உள்ளடக்கத்துக்குச் செல்

மௌனப் பிள்ளையார்/014-015

விக்கிமூலம் இலிருந்து

பெண்ணைப் பெற்றவர்

ள்ளிக்கூடத்திலிருந்து வந்த கோதண்டராமய்யர் தமது கோட்டைக் கழற்றி ஆணியில் மாட்டினார்.

உள்ளேயிருந்து வெளியே வந்த சமையலறைத் தெய்வம் அவரைப் பார்த்து, "இந்த வருஷமும் சீட்டாடி நாளைக் கழித்து விடாதீர்கள். மரகதத்துக்கு எப்படியாவது, எங்கேயவாது நாலு இடம் அலைந்து வரன் பார்த்துக் கொண்டு வாருங்கள். வைகாசி மாதத்துக்குள் அவளுக்குக் கல்யாணம் நடந்தாகணும். உம்;...... நாளைக்கே புறப்படுங்கோ!" என்று கண்டிப்பான உத்தரவு போட்டாள்.

கோதண்டராமய்யர் பதில் பேசவில்லை. மனைவியின் உத்தரவுப்படி மறுதினமே டிரங்குப் பெட்டி சகிதம் மாப்பிள்ளை தேடக் கிளம்பிவிட்டார். அவருடைய நண்பர் ஆபத் சகாயமய்யர் கும்பகோணத்தில் ஓர் இடம் இருப்பதாக அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். எனவே, கோதண்ட ராமய்யர் தமது நண்பர் சொன்னபடி கும்பகோணம் போய் அவர் குறிப்பிட்ட இடத்தையும் பார்த்தார்.

ஆபத்சகாயமய்யர் கொடுத்த விலாசத்தில் யாருமே இல்லை. அந்த இடத்திலிருந்தவர் திருநெல்வேலிக்குப் போய் விட்டதாகத் தகவல் தெரிந்தது. எனவே, கோதண்ட ராமய்யர் திருநெல்வேலிக்குப் போனார். திருநெல்வேலியிலும் அவர்கள் அகப்படவில்லை. அவருக்கு உத்தியோகம் மாற்றலாகிவிட்டதால் டில்லிக்குப் போய்விட்டதாகக் கேள்விப்பட்டார். கோதண்டராமய்யர் செலவைச் சிறிதும் லட்சியம் செய்யவில்லை.

பெண்ணைப் பெற்றவர்கள் செலவைப் பார்த்தால் முடியுமா? டில்லியை நோக்கிப் பயணமானார். டில்லிக்குப் போயும் காரியம் ஆன பாடில்லை. காரணம் இவர் தேடிப் போன மனிதர் டில்லியிலிருந்து பம்பாய்க்குப் போய்விட்டது தான். உடனே பம்பாய்க்குக் கிளம்பினார். நல்லவேளையாக, ஆபத்சகாயமய்யர் குறிப்பிட்ட ஆசாமி பம்பாயில் அகப்பட்டார்.

கோதண்டராமய்யர் அவரைக் கண்டு, தான் வந்த விவரங்களைச் சாங்கோபாங்கமாகக் கூறி முடித்தார்.

பிள்ளை வீட்டுக்காரர் அதற்குமேல், "பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? வயசு என்ன? வரதட்சணை எத்தனை?" முதலிய விவரங்களை யெல்லாம் அறிந்து கொண்டார். பிறகு கோதண்டராமய்யர், "பிள்ளையை நான் பார்க்கலாமோ?" என்று கேட்டார்.

"பிள்ளையா? அவன் சென்னைப் பட்டினத்திலல்லவா இருக்கிறான்!" என்றார் பிள்ளையைப் பெற்றவர்.

கோதண்டராமய்யர், "எங்கே? சென்னைப் பட்டினத்திலா?" என்று கேட்டார் தூக்கிவாரிப் போட்டவராய்.

"ஆமாம். சென்னைப் பட்டினத்தில்தான்; ஜார்ஜ் டவுனில் பிள்ளையார் கோயில் தெருவில் இருக்கிறான்” என்றார் பிள்ளை வீட்டுக்காரர்.

கோதண்டராமய்யருக்கு ஆச்சரியமாயிருந்தது. "பிள்ளையார் கோயில் தெருவில் இருக்கும் பிள்ளையைத் தேடியா இத்தனை ஊர்கள் அலைந்தோம்? நாம் இருக்கிற தெருவுக்குப் பக்கத்தில் அல்லவா இருக்கிறது பிள்ளையார் கோயில் தெரு? அந்தப் பையன் யாராக இருக்கலாம்?'; என்றெல்லாம் யோசிக்கலானார்.

சென்னைக்கு அவர் வந்து சேர்ந்ததும் மனைவியைக் கூப்பிட்டு, "அநாவசியமாய் என்னை ஊரெல்லாம் அலைய வைத்தாயே? கடைசியில் பிள்ளை வெளியூரிலா அகப்பட்டான்? பிள்ளையார் கோயில் தெருவில் அல்லவா ஒரு பையன் இருக்கிறானாம்? அவனைக் கண்டுபிடிப்பதற்கு டில்லிக்கும் பம்பாய்க்கும் அலையச் சொன்னாயே!" என்றார்.

"பார்த்தயளர்? இப்படி நாலு இடம் போய் அலைந்தால் தான் பிள்ளை கிடைப்பான் என்றுதான் நான் முதலிலேயே


 சொன்னேனே?" என்று பிரமாதமாகப் பெருமை யடித்துக் கொண்டாள் கோதண்டராமய்யர் மனைவி.

பிள்ளையார் கோயில் தெருவில் இருந்த பிள்ளை வேறு ஒருவரும் இல்லை. பள்ளிக்கூடத்தில் கோதண்டராமய்யரிடம் வாசித்துக்கொண் டிருந்த சாக்ஷாத் சுந்தரராமன் என்கிற பிள்ளைதான்! அடாடா! நமது வகுப்பிலேயே வாசித்துக் கொண்டிருந்த சுந்தரராமனுக்காக எங்கெல்லாம் சுற்றி அலைந்தோம் என்பதை நினைத்துப் பார்க்கும்போது கோதண்டராமய்யருக்கு ஆத்திரமும் அவமானமுமா யிருந்தது.

இவ்வளவு தூரம் தன்னை அலைக்கழித்த சுந்தரராமனுக்கு அவரால் என்ன தண்டனை கொடுக்க முடியும்? தமது பெண்ணையே அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=மௌனப்_பிள்ளையார்/014-015&oldid=1681424" இலிருந்து மீள்விக்கப்பட்டது