உள்ளடக்கத்துக்குச் செல்

மௌனப் பிள்ளையார்/010-015

விக்கிமூலம் இலிருந்து

தங்கச் சங்கிலி

ம்புஜத்தின் பிறந்தகத்திலிருந்து திரள் திரளாக வந்து என் வீட்டில் முகாம் போட்டுச் சௌக்கியமாகச் சாப்பிட்டுக் காலம் கழிப்பவர்கள் அநேகம்பேர். பெயரைச் சொன்னால் அவரவர்களுக்கு மூக்குக்குமேல் கோபம் வந்து விடும். மனுஷ்ய சுபாவமே அப்படித்தானல்லவா? அவர்களைச் சொல்லி என்ன பயன்? சாதாரண நாட்களிலேயே அவளுடைய பந்துக்கள் கூட்டம் போடுவார்கள். மேலும் இந்தக் கிறிஸ்மஸ்ஸின் போது சொல்லவா வேண்டும்? "அவசியமானாலன்றிப் பிரயாணம் செய்யாதீர்கள்” என்று ரயில்வேக்காரர்கள் என்னதான் விளம்பரம் செய்தபோதிலும் அதை இவர்கள் லட்சியம் செய்வதில்லை. இவர்களுக்காக நான் பழைய வீட்டை விட்டு இப்பொழுது ஒரு பெரிய வீட்டை வாடகை பேசி எடுத்துக் கொண்டேன். வீடு கலியாணம் பட்ட பாடாயிருக்கிறது. முந்தா நாள் நாலு வீசைக்காப்பிக் கொட்டை வாங்கினேன். இன்று மறுபடியும் என் மனைவி. "யாரங்கே! உங்களைத்தான்! காது என்ன மந்தமாய்ப் போச்சோ? நான் ஒருத்தி இருக்கிற வரைக்கும் உங்களுக்கு அப்படித்தானிருக்கும். காப்பிக்கொட்டை ஆயிடுத்துன்னு காலம்பர பிடிச்சு சொல்றேனே ; காதிலே விழலே? ஏன்னா?" என்கிறாள். என்னத்தைப் பண்ணுகிறது? சதா சர்வ காலமும் வேலைக்காரன் காப்பிக்கொட்டை இடித்தபடியே இருக்கிறான்! காப்பி கலக்கிய கங்காளத்தை வேலைக்காரி துலக்கிக் கொண்டே யிருக்கிறாள்! வந்திருக்கும் பரிவாரங்களுக்குத் தினமும் சினிமா போக நான் பணம் கொடுக்க வேண்டும். அதுவும் இரண்டாம் வகுப்பு டிக்கட்டு வாங்கிக் கொடுக்கனும்! நான் பணம் கொடுக்காவிடில் அம்புஜத்திற்குக் கவலையே கிடையாது. அவளிடம்தான் என்னுடைய பீரோவுக்கு வேறு சாவி இருக்கிறதே! இன்றைக்கு சினிமா நாளைக்கு டிராமா அதற்கடுத்த நாள் கண்காட்சிகள், சங்கீதக் கச்சேரிகள், வேறொருநாள் மீன் காலேஜ்! இப்படி தினமும் என்னுடைய பணமெல்லாம் பீரோவினின்றும்


அந்தர்த்தான மாகிக்கொண்டிருந்தது. நான் ஒரு நாள் சினிமாவுக்குப் போவதென்றால் பன்னிரண்டு நாள் யோசிப்பேன். பிறகு நமக்கு இதெல்லாம் லாயக்கில்லை. பணம் கொடுத்து என்ன சினிமா வேண்டிக்கிடக்கிறது என்று சும்மா இருந்து விடுவேன். வீட்டிற்கு வந்து பார்த்தால் கதவு பூட்டப்பட்டிருக்கும். அம்புஜம் அவளுடைய பந்து மித்திரர்கள் சகிதம் எந்தச் சினிமாக் கொட்டகையில் இருக்கிறாளோ? யார் கண்டது? சிவனே என்று தெருத்திண்ணையில் படுத்துக் கிடப்பேன். நடுநிசி பன்னிரண்டு மணிக்கு அவர்கள் வந்து சேருவார்கள். அப்புறம் படம் அப்படி இருந்தது. இப்படி இருந்தது என்று 'கிரிடிஸிஸம்' தொடங்கி விடுவார்கள்.

ரகசியமாக அம்புஜத்தைக் கூப்பிட்டு, "இவர்களுக்கெல்லாம் இங்கு என்ன வேலை? வந்தால் இங்கேயே சிலையாய்ப் பதிந்து போகிறார்களே! இவர்களுக்கெல்லாம் தண்டத்திற்குச் செலவு செய்ய எனக்கு என்ன கலெக்டர் உத்தியோகமா கிடைத்திருக்கிறது?" என்று கேட்டால், "இல்லாமலென்ன? நீங்கள் பில் கலெக்டர் இல்லையோ? கலெக்டர் என்ன ஒசத்தி?" என்பாள்.

"சரி, அவர்களெல்லாம் இங்கு வந்து. சுமார் இரண்டு மாசம் ஆயிருக்கும் போலிருக்கே! வந்தபடி போய்த் தொலை யறதுதானே?” என்று கேட்டால், “நன்றாய்ச் சொன்னேள்? இவர்களெல்லாம் நம் வீட்டுக்கு வரத்தக்க மனுஷாளா என்ன? என்னமோ கிறிஸ்மஸ் ஆச்சேன்னு வந்தா? தினமுமா வரப்போறாள்?" என்பாள்.

அவள் சொல்வதில் ஓர் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் ஏன் தினமும் வரப்போகிறார்கள்? வந்தால் திரும்பிப்போவதுதான் கிடையாதே! அவர்கள் முகாம் போட்டால் குறைந்த பக்ஷம் ஆறுமாசமாவது இல்லாமல் திரும்பிப்போனால்தானே?

கிறிஸ்மஸ்ஸுக்காக அம்புஜத்தின் அத்தை பெண் ஒருத்தி வந்திருந்தாள். நாலைந்து மாதத்திற்குள் அவள் திரும்பிப் போவதாகக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். இன்னும் பிரயாணத்தை ஸ்திரம் பண்ணவில்லையென்றும் பத்து தினங்களில் போகவேண்டுமென்று சொல்லுவதாகவும் அம்புஜம் என்னிடம் சொன்னாள்.

"ஆமாம், அதற்கு என்ன பண்ணவேண்டு மென்கிறாய்?"

"என்னத்தைப் பண்ணிவிடப்போறயள்? அவளுக்கு ஏதாவது செய்துதான் அனுப்பணும். வெறுமனே அனுப்பினால் நன்றாயிராது. அவள் ரொம்ப நாளாய் ஒரு வடத்தில் செயின் வேணும்னு கேட்டுக்கொண்டு இருக்கா. இப்போ நேரே வந்திருக்கும்போதே வாங்கிக் கொடுத்தால் நன்றாயிருக்கும். அவளிடம் முக்கால் பவுன் இருக்கிறதாம். பாக்கி நீங்க போட்டால் போதும். அப்புறம் உங்களிஷ்டம். நான் சொன்னபடியா நடக்கப்போறது?" என்று இவ்வளவையும் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டாள்.

"சரி; இவளுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கவேண்டும்" என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டேன்.

"ஒரு வடத்தில் செயின்! இந்த ஸ்திரீகளுக்கே வாய் கூசாதுபோல் இருக்கிறது! இப்பொழுது சவரன் விற்கும் விலையில் கிட்டத்தட்ட நூறு ரூபாய்க்குக் குறையாமல் ஆகுமே? ஆனால் நான் அதை வாங்கிக் கொடுக்கா விட்டாலும் அவளே வாங்கிக் கொடுத்து, அந்தப் பெண்ணை அனுப்பிவிடப் போகிறாள், இதற்கு என்ன செய்வது?" என்று யோசித்தேன். பேசாமல் தங்க கில்ட் கொடுத்த 'ரோல்ட் கோல்ட்' செயினை வாங்கிக் கொடுத்து ஏமாற்றி விட வேண்டியது தான்" என்று தீர்மானித்தேன். "முக்கால் பவுனை நாம் வாங்கிக் கொள்வது சரியில்லை" என்று மனைவியிடம் கூறிவிட்டு நடந்தேன்.

நகைக் கடையை அடைந்தேன். அங்கே ஒரு வியாபாரி ஒரு ரோல்ட் கோல்ட் செயினை எடுத்துக் காண்பித்து,"விலை ரூ. 3.20 ஆகும்" என்றான். எனக்கு உள்ளுக்குள் ஆனந்தம் பொங்கியது. ரூ.3.20விற்கு ஒரு செயின் கிடைப்பதென்றால் யாருக்குத்தான் இராது? அதுவும் இந்த மாதிரி சந்தர்ப்பத்தில். கடைக்காரரிடம் நான் சாயந்திரம் என் மனைவியுடன் வருவதாகச் சொல்லி இதே செயினை அசல் தங்கம் என்றும் விலை ரூ. 258.78 என்றும் சொல்லும்படி ஏற்பாடு செய்திருந்தேன்.

சாயந்திரம் அதன்படியே மனைவியுடன் அந்த நகைக் கடைக்குப் போய் அதே செயினை ரூ. 258.78க்கு விலைபேசி வாங்கிக்கொண்டேன். ஆனால் - கடைக்காரனிடம் மனைவிக்குத் தெரியாமல் ரூ.3.20 கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன். அம்புஜத்திற்குச் சந்தோஷம் தாங்கவில்லை!

பத்து தினங்களில் தன் தங்கையைச் சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு மறு நாள் நான் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பின்வரும் விஷயத்தை என்னிடம் சொல்லி மூர்ச்சை போடச் செய்தாள்.

என் அத்தை பெண்ணை ஊருக்கு அனுப்பிவிட்டேன். அவளுக்காக ஐந்து சவரனில் புதிதாக வாங்கிய செயினைக் கொடுக்க எனக்கு மனசு வரவில்லை. ஆகையால் நான் போட்டுக் கொண்டிருந்த சங்கிலியை அவளிடம் கொடுத்தனுப்பிவிட்டேன். நான் இப்போது அழகாயிருக்கேன், இல்லையா?" என்று கேட்டுக்கொண்டே என் அருகில் வந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மௌனப்_பிள்ளையார்/010-015&oldid=1681419" இலிருந்து மீள்விக்கப்பட்டது