உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகாயமும் பூமியுமாய்/வீட்டுக் கணக்கும்… ஆகாயக் கணக்கும்…

விக்கிமூலம் இலிருந்து

வீட்டுக் கணக்கும்…
ஆகாயக் கணக்கும்…

"நானும் ரெண்டு நாளாய் பார்க்கேன். நீங்க சாமி கும்பிடலியே! ஆபிஸ்ல ஏதும் பிரச்சினையா ஒருவேள ஒங்க சாமிகளாலகூட தீர்க்க முடியாத விவகாரமா?"

படுக்கையறையில் இருந்து எழுந்ததும் முகம் கூட கழுவாமல், நேராய் சாமியறைக்குப் போய் ஒரு சல்யூட் அடிப்பவர், குளித்து முடித்ததும் அதே அறைக்குள்போய், பக்தியின் உச்சாணியில் நின்று, சாமி கும்பிடுகிறவர். அப்படிப்பட்டக் கணவன், அந்த அறையைத் திரும்பிப் பாராமல் இருப்பதில், கோலவடிவுக்கு ஆச்சரியமேயன்றி பயமல்ல. இன்னும் சொல்லப்போனால், ஒரு வகையில் மகிழ்ச்சி. ஒருநாளில் தொண்ணுற்று ஒன்பது சதவீதமாவது, சையால் தன்னிடம் தோழமையுடன் பழகுகிறவர். இந்த சாமியறையில் இருந்து வெளிப்படும் வரைக்கும், அவளிடம் சிடுசிடுப்பாய் இருக்கிறவர். கடந்த இரண்டு நாட்களாக, தோழமைப் பாசம் நூறு சதவிகிதமானது. இரண்டு நாள் நிறைவாக இருந்தவளுக்கு, இன்று லேசான அச்சவுணர்வு. சாமிகளை விட்டு விட்டதற்காக அல்ல, விடுவதற்கான காரணம்? இயல்பிலேயே நேர்மையாகவும், வெளிப் படையாகவும் உள்ள அவருக்கு, அலுவலக விவகாரம், விகாரப்பட்டிருக்குமோ என்ற அச்சம். அதற்கு ஏற்றாற் போல், மோவாயை நீட்டி வைக்கிறார். தனக்குத்தானே ஏதோ பேசிக் கொள்கிறார். 'நான் கேட்கேமில்ல? ஆபீஸ் பிரச்னையை என் கிட்டே சொன்னால் நானும் ஒரு யோசனை சொல்வேனே. சொல்லி இருக்கேனே."

பொன்னம்பலம், மனைவியின் கண்களை நேருக்கு நேராய் பார்த்தார். பின்னர் அந்த நேர்பார்வையை, அவளின் பாதாதி கேசம் முதல், செங்குத்தாயும் குறுக்கும் நெடுக்குமாயும் படரவிட்டார். ஒருகாலத்தில், அத்தனை சாமுத்திரிகா லட்சணங்களையும் கொண்டவளாய், கண்களை ஏற்ற இறக்கமாய் நிலைநாட்டி, தன்னை கிறக்கமாய் பார்த்து, கிறக்கடித்தவள். வாலைப் பருவத்தின் வாளிப்புடன், அவளது பல்லொளி, இவரது கண்களை கூச வைக்கும். அந்தக் கூச்சத்தில், அவர் தனது கண்களைத் தாழச் செய்யும்போது, அவள் மாராப்பை சரிப்படுத்தி, ஒரு அதட்டுப் போட்டு அவரைச் சரிப்படுத்துவாள். எப்படியெல்லாமோ, அந்த உருவத்தை ஆராதிக்கிறார். ஆனால் அந்த உருவமல்ல, இந்த உருவம். கிழடுதட்டி குடை சாயப் போகும் வண்டி அன்று ஒயிலாகத் தெரிந்த நடையழகு, இன்று நொண்டியடிப்பாய் தெரிகிறது. ஒடுங்கிப்போய் பனங்கொட்டையாய் மெலிந்து போனது. கண்கள், முத்தெடுத்த சிப்பிகளாய், அந்த முயற்சியில் உடை பட்டவைகளாய் தோன்றுகின்றன. ஆனாலும் அவள் மீது கொண்ட காதல் தேய்மானம் ஆகவில்லை. அந்த உருவத்தை ஆராதிப்பது போய், அவளின் உள்ளொளி, அவருக்கு கண்ணொளியாகிறது. உருவ ரசனை, அருவ ஆராதனையாகி விட்டது.

பொன்னம்பலத்திற்கு சிறிது சிறிதாய் தெளிவு ஏற்பட்டது. இல்லறத்தின் இன்றியமையா, உருவ வழிபாடு, அருவ ஆராதனையானது போல்தான் அவரது இறை வழிபாடும். இது பக்தியின் பரிணாம வளர்ச்சி சந்தேகமில்லை.

"ஒங்களத்தான். ஏதாவது பேசுங்களேன். ஒங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லன்னாவது சொல்லுங்களேன். ஏன் அப்படி புதுசா பார்க்கது மாதிரி பார்க்கிங்க?"

பொன்னம்பலம், அவளை புதுசாத்தான் பார்த்தார். அவளை முப்பதாண்டுகளுக்கு மேல் கண்டவருக்கு, இப்போது அவளுள் ஒன்றைக் கண்டுபிடித்த தோரணை. அவள், ஒரு கோளறு பதிகமாகவே தோன்றினாள். அவளை விளக்கமாய் பார்த்துப் பார்த்து, தன்னுள்ளும் விளங்க வைத்தார். அவள் முகம் நோக்கி, அந்த முகம் வழியாய் பிடறியை ஊடுருவி, அந்தப் பிடறிக்குப் பின்னால், கடந்த கால நிகழ்ச்சிகளை கொண்டு வந்தார்.

செந்துர்க் கடல் தோன்றுகிறது. அப்போது அந்த கடல் அவருக்கு முருகனை ஆராதிக்கும் விஞ்சைக் கடலாய் தோன்றியது. இப்போது வெறுங்கடலாய் காட்சி தருகிறது. முருகன் சிலையைக் கும்பிட முன்வாங்கிய அலைகள், இப்போது அப்படிக் கும்பிட மனமில்லாமல், பின் வாங்குகின்றன. அன்றைய சூரசம்கார கடல்வெளி, மணல் பரப்பாகிறது. தேரிகள் திட்டுகளாகின்றன. முந்தாநாள் வரை, மனைவி மீது எரிச்சலூட்டிய அந்த கடலும் கடலோரமுமான பழைய நிகழ்ச்சிகள், ஞானசாகரத்தின் வெளிப்பாடுகளாகின்றன. அந்த வெளிப்பாடுகளில் அவர் மனம், கால் நிமிடம் பின் சென்று, உடனடியாய் நிகழ்ச்சிகளின் சாம்பலான நினைவுகளாகின்றன.

இந்தப் பொன்னம்பலத்தையும், அப்போதையை புதுமனைவியான இந்தக் கோலவடிவையும், அவள் பாட்டி, முடிச்சு போட்டு ஒன்றாக்குகிறாள். இவரது இடுப்பு மடிவேட்டித் துணியும், அவளது மாராப்பு முனையும், முடிச்சு வட்டமாகின்றன. கடலுக்குள் போகத் தயங்கும் இவளை, பாட்டிதான் கணவன் பக்கமாய் ஒரு தள்ளலும், கடலின் பக்கமாய் இன்னொரு தள்ளலுமாய் வேகப்படுத்தி ஏவிவிட்டாள். ஒரே கூட்டமயம். ஒவ்வொருத்தரும் தத்தம் இயல்புக்கு ஏற்ப, கடல் முனைப் பரப்பில் நடமாடுகிறார்கள். அலைகளை மிதித்து நடப்பவர்கள், மிதிக்காமல் தாவுகிறவர்கள், அலை மறித்து நிற்பவர்கள், முங்கி எடுக்கிறவர்கள், நிலத்தில் எப்படியோ அந்தக் கடல்பரப்பில் அத்தனைப் பெண்களும் அச்ச, மட, நாணத்தோடு அல்லாடுகிறார்கள்.

இந்தப் பொன்னம்பலத்திற்கு, வைகுண்ட சாமிக்குப்போல் தோன்றிய விஞ்சைக் கடல், கோல வடிவிற்கு, தேனிலவுக் கடலாய் காட்சியளிக்கிறது. கணவனின் இடுப்பைக் கிள்ளுகிறாள். முதுகில் குத்துகிறாள். விலாவில் இடிக்கிறாள். பொன்னம்பலம் அதிர்ந்து போகிறார். முருகனைப் பற்றிய நினைவு வரவேண்டிய சமயத்தில், அந்த நினைப்பை வருவிக்கிறாளே' என்று மனைவியை கோபமாய் பார்க்கிறார். அந்தக் கோபம், தாபமானபோது, முருகா முருகா என்று கன்னத்தில் தப்பளம் போடுகிறார். அவள் முந்தானைக்குள் சிக்கிய வேட்டிச் சொருகை நீட்டிக் கொள்கிறார். குடும்பப் பாங்கான பெண்போல், விலகி நடக்கிறார்.

குளித்து கோவில் பக்கம் போனபோது, பாட்டி, தட்டுப் பழத்தை நீட்டுகிறாள். உடனே இந்தக் கோலவடிவு, எங்களுக்கும் சேர்த்து நீ கும்பிட்டு வா பாட்டி, நாங்க இங்கேயே பாராக்கு பார்க்கோம்னி என்று பாட்டியை, முருகன் கோவிலின் வெளிப்பிரகாரத்தின் முதல் படியில் இறக்குகிறாள். பாட்டியைவிட, பொன்னம்பலமே ஆழமாய் திடுக்கிடுகிறார். ஒனக்கு கோயில் குளத்துல நம்பிக்கை இல்லையா?" என்று பிரமை தட்டிக் கேட்கிறார். இவள், ஆமாம் என்பதற்கு முகத்தை அபிநயமாக்கிவிட்டு, ஏதோ ஒரு சக்தி இருக்கலாம். ஆனால் இப்படி வேலும் மயிலுமாய் ரெண்டு பொண்டாட்டிகளோட ஒரு கடவுள் இருக்க முடியாது. இருக்கவும் கூடாதுணி என்கிறாள். முடியாது என்றபோது முகத்தை இறுக்குகிறாள். குலதெய்வமான உதிரமாடன் கோவிலில் பூக்காட்டிப் பார்த்தபிறகே திருமணத்திற்கு இணங்கிய பெற்றோரின் பிள்ளையான புது மாப்பிள்ளை, பேத்தியைத் திட்டிவிடக் கூடாதே என்பதற்காக, பாட்டிதான், கோலவடிவின் காதைத் திருகிய படியே திட்டித் திட்டிக் கத்தினாள். பேர மாப்பிள்ளையைப் பார்த்து, "எல்லா விஷயத்துலயும் கெட்டிக்காரி. ஆனால் இந்த கோவில் சங்கதில மட்டும் இவள் கூறு கெட்ட கூவை. சின்ன வயசுல இருந்தே இவளுக்கு சாமிங்கன்னா வேப்பங்காய். போகப் போக இவள சரியாக்கிடலாம்” என்று மன்றாடாத குறையாய், மாப்பிள்ளை முறுக்கை மனதில் கொண்டு, விண்ணப்பித்தாள். அப்போதும் கோலவடிவு விடவில்லை! “திருத்தணுமுன்னு வந்தால் நான்தான் திருத்தணும். இவர்தான் திருந்தணும்" என்றாள்.

என்றாலும் பாட்டியின் வற்புறுத்தலில் இவள், பொன்னம்பலத்துடன் போனாள். கோவிலின் கருவறைக்கு முன்னால் பக்கவாட்டில் மனைவியுடன் நின்ற பொன்னம்பலம் வடிவேலனைக் கோபித்துக் கொண்டார். படித்த பெண். அதுவும் பெளதிகப் பட்டதாரி. பி.எஸ்.ஸி. பி.டி. பள்ளிக்கூடத்து ஆசிரியை. எல்லா ஆசிரியைகளையும் மாதிரி, கிணற்றுத் தவளையாகவும் இருப்பாள், கைநிறைய சம்பளமும் வாங்குவாள் என்று நம்ப வச்சு, கழுத்த அறுத்திட்டியேடா முருகா! இது எதுல போய் நிற்கப் போகுதோ? இதோட நிற்கட்டும் முருகா இதோட.

பொன்னம்பலம் முன் நிகழ்வுகளை உதறி விட்டு கோல வடிவு மீதான பார்வையை, அவள் வாய்ப் பக்கம் கொண்டு வந்தார். அந்த வாய் அன்று பேசிய வார்த்தைகளை, மனதிற்குள் இருந்து மூளைக்கு ஏற்றுமதியாக்குகிறார். 'திருத்தணும் முன்னு வந்தால் நான்தான் திருத்தணும். இவர்தான் திருந்தனும் இந்தப் பேச்சுக்கு முப்பது வயதாகிறது. புழு, பூச்சியாய் பரிணமிப்பதுபோல், இப்போது இதுவே தீர்க்க தரிசனமாகிவிட்டது.

பொன்னம்பலம் தன்னுள் ஏற்பட்ட மாற்றத்தை உள்வாங்கியபடியே அவளை மானசீகக் குருவாகப் பார்த்தார். சவ்வாது மலை அனுபவத்தை, அண்டகோடி நட்சத்திர சாட்சியாக விளக்கப் போனார். அதற்காக, அவளை மாணவத்தனமாக ஏறிட்டுப் பார்த்தார். இதற்குள் வாசல் மணியோசை... சிலிண்டர் பையன் மூக்கை நுழைத்தான். அந்தம்மா தலைவாசல் பக்கம் வந்தாள்.

தனித்து விடப்பட்ட பொன்னம்பலத்திடம் புதிய தெளிவு மனைவியின் நிதர்சன செயல்பாடுகளே, அவருக்கு போதி மரக் கிளைகளாயின. திட்டவட்டமான முடிவோடும், கம்பீரமாக சாமியறைக்குள் நுழைந்தார். ஒரு போராளியாய் எதிர்பார்வையை, எதிரிப் பார்வையாய் போட்டார். சின்னஞ் சிறிய அறை. மூன்றடி தூக்கியில் சுவரோடு இணைக்கப்பட்ட பளிங்குக்கல் செவ்வகத் தளம். நகைகள் லாக்கருக்குப் போனதால் வேலையற்றுப் போன நகைப் பெட்டி, கல் தளத்தின் சரிபாதியில் சுவரோரமாய் உள்ளது. அதில் வலது பக்கம் உடுப்பி கிருஷ்ணன், இடது பக்கம், வைணவப்படி ஆதிசேசனாய் கருதப்படும் சுப்பிரமணியர். நடுப்பக்கம் தர்மஸ்தலாலிங்கம், கர்நாடகத்தில் பணி புரியும்போது வாங்கியது. இவை மூன்றும் ஒன்றாய் சேர்ந்த படம். இடது பக்கத்துச் சுவரில் குழல்வாய் மொழியம்மன், குற்றால நாயகியை, குற்றாலத்திலேயே வாங்கினார். வலதுப்பக்கத்துச் சுவரில் அய்யப்பன், தளத்திற்கு மேலேயுள்ள சுவரில் முருகனும், பழனி முருகனும், தொங்கினார்கள். சுவர் முனைகளில் ஒன்றில் திருப்பதி ஏழுமலையான், மறு முனையில் சரஸ்வதி அம்மன், கருஞ்சிலையும் வீணையுமாய் தோன்றும் கலைவாணி, நகைப்பெட்டியின் ஒரு விளிம்பில் சின்னஞ்சிறு பிள்ளையார்பட்டி பிள்ளையார் படம். இன்னொரு விளிம்பில் எருமைத் தலையில் கால் பதித்த துர்காதேவி. நடுவில் சேவலை முன்னிறுத்திய இன்னொரு முருகப்படம்.

அந்தப் படங்களை கிண்டலும், கேலியுமாகத்தான், 'பொன்னம்பலம் பார்த்தார். அந்தப் படங்களின் புராணக் கதைகளை முகம் சுழித்து நினைவுபடுத்தினார். ஏவுகணைக் காலத்தில் வேல்பிடித்த முருகனா. அணுவாயுத காலத்தில் திரிசூல நாயகியா. தாயைப் போல் பெண் கேட்ட பிள்ளையார். எந்தப்படத்தை முதலில் எடுக்கலாம்?

பொன்னம்பலத்தின் கரங்கள் இரண்டும் இடுக்கிகளாகி முருகப் படத்தை கெளவப் போயின. ஆனாலும் பாம்பாய் நீண்ட கரங்கள், 'கெளவ மறுத்தன. கையாடி காலாடி, அவர் உடலெல்லாம் ஆடியது. மனசாட்சி ஆடி <冕母ஆட்டுவித்தது. முப்பதாண்டு கால சிநேகிதப்படங்கள். அவரிடம் பேசாமல் பேசியவை. இவர், அந்தரங்கமாய் உரையாடிய படங்கள். சாதாரண சட்டம் போட்ட படங்கள் அல்ல. கடல்போல், மலைபோல், செம்மாந்து திகழ்பவை.

பொன்னம்பலம், தன்னை தேற்றிக் கொண்டார். இந்தப் படங்களை எடுக்க ஏற்படும் தயக்கம், முப்பதாண்டு கால மன மயக்கத்தின் பின்விளைவு. சிறைச்சாலையில் இருந்து விடுதலை அடைகிற கைதி, அவனது கொட்டடியையும், கூட இருப்பவர்களையும் எப்படி கால் நகர்த்தாமல் பார்ப்பானோ. கண்ணலம்ப, நோக்குவானோ- அப்படிப் பட்ட தயக்கம். அனாலும் அவன் மீண்டும் அந்த கொட்டடிக்குப் போகமாட்டான். அவனுக்காவது, அது, ஊன விடுதலை. இவருக்கோ. ஞான விடுதலை.

பொன்னம்பலம், இடுப்பளவு முருகபடம், திருமண காலத்தில் வாங்கப்பட்டதால் ஏற்பட்ட சென்டிமென்டில் அல்லாடி அதைவிட்டு விட்டு கீழே குனிந்து சுவர் மூலையோடு மூலையாய்க் கிடந்த திருப்பதி ஏழுமலையான் படத்தை கையகப்படுத்தப் போனார். அதற்காக நீண்ட வலதுகரம், இடதுகரத்தோடு பின்னிக் கொண்டது. இது வெறும்படமா. வெத்துவேட்டா. குபேரனிடம் கடன்பட்டு, ஏழுமலைக்கு கழிவிரக்கமாய் வந்தவர் திருப்பதி ஆண்டவன் என்பது நம்ப முடியாத புராணப் புளுகு. ஆனால், இது வாங்கப்பட்ட பின்னணி, பொன்னம்பலம் நினைவு கூர்ந்தார். அவருக்கு பெங்களூரில் இருந்து, அவர் விரும்பியபடி சென்னைக்கு மாற்றல் வந்த சமயம் பல்வேறு நியாயமான காரணங்களுக்காக, கணிசமாய் கடன்பட்டிருந்தார். சாட்சி இல்லை, ஆனாலும் வாங்கிய கடனை அடைக்காமல் போக மனமில்லை. டில்லி மேலிடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் முன் பணம் கேட்டு, விண்ணப்பித்து விட்டார். பணம் கிடைக்க மூன்று மாத காலமாகும். அதற்குள் சென்னைக்கு, இன்னொருத்தன் போயிடுவான். காத்திருந்தவன் காதலியை நேற்று வந்தவன் கொண்டு போன கதையாகும். அவர் தனக்குள்ளே குமைந்து கொண்டிருந்த போது-

ஒரு நண்பர் அவரை ஆள்துணையாக திருப்பதிக்கு கூட்டிப் போனார். அதிகாலை மூணு மணியளவில் சரஸ்வதி தேவி மகாவிஷ்ணுவிற்கு வீணை இசைப்பதாகக் கருதப்படும் பிரும்ம முகூர்த்த காலத்தில், கோவிலின் உட்பிரகாரத்திற்குள் சென்றவர், நண்பருடன் கவிழ்ந்து பார்த்த ஏழுமலையான நிமிர்ந்து பார்க்கிறார். பணமுடையால் ஏற்பட்ட நடைமுறையைச் சொல்லிச் சொல்லி விண்ணப்பிக்கிறார். பின்னர் வெளியேறுகிறார். கோவில் மதில் சுவர்ப்பக்கம், ஒரு நிர்வாகப் பொறியாளர். சென்னைத் தோழர் நீண்ட உரையாடலுக்குப் பிறகு, தனது பிரச்சினையை ஏதேச்சையாய் சொல்கிறார். உடனே அவர் 'நீங்க ஹெட்-ஆப் ஆபீஸ், அதாவது அலுவலகத் தலைவரா' என்கிறார். இவர், மேலும் கீழுமாய் தலையாட்டியதும் அவர், அலுவலக சாஸ்திரங்களில் ஒன்றை விளக்குகிறார். ஒரு அலுவலகத் தலைவர் தனக்கு டிரான்ஸ்பர் வரும்போது, தனக்குத்தானே முன்பணம் சாங்ஷன் செய்யலாமாம்.

அலுவலகம் வந்த பொன்னம்பலம் இந்த விதி தெரியாத நிர்வாக அதிகாரியைச் செல்லமாகக் கோபிக்க, அவர் பிராயச்சித்தமாய், அப்போதே பத்தாயிரம் ரூபாய்க்கு காசோலை எழுதி, இவரிடம் கையெழுத்து வாங்குகிறார். காலையில் சேங்ஷன், மாலையில் பணம். மறுநாள் பிருந்தாவன் ரயில், வெறும் ரெயிலல்ல. பிருந்தாவனத்து கிருஷ்ணனே இவரை ஏற்றி வந்தான். இந்த படத்தையா வீசி கடாசுவது. அவர் கரங்கள் சேவலை முன்னிறுத்தி, மயில் மேல் பட்டும் படாமலும் சாய்ந்த முருகன்படம் நோக்கி போகின்றன. பொன்னம்பலம் தடுமாறுகிறார். அரசுக்கு எதிராக, நண்பர்களின் ஆலோசனைகளையும் மீறி நீதி மன்றத்துக்குப் போகும் வழியில், ராமலிங்க அருளாளரால் பாடப்பட்ட சென்னை கந்த கோட்டத்திற்குப் போய் உள்ளே இருக்கும் திருக்குளத்தில் முதற்படியில் இறங்கி சேவல் கூவ வேண்டும் என்கிறார். உடனடியாய் கூவுகிறது. வெற்றிச் சங்காய் முழங்குகிறது. நீதிமன்றத்தில் வெற்றி. இந்த சிந்தனையில் இன்னொரு சிந்தனை கண்ணாடியில் முருக தரிசனம் கண்ட வள்ளலாரே, உருவ வழிபாட்டை உதறவில்லையா?

பொன்னம்பலத்தின் இருகரமும் மீண்டும் நீள்கின்றன. நிமிடமாய் நீண்டவை வினாடியாய் சுருங்குகின்றன. மூளைக்கு, மனம் முட்டுக் கட்டை போடுகிறது. இந்த இரண்டுமற்ற ஏதோ ஒன்று, அந்த சவ்வாது மலைக்குச் சாபமிடுகிறது. அவரை, அந்த மலைப்பகுதிக்கு மனோ வேகத்தில் அனுப்பி வைக்கிறது. அங்கு ஏற்பட்ட அனுபவ நிகழ்ச்சிகளை இழுத்துக் கொண்டு திரும்ப அழைத்துக் கொண்டு வருகிறது. நெஞ்சைச் சாடும் நினைவுச் சாம்பல்களை உயிர்ப்பிக்கிறது.

பொன்னம்பலம், அரசுப் பணிமுறையில், காவலூர் விண்மீன்கள் ஆய்வு மையத்திற்குச் சென்றார். வேலூருக்கு மேற்கே நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சவ்வாது மலைப்பகுதியில் உள்ள இந்த நிலையத்தின் நிதி நில்லை பற்றி ஆய்வு செய்ய அனுப்பப்பட்டார். கொடைக்கானல் போல் கொடுரமான பள்ளத்தாக்குகளையோ, நீலகிரி மலைபோல் ஊசிவளைவுகளால் பூச்சாண்டி காட்டாமல், சமவெளி போலான மலைவெளி. சின்னச் சின்ன ஓணான் செடிப் புதர்கள்.

தேக்குமரங்கள் வெட்டப்பட்டு, இப்போது அவற்றின் வேர்களும் தோண்டப்பட்ட குழிகள், குயில்களின் பதுங்கும் பொந்துகளான மலைமுகடு, காட்டில் தொலைந்துபோன மலைக்கிராமங்கள். குளிராமலும், வெம்பாமலும் நிதானப்பட்ட வெப்பநிலை. ஆங்காங்கே வனத்துறையின் பெண்காவலர்கள், குறிப்பாக மலைஜாதி இளம்பெண்களின் கண்களில் கராத்தே பார்வை. நாயைப் போன்ற கீரிகளின் நடமாட்டமும், கழுதைப் புலியைப் போன்ற செந்நாய்களின் குவியல்களும், மண்டிக் கொண்ட இடம். மற்றபடி எந்தவித கொடுங்கோன்மையும் இல்லாத கன்னிமை கழிந்தாலும், இன்னும் கற்பழிக்கப்படாத மலைத்தொகுதி.

பொன்னம்பலம், மகேந்திரா ஜீப்பில் போய் சேர்ந்தபோது இருட்டி விட்டது. அந்த நிலையம் ஒரே இருள் மயக்கத்தில் கிடந்தது. குடியிருப்பு வீடுகளில் கூட விளக்குகள், ஜன்னல் கதவுகளால் சிறையிடப்பட்டன. மின்மினிப் பூச்சிகள் மட்டும், ஒளிப் பொட்டுக்களாய் வலம் வந்தன. நுழைவாசலில் நிற்கும் காவற்படையின் ஒரு காவலருடன், ஜீப்பின் மங்கிய வெளிச்சத்தில், விருந்தினர் விடுதிக்குப் போனவர், தற்செயலாய் ஆகாயத்தைப் பார்த்தார். பார்த்தவர் பார்த்தவர்தான். தோள் கண்டார் தோளே கண்டார் நிலைமைதான். மூன்று நிமிட இடைவெளிக்குப் பிறகு விழியாடாமல் நிலைத்த கண்களை பக்கவாட்டில் படர விட்டார். 'எம்மாடி' என்று தனக்குத்தானே சொல்லியபடி நின்ற இடத்தில் நின்றபடியே சுற்றிச் சுற்றி வந்தார். பூமிக் கோளத்தைப்போல், தன்னைத்தானே சுற்றினார். கால்களே அச்சாக, குதிகாலில் நின்றும், கால்களை நிமிர்த்தியும் வளைத்தும் ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்தார். கால் சுற்றும், கண் சுற்றும் ஒருமுகப்பட்டன. தலைமுகட்டின் பள்ளத்தாக்கான வாய் அகலப்பட்டது. இரண்டு கரங்களும் தலைக்கு மேல் போயின.

பொன்னம்பலம் ஆகாயத்தை சல்லடையாக்கிய நட்சத்திரங்களை கண்கள் சல்லடையாகும்படி பார்த்தார். பிரமை கலையவில்லை. சுயம் திரும்பவில்லை. ஆகாயம் முழுவதும் அப்பி நிற்கும் விண்மீன்கள். கண்களின் கொள்ளளவிற்கு அடங்காதவை. அளப்பரியவை. அனந்தங்கோடி நெருப்புச் சூரியன்கள். எல்லையற்ற விசும்பில், கண்முட்டும் பகுதிவரை பாகம் பிரித்த பங்காளிக் கற்கள். இடையிடையே உள்ள ஆகாய வெளியையே விழியாய் கொண்ட விஸ்வ துண்டங்கள். பிற பகுதிகளில் மின்மினிப் பூச்சிகளாய் தோன்றும் அத்தனை நட்சத்திரங்களும், அந்த ஆகாய பரப்பில் கோபுர கலசங்களாய் மின்னுகின்றன. நிலவிற்கு நிற்க இடம் கொடுக்காத ஒளி உருளைகள். அத்தனையும் கூப்பிடு தொலைவில் ஒரு பாறையிலோ அல்லது மரத்திலோ ஏறினால் பிடித்து விடலாம் அல்லது பிடிபட்டு விடலாம் என்பது போன்ற நெருக்கம். ஒரு பாவனை. அந்த விஸ்வேஷ்வரத்தை வைத்தகண் வைத்தபடி பார்த்தவர், ஒரே சமயத்தில் அநேகமானார். அநேகமாக அவரே ஆகாயமாகி, அவை பிரசவித்த நட்சத்திரங்களானார். அப்போது பார்த்து, அந்தக் குலவுபேரண்ட தொகுதியில் இருந்த அவரை ஒரு குரல் இழுக்கப் பார்த்தது. முடியாது போகவே தொட்டுப் பார்த்தது. அதுவும் இயலாமல் போகவே, தட்டிப் பார்த்தது.

பொன்னம்பலம், வீறிட்டுக் கத்தினார். பொதுவாக, ஒருவர், ஒன்றுடன் ஒன்றும்போது, அவருக்கு தேள் கடித்தாலும் உறைக்காது. அல்லது ஒரு பூவை எறிந்தாலும் அலறிப் புடைப்பார் என்ற மனோ ரசவாதத்தை உணர்ந்தவர் போல், அவரைத் தொட்டவர், அவரை ஆசுவாசப் படுத்தினார். பின்னர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.

"என்னோட பெயர் குப்புசாமி. இந்த அப்ஸர்வேட்டரியில், ஒரு விஞ்ஞானி. ஒங்களை மரியாதை நிமித்தம் பார்க்க வந்தேன்."

பொன்னம்பலம், அவரை நெடுநாள் பழகியவர்போல், முகம் பார்க்காமலே அப்படிப் பார்க்க வேண்டுமென்றே தோன்றாமலேயே கேட்டார்.

"இந்த மாதிரி பெரிய பெரிய நட்சத்திரங்களை எங்கேயும் பார்க்கலே, ஒவ்வொன்றும் பத்து கிலோ தேறும் போலுக்கே"

"நீங்கள் வெயிட் அன்ட் மெஷர்" ஆபீஸ்ல வேலை பார்த்திருப்பீங்கன்னு நினைக்கேன். பரவாயில்ல. இந்த நட்சத்திரங்கள் எல்லா இடங்களிலும் காணப்படுவது மாதிரிதான் இங்கேயும் தெரியுது. ஆனால் இங்கே திட்டமிட்ட இருள்மயம். சமவெளியில் மின்சார விளக்குகளை உள்வாங்கிய கண்களுக்கு மேலே தொங்கும் நட்சத்திரங்களை, உடனடியாய் உள்வாங்க முடியாது. இங்கே இருளைப் பார்த்து பழக்கப்படும் மனிதக் கண்களுக்கு, நட்சத்திரங்கள் உள்ளது உள்ளபடியாய் தெரியுது."

"கொஞ்சம் விளக்கமாய் - என் சிற்றறிவுக்கு ஏற்ற வகையில்."

"என் சிற்றறிவுக்கு ஏற்ற வகையில்தான் என்னால் சொல்ல முடியும்."

"மன்னிக்கணும். இந்த ஆகாய விஞ்ஞானத்தில் நான் ஒரு பாமரன். இப்ப கூட அமாவாசை எப்படி வருது. பெளர்ணமி எப்படி வருதுன்னு துல்லியமாய் தெரியாது. அதனால.”

'புரியும்படியாய் சொல்ல முயற்சிக்கேன். மனிதனுடைய கண்களின் கொள்ளுமானத்தில் ஆறாயிரம் நட்சத்திரங்கள் அகப்படும். அதோ வலது பக்கம் ஸ்பியராய்-அதான் செவ்வக உருளையா தோணுதே, அது நம் மில்கி கேலேக்ஸியில் ஒரு கை. அதோ தெரியுதே அது இன்னொரு கை, பிரபஞ்ச சாகரத்தில் ஒரு துளியான நமது சூரியன், அந்த பால்வழி அண்டத்தில் உள்ள கோடிக் கணக்கான நட்சத்திரங்களில் ஒரு சராசரி நட்சத்திரம். ஒளியின் வேகம், விநாடிக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் மைல். சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவர நாலரை நிமிடங்கள்.

இப்படி பல்வேறு நட்சத்திரங்களில் வெளிப்படும் ஒளி. நமது பூமிய எட்டுவதற்கு கோடி கோடி ஆண்டுகளும் எடுத்துக் கொள்கின்றன. இவை ஒளி ஆண்டுகள். அதாவது விநாடிக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் கிலோ மீட்டர் என்பது ஆகாயத்தில் ஒரு குறைந்த பட்ச தூரம். இதுவே அறுபது விநாடிகளில் அறுபது தடவை ஊடுருவி, இருபத்து நான்கு மணிகளில், பயணமாகி, அந்தப் பயணம், முந்நூற்று அறுபத்தைந்து தடவை பாய்ந்தால் ஒரு ஒளியாண்டு. கிலோ மீட்டர் கணக்கில் டென் டு தி பவர் ஆப்."

"வேண்டாம் ஸார். நினைத்தே பார்க்க முடியல."

"ஒளி வேகத்தைவிட மனோவேகம் வேகமானது. அப்படிப்பட்ட மனதாலும் அளப்பரியது பிரபஞ்சம். இதில் காலத்துளியும், தூரத்துளியும் ஒன்றாகின்றன. அதோ தெரியுதே நட்சத்திரம். அதன் தோற்றம் ஒரு மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு முன்பிருந்த தோற்றம். கோடி கோடி நட்சத்திரங்களை உள்ளடக்கிய மண்டலங்கள்.... அவற்றை மடியில் தாலாட்டும் கோடானுகோடி மண்டல அடுக்குகள். இப்படி அனந்தகோடி அண்ட அடுக்குகளை கொண்டது பிரபஞ்சம். அதற்குப் பிறகு சூன்யம். இப்போது எங்களுக்கு தெரிய வருவது, இப்படி கோடிக் கணக்கான பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்று. கோளங்கள் நட்சத்திரங்களைச் சுற்றி, தத்தம் வகிடுகளில் சுழல்கின்றன. இங்கே ஒன்றித்துப் போன காலமும் தூரமும் அற்றுப்போகின்றன. காலம், மகாகாலம், சூனியத்தில் காலாவதியாகிறது. எப்போது காலத்தைக் கணக்குச் சிறையில் பூட்டாமல் இருக்கோமோ, அப்போதுதான் ஒருத்தருக்கு மெய்யான விடுதலை கிடைக்கும்.

"நாம், காலத்தை கிழமைகளாக்கி, நிமிடங்களாக்கி, நிமிடங்களை விநாடிகளாக்கி காலச்சிறையில் கடுங்காவல் தண்டனையை அனுபவிக்கிறோம். காலமற்ற நினைவே சித்து. நினைவற்ற காலமே ஞானம். இதை ஆராதிப்பதே, சித்தி, புத்தி, பக்தி ஆகியவற்றை கடந்த நித்தியம்."

"சாமி. இதுக்குமேலே என்னால தாங்காது. என் பக்தி ஒரு மூடபக்தி"

'ஒங்க மூடத்தனத்தை.... தப்பு தப்பு. அப்பாவித்தனத்தை நெற்றியில் பார்த்துட்டுத்தான் பிரபஞ்ச தத்துவத்தை விளக்கினேன். குவளை நீரை, கடலாய் நினைக்கும் எறும்பான ஒங்களை தற்காலிக தத்தளிப்பில் இருந்து. நித்தியத்திற்கு கரையேற்றவே விளக்கினேன்.”

பொன்னம்பலம் அந்த மனிதரை நிமிர்ந்து பார்த்தார். நைந்து போன சாதாரண வேட்டி. புனியன் போடாத தொள தொளப்பான சட்டை. இந்த லட்சணத்தில் கைதட்டிச் சிரித்தார். அந்த சிரிப்பு பைத்தியத்திற்கும், ஞானத்திற்கும் வரப்பான வினோதச் சிரிப்பு. சிறிது நேரம் சிரித்து, முடித்துவிட்டு. பொன்னம்பலத்தின் பிரமிப்பைக் கலைப்பதுபோல் பேசினார்.

"இந்த பூமிக் கோளம் தோன்றிய நாளில் இருந்து ஆன்மீகத் தேடலுக்கு இரண்டு விழிகள் கிடைத்தன. ஒன்று மெய்ஞானம். இன்னொன்று விஞ்ஞானம். மெய்ஞானத்தை மதம் சிறையிலிட்டது. ஆனால் விஞ்ஞானத்தை அதன் ஏவலாளிகளான எங்களைப் போன்ற ஆகாயக் கணக்கர்களை யாராலும் சிறையிட முடியாது."

"இதையெல்லாம் என்கிட்டே ஏன் சொல்றீங்க?"

'காரணம் இருக்கு. தீர்க்க வேண்டிய கணக்கும் இருக்குது. விடையும் கிடைக்குது. இப்படிப்பட்ட பிரபஞ்சத்தில், காளை வாகனத்தில் சிவன் இருப்பாரா? ஒரு அரக்கனுக்கு வரம் கொடுத்து விட்டு பயந்து பேடியாய் திரிவாரா? எல்லையற்ற பிரும்மத்தை படைத்த அல்லா கெட்டவர்களை நரகமிட்டு நல்லவர்களுக்காய் சொர்க்க மிட்டு அங்கே ஒருவரின் நல்லியல்புக்கு ஏற்ப கைபடாத மலர், கைபட்ட மலர் என்று படைக்கப்பட்ட பெண்களை, காமம், துலங்க வைப்பாரா? இயேசு என்பவர் பரிசுத்த ஆவிக்கும் கன்னிமேரிக்குமாய் பிறந்தவராம். நம்பணுமாம் அவரை நம்பியவருக்கு சொர்க்கமாம். நம்பாதவர் க்கு நரகமாம். ஒங்க வேள்வித்தீயோ மெழுகுவர்த்தியோ ஒரு விநாடியின் கோடிப்பிரமாண ஒளிப்பாய்ச்சலுக்கு நிகராகுமா?. மகாவிஷ்ணு கருடனில் பறக்காராம். அவர் மருமகன் மயிலில் ஏறுகிறாராம். மருமகனோட அப்பனுக்கும், ரெண்டு பொண்டாட்டிங் களாம். இவங்க நம்ம கடவுள்களாம். வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? சொல்லுங்க.."

"நான் எதையும் சொல்றாப்போல இல்ல. நான் என்ன செய்யணுமுன்னு சொல்லுங்க"

"பொய்க் கடவுள்களை விடுங்க. மனிதன் படைத்த கடவுள்களையும், அவர்களின் வாகனங்களையும், சிலுவையையும், பிறைநிலாவையும், திரிசூலத்தையும், உதறுங்கள். பிரபஞ்சத்தை ஆராதிங்க. கோடிக்கணக்கான நட்சத்திரங்களுக்கு இடையே உலா வாங்க, பசுமாட்டை வணங்காமல், பால்வழி மண்டலத்தை பாடுங்கள். பிரபஞ்ச ஆலயத்தின் அனந்தங் கோடி ஒளிப் பிரகாசத்தில் ஒரு ஒற்றை அகல்விளக்காய் ஒளிருங்கள். அப்போது பக்தியால் தரிசான மனோ நிலத்தில் ஞானம் விளையும். சரி சாப்பாடு ரெடி வாங்க. அறைக்குள்ளே போகலாம்."

பொன்னம்பலம், அந்த ஆகாயக் கணக்கரை, ஒரு மனிதராகப் பார்க்காமல், மகாத்மாவாகப் பார்த்தார். ஒருவேளை கிரகத்தின் சித்தரோ. புத்தரோ. வித்தரேர். எவரோ. வித்தியாசமானவர். பொன்னம்பலம் அங்கேயே திருநீறை அழித்தார். வரும் வழியில் திருவாலங்காய் என்ற சிவதலத்தில் பூசியது. அந்த விபூதியை அழித்த கரங்களை, ஆகாயத்தை நோக்கித் தூக்கியபடியே, பிரபஞ்சக் காலடியைக் கும்பிட்டார். மறுபிறவி எடுக்க, மரிக்காமலே புதுப்பிறவி எடுத்தார். எடுத்ததாக நினைத்தார்.

இப்போதோ, அதே அந்த பொன்னம்பலம், நினைவுகளின் சுடு சாம்பல் போலானார். மனசாட்சி சுமையாய் கனத்தது. நம்ப முடியாத அனுபவங்களுக்கும் நம்பக்கூடிய பகுத்தறிவுக்கும் இடையே இழுபறியானார். அந்தப் படங்களை எடுக்கவும் முடியவில்லை. நீடித்துவிடவும் மனமில்லை. எடுத்த எடுப்பிலேயே புலி த்தோல் நிற இருக்கையில் உட்காருகிறவர். நின்ற கோலமானார். அந்த சமயத்தில், கோலவடிவு வியப்போடு உள்ளே வருகிறாள். அந்த சாமியறைக்கு மட்டுமல்ல அதன் திசை நோக்கிக் கூட எட்டிப் பார்க்காதவள்.

"ஏன் இப்படி பித்துப் பிடித்து நிற்கீங்க..?"

பொன்னம்பலம் குழந்தையாய் ஒப்பிக்கிறார்.

இந் த ப் படங்க ைள எ டு த் தி ட லா மு ன்னு தீர்மானிச்சுட்டேன் கோலம். ஏன்னா ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலயும் இருக்கிற புராணக் கதைகள் சின்னத்தனமாயும், சில சமயம் அருவெறுப்பாயும் இருக்கு. சவ்வாது மலையில். ஒன்கிட்ட சொன்னேனே பிரபஞ்ச காலடித் தரிசனம். அந்த தரிசனத்திற்கு, பிறகு இந்தப்படங்களை எடுக்க நினைத்தேன். ஆனாலும் எடுக்க முடியல. காரணம் ஒவ்வொரு படத்துக்கும் பின்னணியான அனுபவம் என்னை வாழ வைத்தவை. எப்போதும் தீமையிடம் சரணடையாமல் நிற்க வைத்தவை. எனக்கு ஒரே குழப்பமாய் இருக்குது கோலம். நீதான் வழிகாட்டணும் கோலம்."

பொன்னம்பலம் மனைவியின் தோளில் தலை சாய்த்தார். அவள் தோளில் வாயுரச ஏதேதோ பேசினார்.

கோல வடிவு, அவர் முகத்தை திமிர்த்தினாள். கைகளால் முகத்திற்கு ஒத்தடம் கொடுத்தாள். அவளுக்குள்ளும் புது ஆன்மீகத் தேடல். நாத்திகையான நானே சில சமயத்தில், "அடக்கடவுளே", என்கிறேனே. அதே கோணத்தில்தான் இவருக்கும். இவருக்கு இந்த படங்கள் ஆன்மீகத் தேடல் என்ற அல்ஜிம்ரா பிரிவின் எக்ஸ், ஒய் மாதிரி. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் நிகழ்ச்சிகள் எப்படி தோன்றுகின்றன என்கிற விஞ்ஞானப் பாடம். பெரும்பாலோர்க்கு தெரியாததுதான். ஆனால் ரிமோட் கண்ட்ரோலில் எந்த எண்னை அழுத்தினால் எந்த ம்ாதிரியான நிகழ்ச்சிகள் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். இவருக்கும் தெய்வப்படங்கள் எனப்படுபவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் காட்சிகளே. தொடர்பியல் விஞ்ஞானமல்ல. போலியற்ற அறியாமை. அதுவே அவருக்கு தெளிவைக் கொடுக்கும் மெஞ்ஞானம். அந்தம்மா, கணவரின் தோளில் கை போட்ட ஔவையார் பிராட்டியானார்.

"இந்த படங்கள நீங்க எடுக்க வேண்டியதில்லை. ஏன்ன? நீங்க இந்தப் படங்களை தெய்வசக்தியாய் நினைக்காமல், இவற்றின் வழியாய் அந்த சக்தியைப் பார்க்கீங்க. ஒங்களோட ராமன் கபீரின் ராமன் அதாவது வில்லேந்திய ராமனல்ல. சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமனும் அல்ல. அதற்கும் மேலான ராமன். அருவத்தை உருவப்படுத்துகிறீர்கள் அவ்வளவுதான்.”

'நமது தேசியக் கொடி வெறும் துணிதான்."

ஆனால் அதற்கு இருக்கும் சக்தி. அரசுக்கே கிடையாது. பாரத மாதா. படத்தில் இருப்பதுபோல் இருக்கிறாளா. தமிழ்த்தாய் என்று, பெண்ணனங்கு ஒருத்தி இருக்கிறாளா ஆகக்கூடி, கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்தப் படங்கள், ஒங்களுக்கு கடவுளின் உருவங்கள் அல்ல. உருவகங்கள். பூமத்திய ரேகை ஒரு கற்பனைக் கோடுதான். ஆனால் அந்தக் கோட்டை வைத்துத்தானே பயன்பாட்டு விஞ்ஞானம் உருவாயிற்று. அதனால்தான் நீங்க இந்தப் படங்களை எடுக்க வேண்டிய அவசியமில்ல. இப்போது இருப்பது போலவே நீங்க ஒரு ஆத்திக நாத்திகராய் இருந்தாலே போதும்.'

பொன்னம்பலம், மனைவியை மார்புடன் ஆரத் தழுவுகிறான். அவளோ, தன் பள்ளிக்கூடத்து மாணவனைப்போல், அவரை பெருமிதத்துடன் பார்க்கிறாள். பின்னர், அவர் நிலைக்கு இறங்கியவள், தன் நிலைக்கு ஏறிக் கொள்கிறான். ஆனாலும் வாஞ்சையோடு சொல்கிறாள்.

"சரி. பழைய பூக்களை எடுங்க. நான். கொல்லைப்புறம் போய், ஒங்களுக்காக. பூக்களை பறிச்சுட்டு வாரேன்.'

கோலவடிவு, புதிதாய், முதல் தடவையாக பூக் கொய்யச் செல்லும் செயல்பாட்டைப் பற்றிக் கூட மனம் உள் வாங்காமல், பொன்னம்பலம், அந்தப் படங்களை கூச்சத்தோடு பார்க்கிறார். அவற்றின் மாறாத புன்னகை கண்டு, இவர் விம்முகிறார். ஏங்கி ஏங்கி அழுகிறார். அழுதபடியே, கைதுக்குகிறார். செங்குத்தாக தூக்குகிறார்.

சதங்கை—1998