62
கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி
ஹைதர் மலையாளக் கரையில் தெற்கு நோக்கி முன்னேறினான். கொச்சி அரசரும், பாலக்காட்டு அரசரும் பணிந்து, பெருஞ் செல்வத்தைத் திறையாக அளித்தனர்.
சாமூதிரியின் நெஞ்சழுத்தத்தின் பயனை ஹைதர் விரைவில் கண்டான். நாடு முழுவதும் அடக்கி விட்ட மகிழ்ச்சியுடன் அவன் கோயமுத்தூர் சென்றவுடனே, மலையாளக் கரை முழுவதும் காட்டுத் தீ போலக் கிளர்ந்தெழுந்தது. மாடக்கரையிலிருந்து, ஹைதர் கிளர்ச்சியை அடக்கும்படி, ரஸா சாகிப் என்ற படைத் தலைவனை அனுப்பினான்.
ஆனால், கிளர்ச்சி இத்தடவை படை வீரர் கிளர்சியாயில்லை. நாயர் குடி மக்கள் அனைவருமே கிளர்ந்தெழுந்தனர். ரஸா சாகிபு முன்னும் செல்ல மாட்டாமல், பின்னும் வர மாட்டாமல் திணறினான். ஹைதர் செய்தி அறியு முன், நிலைமை படுமோசமாயிற்று. செய்தியறிந்த பின்னும், பெரு வெள்ளத்தால், ஹைதர் முற்போக்குப் பெரிதும் தடைப்பட்டது. நாயர் வீரர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டு, மைசூர்ப் படைகளுக்குப் பெருஞ் சேதம் விளைத்தனர். நகரை அணுக முடியாமல், இரு படைகளும் தடைபட்டு நின்றன.ஆனால், இச்சமயம் ஹைதரிடம் இருந்த பிரெஞ்சுப் படைப் பிரிவின் தலைவன் உருப்படியான உதவி செய்தான். அவன் உக்கிரமாக முன்னேறி, அரண் வரிசைகளைப் பிளந்தான். பிளவின் வழி ஹைதர் படைகள் முன்னேறி, நகரைக் கைக்கொண்டன.
நாடு கைவசமான பின், ஹைதர் வட்டியும், முதலுமாகப் பழி வாங்கினான். மலபார் மக்கள் என்றும் அவன் பெயரை மறக்க முடியாதபடி, தன் ஆற்றலை அவன் அவர்கள் மீது பொறித்தான். அவன் இப்போது எடுத்த நடவடிக்கைகள், படைத் துறை வரலாறு முன்பின் அறியாதது. சிறைப் பட்டவர்களை ஒருவர் விடாமல், அவன் கொன்று வீழ்த்தினான்.