமானமும் உண்டாகி விடுகின்றன. இப்படியொரு பெண்களைப் பழக்கி விட்டால், குடும்பத்தில் கண்ணியம் எப்படி உண்டாகும். பண்டய காலத்தின் பெண்மணிகளின் புகழும், ஒழுக்கமும் எப்படி இவர்களிடம் வரும்? இதென்னக் கூத்து!—என்று கமலவேணியம்மாள் தனக்குள் எண்ணமிட்டவாறு, தம்பித்துக் கம்பம் போல் நின்று விட்டாள்.
பெண்களும், இப்படியே ஆச்சரியத்தில் மூழ்கி நிற்பதை ஸ்ரீதரன் பார்த்தான். இந்த ப்ரக்ருதிகளை அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணி, இவர்களையும், அவர்களையும் மாறி மாறி பார்த்து, இரு திரத்தினர்களின் தராதரத்தை, மனத்திற்குள் எண்ணி வியந்தவாறு, உள்ளே அழைத்துச் சென்றான்.
அந்த வீட்டிலுள்ள அலங்காரங்களையும், தடபுடல்களையும், செய்துள்ள நூதன வேலைப்பாடுகளின் விசித்திரங்களையுங் கண்டு, மிக மிக ப்ரமிப்படைந்த எல்லோருடைய மனத்தின் ப்ரமை அடங்குவதற்கே சில நிமிஷங்களாகியது. சிட்டுக் குருவி போல், உஷாதேவி பாய்ந்து, பாய்ந்து டிப்பன், காப்பி, பழ வகைகள் முதலியவைகளைக் கொண்டு வைத்து உபசரிக்கும் அழகைக் கண்டு, தாமோதரன் தன்னை மறந்து பூரித்து ஆனந்தப் பதுமை போலாகி விட்டான் என்றால் மிகையாகாது.
உஷாவின் தாயாரும், இதே தடபுடலில் கலந்து கொண்டு உபசரிக்கிறாள். ஆனால் கமலவேணிக்கு ஏதோ கூச்சமும், ஒரு விதமான வெறுப்புந்தான் தோன்றியது. போயும், போயும் ஒரே ஆடம்பரத்தில் டம்பாச்சாரி அட்டகாஸத்தில் இறங்கி விட்டானே! இவனுக்கு நன்மை தீமை எப்படித் தெரியும்?— என்ற கவலையே உண்டாகித் தன் மகனையே பார்க்கிறாள். அந்தம்மாள் மட்டும் எதுவும் சாப்பிடவில்லை. அவர்களுடைய வாழ்க்கை வேறு விதமாக மாறி விட்ட பிறகு, அவள் வெளி நாட்டத்தையே அதிகமாய் வெறுத்து வந்தவள். உள் ரகஸியத்தைப் பிறர் அறிய மாட்டார்களாகையால், இந்தம்மாள் கலகலப்பற்ற மனுஷி, தனிப்பட்ட ப்ரக்ருதி, உம்முணா மூஞ்சி என்றெல்லாம் சொல்பவர்களும் உண்டு. அதே போலத்தான், உஷாவின் தாயாரும், உஷாவும் நினைத்து முகத்தைச் சுளித்தார்கள்.
கல்யாணம் ஆகி விட்ட பிறகு, மாமியாரைப் பற்றிக் கவலை ஏது? அவள் கிள்ளுக் கீரைக்குச் சமம்தானே! அது மட்டுமா! சம்பளம் இல்லாத வேலைக்காரிக்குச் சமமாயிருக்கும்படி நடத்தும் அக்ரமத்தையும், உலகில் பார்க்கவில்லையா! பெத்து வளர்த்து, ஆயிரம் பாடும் பட்டு, சகல கஷ்டங்களையும் தாண்டிப் பின், மகனுக்கு விவாகத்தைச் செய்து வைத்து, நல்ல நிலையில் வாழ்க்கை நடத்துவதற்கு ஆசை கொண்டு, சாதக பக்ஷி போல், பெற்றோர் பார்த்திருக்கும் போது, ஒரு பொட்டு தண்ணியில்லாத பாலைவன வாழ்க்கையை உண்டாக்கப் பல குடும்பங்களில் மருமகளே அதற்கு முக்ய தெய்வமாகி விடுகிறாள். இது உலகில் தினம் பல இடங்களிலும் பார்க்கும் அதிசயமாகும்.
கல்யாணமாகிய பிறகு, தாமோதரனே இங்கு தங்கி விடப் போகிறான். அவர்களைப் பற்றிக் கவலை ஏது; என்கிற முடிவு உஷாவின் தாயாரைத் தேற்றி ஆறுதலளித்தது. கமலவேணியம்மாளுக்கு, இந்த சம்மந்தத்தைப் பற்றிய எந்த விவரமும் தெரியாதாகையால், தன் மூத்த மகனே பேசட்டும் என்றிருந்தாள்.
ஸ்ரீதர:- உஷாதேவி ! உங்களைப் பற்றி, என் தம்பிக்குத்தான் ப்ரதான இஷ்டம் உண்டாக வேண்டுமேயன்றி, நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உங்கள் தகப்பனார் எங்கே… ஊரிலில்லையா…
உஷா:- அதைப் பற்றி மட்டும் கேட்காதிருந்தால், மிகவும் சந்தோஷமாக இருப்பேன். வேண்டுமானால், என் தாயாரிடம் தனித்துப் பேசலாம்… என்று கூறி தாயாரிடம் ஜாடை செய்தாள். ஸ்ரீதரன், கமலவேணி, உஷாவின் தாயார் மூவரும் தனி இடத்திலமர்ந்தார்கள்.
கமல:-உங்கள் கணவருக்கு ஏதாவது உத்யோகம் உண்டா அல்லது மிராசுதாரரோ!
சுந்தராம்பாள்:- அம்மணீ! இக்கேள்விக்கு நான் பதில் சொல்ல மிகவும் வருத்தப்படுகிறேன். என் கணவரை நான் பரிபூர்ணமாக நம்பினேன். அவர் என்னைக் கை விட்டு விட்டார்.. டாக்டர் ஸ்ரீதரன் ஏழைப் பங்காளன், சமூக சீர்திருத்தவாதி என்று மருமகப் பிள்ளை அடிக்கடி சொல்வார்கள். இத்தகைய வீரர்களினால்தான், புத்தி கெட்ட ஆண் பிள்ளைகளின் துர்ப்புத்தி மாறி, நல்ல நிலைமை உண்டாக வேண்டும்… ஏதோ போதாக் காலக் கொடுமையினால் எங்கள் மூதாதைகள் தேவதாசி வகுப்பில் பிறந்து விட்டார்கள்…
என்றதைக் கேட்டதும், இருவரையும் தூக்கி வாரிப் போட்டது; தங்களைச் சமாளித்துக் கொண்டு, வெகு ப்ரயத்தனத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். சுந்தராம்பாள் மேலும் பேசத் தொடங்கினாள்.
என் கொள்ளுப்பாட்டி முதல் இந்த வம்சத்தில் பிறந்ததை எண்ணி, வெறுத்து குல மகளைப் போல், கல்யாணம் செய்து கொண்டே சந்ததி வ்ருத்தியானவர்கள். என பாட்டி, என் தாயார், நான், மூவரும் உயர்ந்த குல மகனையே மணந்து கொண்டு ஒழுங்காக இருப்பவர்கள். இதோ! புகைப்படங்கள் பாருங்கள் என்று உள்ளிருந்து ஒரு புகைப்பட ஆல்பத்தைக் கொண்டு காட்டினாள். என்ன ஆச்சரியம்! என்ன அதிர்ச்சியான சம்பவம்! இந்தம்மாளை மணந்துள்ள பேர்வழி வேறு யாருமில்லை. தன் பிதாவே சாக்ஷாத்தாக நிற்பதைக் கண்டு, ஸ்ரீதரன் மின்ஸாரம் தாக்கியது போல், தாக்கி தவிக்கிறான்.
கமலவேணிக்கோ, மூச்சே நின்று விடும் போலாகி விட்டது… ஐயோ! இவர் என் கணவராயிற்றே! அவருக்குள்ள பல லீலைகளில் இதுவும் ஒன்றா… என்று நினைக்கும் போதே, முன்பு வந்தது போன்று, அதிர்ச்சியினால் மயக்கமே உண்டாகி விட்டது. இதைக் கண்ட சுந்தராம்பாளுக்கு ஒன்றும் தெரியாமல் மிரண்டு போய், “என்ன விஷயம்! டாக்டர்? ஏன் அந்தம்மாளுக்கு இப்படியாகி விட்டது? நான் தேவதாசி என்பதனாலா…” என்று பதறியவாறு கேட்டாள்.
ஸ்ரீதர்:- தாயே! சற்று நிதானியுங்கள். என் தாய் அளவற்ற கஷ்டங்களை, வாழ்க்கையில் அனுபவிப்பதற்கே வரம் வாங்கிக் கொண்டு பிறந்துள்ளவர்கள்; இந்த இடத்தில், இத்தகைய சம்பவம் உண்டாகும் என்று நான் கனவில் கூட கருதவில்லை; அவர்களும் அப்படியே. தாங்கள் தேவதாசி என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இதோ! இந்த மனிதர் வேறு யாருமில்லை. எங்களுடைய தகப்பனாராகிய கொடிய மனிதனேயாகும்… என்றதைக் கேட்டு, தன்னை மீறிய அதிர்ச்சியினால், “என்ன! என்ன! இவர் உங்கள் பிதாவா! உஷா உங்கள் சகோதரியா!… உஷாவின் பிதாவா!… இந்த உத்தமியின் வாழ்க்கைச் சக்கரத்தை முறியடித்த பாவி நானா? டாக்டர் ! முதலில் நீங்கள் இந்தம்மாளை வீட்டிற்குக் கொண்டு போய் சிகிச்சை செய்யுங்கள். எனக்கும் இப்போது மயக்கம் வந்து விடும் போல் இருக்கிறது. தனக்கு விவாகமே ஆகவில்லை, லக்ஷாதிபதி, பெரிய உத்யோகஸ்தன்… அப்படி இப்படி என்று சொல்லி, ப்ரமாணம் செய்து, என்னை மணந்து நான்கே வருஷங்கள் என்னுடன் வாழ்க்கை நடத்திய பிறகு, மனிதனே மறைந்து விட்டார். எத்தனை ப்ரயத்தனப்பட்டும், அம்மனிதன் மறுபடியும் வராததால், என் குழந்தையின் க்ஷேமத்தைக் கோரி, நான் பெரிய பாடகியாகிக் கச்சேரிகள் செய்தும், சினிமாக்களில் நடித்தும், ஏராளமாய்ச் சம்பாதித்துக் கொண்டு, பெண்ணை மட்டும் படிக்க வைத்து, வ்ருத்திக்குக் கொண்டு வந்தேன். நாங்கள் சமீப காலத்தில்தான், இந்த ஊருக்கு வந்தோம். இந்தப் பாவியை நான் மணந்தது குருநகர் என்ற ஊரிலாகும். பிறகு, சில வருஷத்தில் ஏதோ கொலை கேஸில் அகப்பட்டு தண்டனையடைந்து விட்டதாகக் கேள்விப்பட்டு, அதோடு அம்மனிதனையே மறந்து விட்டேன். நாளை வரையில், குழந்தை உஷாவுக்கு இந்த விஷயங்கள் தெரியாது. நான் சொல்லவில்லை. அண்ணனை தங்கை மணப்பது என்கிற அக்ரமத்திலும் நாங்கள் சிக்கி உழல வேண்டாம். நீங்கள் குழந்தையிடம் ஒன்றுமே சொல்ல வேண்டாம்…
ஸ்ரீதர:- தாயே! இத்தனை அன்பு செலுத்தியுள்ளவர்களின் வாழ்க்கைப் பிணைப்பு அறுபட்டுத் தேறுவதற்கு முக்யமான விஷயங்களைச் சொல்லா விட்டால், என் தம்பி தேற மாட்டான். உங்கள் மகளும் தேற மாட்டார்கள். ஏதோ! கண்மூடித்தனமாய் விவாகத்தைப் பலரறியச் செய்யும் சமயம், இந்த வெட்கக்கேட்டை பலர் முன்பு வெளியாக்காமல், பகவான் இப்போது தெரிவித்து நம்மைக் காப்பாற்றினாரே! இதுவே போதும். இத்தகைய நிலையை நமக்கு பகவான் காட்டாதிருந்தால், நம் கதி என்னவாகும்! நீங்கள் பயப்பட வேண்டாம்.
என்று டாக்டர் சொல்லும் போது, சுந்தராம்பாள் மிகவும் கண்ணீர் பெருக டாக்டரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு, அவர்களை முதலில் எழுந்து போய் விடும்படி வேண்டிக் கொண்டாள். கமலவேணியம்மாளின் நிலைமையை உத்தேசித்து, டாக்டர் தன் சகோதரிகளுடன் வீட்டிற்குச் சென்று விட்டதைக் கண்ட தாமோதரனுக்கு, மகத்தான கோபம் வந்து விட்டது. தன்னை வேண்டுமென்று ஏமாற்றி விட்டுச் சென்றிருப்பதாக ஒரு ஆவேசம் உண்டாகியதால்…, “உஷா! நீ வருந்தாதே! நான் வீட்டிற்குப் போய் என்ன விஷயம் என்று கண்டு கொண்டு வருகிறேன். இந்த விஷயத்தில் நான் சும்மா இருக்கப் போவதில்லை” என்று கூறிக் கொண்டே, மிகவும் ஆத்திரத்துடன் எழுந்து சென்றான். உஷா தேவிக்கு இது காறும் இருந்த சந்தோஷம், திடீரென்று மாறிப் போய், அவளுக்கு ஒன்றுமே புரியாத ரகஸியமாய் பூகம்ப அதிர்ச்சி போல் தோன்றி வாட்டத் தொடங்கியது.