உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 23

விக்கிமூலம் இலிருந்து

23

சிறைச் சாலையையே தவச்சாலையாக எண்ணிப் பூரிக்கும் மனிதர்கள் ஆயிரத்தில் ஒருவர் கூட கிடைக்க மாட்டார்கள். அத்தகையவர்களைப் பார்க்கும் எத்தகையோருக்கும் அளப்பரிய ஆச்சரியமும், கரை காணாத வியப்பும் உண்டாகித் திகைப்பது சகஜந்தானே. டாக்டர் ஸ்ரீதரன், கைதி என்கிற பெயருடன் சிறையிலிருக்கிறானேயன்றி, அவனுடைய முகத்தில் காணும் சந்தோஷமும், சாந்தியும் மற்றப்படி வெற்று மனிதர்களிடம் காண்பதே அரிதாகி விடுகிறது. என்ன அதிசய உள்ளம் படைத்த மனி தன் என்று ஜெயிலில் உள்ள கைதிகள் உள்பட வேலைக்காரர்களும், சகலமான உத்யோகஸ்தர்களும் மூக்கின் மீது விரலைத்தான் வைத்தார்கள்.

ஸ்ரீதரனைப் பற்றிய சகல விதமான புகழையும், அவனுடைய சகாக்களும், இன்னும் இதரர்களும் சரமாரியாய் பத்திரிகைகளிலும், கடித மூலமாயும் எழுதித் தெரியப் படுத்தியிருப்பதால், ஜெயிலில் உள்ள எல்லா உத்யோகஸ்தர்களுக்குமே ,அவனிடம் அனுதாபமும், ஒரு வித மதிப்புந்தான் உண்டாகியது.

ஏற்கெனவே, தண்டனை அனுபவிக்கும் கைதிகள் மட்டும் இவனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையால், தங்கள் தங்கள் வேலைகளைச் செய்யும் போது, எப்படியோ தெரியாமல் வந்து, கண்காட்சியில் பொருளையோ, ம்ருகத்தையோ பார்ப்பது போல், பார்த்து விட்டு சிலர் பேசாமல் போய் விட்டார்கள். சிலரோ… அடேயப்பா! இத்தினி பெரிய டாக்டராயிருந்து கொலெ கூடவா பண்ணிப்புட்டான்!… ஏய், அப்பேன்! .நாங்கல்லாந்தான் படிக்காத முட்டாளுங்க. பொயக்கத் தெரியாத கட்டெங்களா, காலத்தெ ஒயிச்சிப் புட்டோம். அதினாலே, திருடியும்… கொலெ செஞ்சும், இப்படி அவதிபட்றோம். நீ கூடவா, படிச்சவன், இந்த மாதிரி வந்துட்டெ… என்று துடுக்காகக் கேட்டு வைப்பார்கள். அவர்களிலேயே இன்னொருவன்… “டேய்! நாம்ப படிக்காத முட்டாளு; அவரு படித்த முட்டாளு! அவ்வளவுதானேடா?” … என்று எளனமாய்ச் சொல்வான்.

இதை விட துடுக்கான இன்னொரு அஸல் கொலைகாரன்… “அட!… இவரு டாக்கட்டருன்ன மொறெலெ தண்டனே இல்லாமே எத்தினியோ கொலை பண்ணியிருப்பாரு! அந்தக் கைப்பழக்கம் இப்படி ஒன்னு சாம்பலு (ஸாம்பில்) பாத்துட்டாரு…” என்று மிகவும் அலட்சியமாய்ச் சொல்லும் போது, இந்தக் கைதிகளை மேய்க்கும் மேஸ்த்ரியும், ஹெட்வார்டரும் இதைக் கேட்டுக் கொண்டே வந்து, தங்கள் கையிலுள்ள தடியினால் அவர்களை நன்றாக அடித்தார்கள்.

இதைக் கண்ட ஸ்ரீதரன் பரிதாபத்துடன், “அப்பா! வார்டர்! அடிக்காதே! அவர்கள் சொல்வதில் குற்றமென்னப்பா? உலகத்தில் பெரும்பாலான மனிதர்களின் போக்கும், எண்ணமும், அறிவு வளர்ச்சியும் இவ்வளவுதானேப்பா! இது தெரியாமல் ஏன் அடிக்கிறாய்? அவர்களைப் போன்ற—அவர்களுக்குச் சமமான—ஒரு கைதியாகவே, தற்சமயம் நான் அவர்களுடைய கண்களுக்குக் காணப்படுவதால், அப்படித்தானே சொல்வார்கள். பாவம்! அறிவிலிகளை அடிக்காதேப்பா” என்று பரிந்தும், பரிதாபகரமாயும் சொல்வதைக் கேட்ட கைதிகளே ஒரு மாதிரியாய் ஆய் விட்டார்கள். வார்டரை ஏமாற்றி விட்டு வந்த குற்றத்துடன், இப்படி அவமரியாதையாய்ப் பேசிய குற்றம் ஆகிய இரண்டுக்கும் தண்டனையைச் சட்டப்படி விதிக்கப்பட வேண்டியதை அதிகாரத்துடன் அதட்டிக் கூறியபடி, அவர்களைத் தள்ளிக் கொண்டு போவதைக் கண்ட ஸ்ரீதரன் இதயத்தில், அது சுருக்கென்று பொத்தியது.

அவன் நயமான குரலில் ஹெட்வார்டரைக் கூப்பிட்டு, “ஐயா! உங்களை நான் மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். என் தலைவிதியின் நிழல், அந்த அபாக்யப் பிண்டங்களின் மீது பாய வேண்டாம். என்னைச் சொல்லியதற்கு, நானல்லவா கோபிக்க வேண்டும். எனக்கு அவர்கள் சொல்லியதிலிருந்து, ஒரு அதிசயமான உலகானுபவமும், பாடமும் கற்பித்தது போன்ற சந்தோஷமே உண்டாகியது. அதனால், நான் பரம் சந்தோஷத்தை அடைகிறேன். நீங்கள் தயவு செய்து, அவர்களை ஒரு வித தண்டனைக்கும் உள்ளாக்காதபடி. காப்பாற்ற வேண்டும். இதை மேல் அதிகாரிகளுக்குச் சொல்லாமல், எனக்காக மன்னித்து, இதோடு விட்டு விட வேணும்” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

இத்தகைய அபூர்வமான மனிதனை இது வரையில் பார்த்திராததால், வார்டருக்கும், அந்த கைதிகளுக்கும் ஆச்சரியமாகி விட்டது. அவர்களில் சிலர், தாங்கள் இளப்பமாகப் பேசி விட்டதை எண்ணி வருந்தினார்கள். வார்டர் மட்டும் ஒரு விழி விழித்துப் பார்த்து விட்டு, அவனுக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தை இழக்க மனமின்றிச் சென்றான். சின்ன வேலையாயிருப்பினும், பெரிய வேலையாயிருப்பினும், அவரவர்களின் அதிகாரத்தையும், கீழே உள்ளவர்களை மிரட்டும் அட்டகாஸத்தையும், ஒருவருமே விடுவதில்லை. இதுதான் உலகத்து மக்களின் பிறவிக் குணம் போலிருக்கிறது இத்தகைய மனோபாவம் நிறைந்திருக்கும் இடத்தில்—இதயத்தில்—அன்பு என்பது எங்கிருந்து உண்டாகும்? எஜமானன் என்ற பட்டம் வந்து விட்டாலே, தன்னை நம்பியுள்ள வேலைக்காரர்களை, அடிமை போல் நடத்துவதுதான் அவர்களுடைய கடமை என்று நினைத்து விடுகிறார்கள்.

கணவன் என்கிற பதவி வந்தவுடனே, மனைவியை அடிமைப்படுத்தி நடத்தவே தாம் பிறந்திருப்பதாகச் சில மூடர்கள்… ஏன்? …பல மூடர்கள்… நினைத்து நடத்துவதால், எத்தனை பெண்கள் இதே ஏக்கத்தில் நோயாளியாகி விடுவதை, என் அனுபவத்திலேயே பார்த்து வருகிறேன்! இதே போல், தான் மாமியாராக ஆய் விட்டால், கேட்கவே வேண்டாம்! சிம்மாசனத்தில் அமர்ந்து செங்கோல் செலுத்தும் மகாராணி, தான்தான் என்கிற அகம்பாவத்துடன் மருமகளை நடத்தும் புண்யவதிகளின் சரித்திரமோ சொல்ல சாத்யமில்லை! சரி!… இனி இப்படியே பார்த்துக் கொண்டு போனால், ஆயிரக்கணக்கான விசித்திரங்கள் கிடைக்கும்… அடாடா! என்ன ஆச்சரியமான உலகம்!… என்று ஸ்ரீதரன் தனக்குத் தானே நினைத்துக் கொண்டு, வியப்பே வடிவாய் நின்றிருந்தான்.

அதே சமயம், வெளிப்புறத்தில் கைதிகள் எல்லோரும் கட்டை வெட்டும் இடத்தில், ஒரே கூச்சலும், பரபரப்பும், அலறலுமான சத்தமும் கேட்டு வார்டர்கள் ஓடினார்கள். “என்னமோ தெரியவில்லையே! இந்தக் கைதிகளை, அந்த வெட்ட வெளியிடத்தில் கொண்டு போய், (பனிஷ்மெண்ட்) தண்டனை கொடுக்கிறார்களா, என்ன? அதைக் கண்டு, மற்ற கைதிகள் இத்தகைய கூக்குரலிடுகிறார்களா? ஒன்றும் தெரியவில்லையே! ஐயோ பாவமே! அம்மாதிரி கைதிகளை அடிப்பதாயிருந்தால், அந்த பாதகத்திற்குக் காரணம் நானல்லவா? கடவுளே! என் புத்தி தெரிந்த நாளாக, நான் ஒருவிதமான குற்றமும் செய்தறிய மாட்டேனே; அங்ஙனமிருக்க, என்னை முன் வைத்து, அந்த நிரபராதிகளுக்கு இத்தகைய கொடிய தண்டனை கொடுக்கலாமா? அவர்கள் உள்ளம் என்னையல்லவா சாபமிடும்; எப்போதும், என் உள்ளத்திலேயே நீ வீற்றிருக்கிறாயே! இந்த பாதகத்தை நீயும் கண்டு சகிக்கலாமா?… என் உள்ளம் இப்போது துடிக்கும் துடிப்பில், நான் ஒரு பறவையைப் போல் சிறகுள்ளவனாய்ப் பறந்து சென்று, அந்த அதிகார தேவதைகளான வார்டரின் காலில் விழுந்து, மன்னிப்புக் கோருவேனே! என்ன செய்வேன்?…

இந்த சமயந்தான் என்னுள்ளத்தில், இன்னொரு தத்துவம் நன்றாகப் புலப்படுகிறது. மனிதன் செய்யும் அக்ரமங்களை—பாவங்களை—சகிக்காமல், ஆத்மா இப்படித்தானே துடிக்கும்! வெளியே செல்ல வழி தெரியாமல், அவஸ்தைப்படும்!…” என்று தனக்குள் பலமாக எண்ணியபடியே, அசைவற்று நின்றிருந்தான். மனமோ ‘பத பத’வென்று துடிக்கிறது. யாரையாவது கூப்பிட்டு விசாரித்தறியலா மென்றாலோ, யாரையும் காணவில்லை. ஏங்கி, எதிர்பார்த்து நிற்கையில், ஒரு வார்டர் சற்று தூரத்தில் போவது தெரிந்து, “ஐயா!… ஐயா!… தயவு செய்து, இப்படி வாருங்கள்; ஒரே நிமிஷம்!” என்று கத்தினான்.

அவன் திரும்பிப் பார்க்காமலே, போய் விட்டான். “உம்!”… என்று ஒரு பெருமூச்சுடன், மறுபடியும் வழியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். இதே வார்டுக்குக் காவலிருக்கும் வார்டர் வருவதைக் கண்டு, வெகு ஆவலுடன் பதறியவாறு, “ஐயா! இப்படி வாங்களேன்; அங்கு என்ன அத்தனை கலாட்டா? இங்கு வந்த கைதிகளைத் தண்டனை செய் து வருத்துகிறார்களா? சற்று சொல்லப்பா?” என்று மனந் தவித்தவாறு கேட்டான்.

வார்:-ஓகோ ! நீங்க இப்படி நெனச்சுக்கிட்டு கேக்கிறீங்களா! தண்டனெ கிண்டனெ அல்லாம் இப்பிடி இந்த எடத்துலே நடக்காது. அங்கே கைதிங்க கட்டெ வெட்றப்போ, ஒருத்தன் கோடாலி தவறி, கால்லெ பட்டுடுச்சு; ரத்தமா ஊத்தி, ஆளு உயிந்துபூட்டான்! அதனாலே, அல்லாருமா சேர்ந்து கூப்பாடு போட்டாங்க; அதான் விசயம்; வேறொன்னுமில்லே” என்று சர்வ சாதாரணமாய், அலட்சியமாய்ச் சொன்னான்.

இதைக் கேட்ட ஸ்ரீதரன், “அப்படியா விஷயம்! ஐயோ பாவம்! எந்த மனிதன் காலில் பட்டதோ? ஏம்பா! ஒடனே, இப்படிப்பட்டவங்களே பாத்து, நல்லா வயித்தியம் செய்வாங்களா? அவனுக்கு அதிகமாக ரத்தம் கொட்டி, உயிர் போய் விட்டால் என்ன செய்வது?…

என்று முடிப்பதற்குள், அந்த வார்டர் மிகவும் இளப்பமாய் நகைத்துக் கொண்டே, “இந்தக் கொலைகாரப் பாவிங்கல்லாம் செத்துட்டாக்கா, ஊரே இருண்டு பூடும்! நாடெல்லாம் எலும்பா பூடுங்களா? அவதிப்பட்டு சாவுற சனியன் ஒன்னு தொலைஞ்சு போவுது! இவ்வளவுதானேங்க! நீங்க கேக்கறபடி வயித்தியம் செய்வாங்க; செய்யாமே இருக்க மாட்டாங்க. கைதியானா கூட… கொலைகாரக் கைதியானா கூட… விதியேன்னு பாக்கரத்தெ, பாத்துத்தான் உடுவாங்க. ஜெயிலாச்சே, கைதியை கவனிப்பாங்களான்னு நெனச்சிங்களா?…” என்ற போது, ஒரு கைதி ஓடி வந்து, “அந்த மனுசனுக்கு உசிரு வருமா? பூடுமான்னு இருக்குதுங்க! டாக்குட்டரு எங்கேயோ வெளி ஊருக்குப் போய் விட்டாராம்; நாளைக்குத்தான் வருவாராம். ஆஸ்பத்திரிலே இருக்கற நர்ஸ் இன்னமோ கட்டு கட்டிச்சு; ரத்தம் பீறிகிணு வருதுங்களாம்; நல்ல ஆத்துமா! கடைசி வரைக்கும் கயிஷ்டப்படாமே இப்பவே போயிட்றான்!…” என்று அங்கலாய்த்தான்.

இதைக் கேட்ட ஸ்ரீதரனுக்கு மனது துடிக்கிறது. தனக்கு உத்தரவு கொடுத்தால், அந்த ஆபத்தான நிலையிலுள்ள அனாதைக்கு, உதவி செய்யலாமே; அநியாயமாய் ஒரு உயிர் போய் விடப் போகிறதே…என்று தவித்தவாறு,… “ஏம்பா! வார்டர் ! இதோ பாரு; தயவு செய்து, ஜெயிலரை சற்று அழைத்துக் கொண்டு வா! அவருடன் கூடவே, நான் இருந்து இந்த அபாக்யப் பிண்டத்திற்கு வயித்திய சிகிச்சை செய்து விட்டு, உடனே இங்கு கொண்டு விடும்படிச் சொல்லி ,நானே வந்து விடுகிறேன்… சற்றுப் போயேன்… சொல்லித்தான் பாரேன்…” என்று கெஞ்சிக் கேட்டான்.

இதைக் கேட்ட வார்டரும், கைதியும் கடகடவென்று சிரித்தார்கள். ஸ்ரீதரன் சற்று அச்சத்துடன், “ஏம்பா இப்படிச் சிரிக்கிறீர்கள்? அவனும் கொலைகாரக் கைதி, நானும் கொலைக் குற்றக் கைதி; இருவரும் ஒரே திராசு

பக்கம் 168

நிறைதானே! அவன் செத்தால் முழுகி விட்டதா என்று சொன்னோமே; அதைப் போலத்தானே இவனும்; இதை உணராது, வைத்யம் செய்வதாகக் கூறுகிறான். மடையன்!… என்றுதானே எண்ணிச் சிரிக்கிறீர்கள்” என்று கேட்டதும், வார்டர் சற்று திடுக்கிட்டு நின்றான். “நான் அப்படி நெனச்சு சொல்லலீங்க; கைதியாயிருக்கறப்போ, ஒங்களே வைத்யம் செய்ய உடமாட்டாங்க. அப்படி இருக்கச்சே, நீங்க கேக்கறீங்களேன்னு நெனச்சேன்… சிரிப்பு வந்திடுச்சுங்க” என்றான்.

அதே சமயம், ஹெட்வார்டர் அவசரமாக வந்து, “ஜெயிலர் உங்களைக் கூப்பிடுகிறார்கள்; வாருங்கள்'” என்ற போது, ஸ்ரீதரனுக்கு விவரிக்க இயலாத யோசனைகளே உண்டாகி விட்டன… ‘ஏதோ பெரிய விஷயம் இருப்பதனால்தான், திடீரென்று கூப்பிடுகிறார்கள். அம்மாவுக்கு… தம்பிக்கு… ஏதாவது ஆபத்து வந்து விட்டதா? அன்றி, அனாதை நிலயத்திற்கோ, தர்ம வைத்ய சாலைக்கோ ஏதாவது வந்து விட்டதா?…’ என்ற பெரிய சந்தேகமும், பயமும் தோன்றி வதைக்கிறது… எத்தனை சொல்லியும் கேட்காமல், மேலே அப்பீல் செய்து விட்டுத் தம்பிதான் வந்திருக்கிறானோ?… என்று பல பலவிதமாக எண்ணியபடியே சென்றான். அவன் உள்ளத்தில் மட்டும் அவன் தாயாருக்குத்தான் ஏதோ ஆபத்தான நிலைமை வந்து விட்டது என்று சொல்லப் போகிறார்களோ… என்ற புதிய அதிர்ச்சியான கவலை பாதித்தது. Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".