உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப் போராட்டம்

91

பாதிரி ஷ்வார்ட்ஸை அவன் ஆதரவுடன் வரவேற்றான். அத்துடன், ஹைதர் வசமிருந்த ஆங்கிலக் கைதிகளின் விடுதலை கோரப்பட்ட போது, அவன் அவர்களைப் பெரும் போக்குடன் விடுதலை செய்தான். ஆனால், ஆங்கிலேயரிடம் ஹைதர் காட்டிய நேர்மை, பெருந்தன்மை, மனிதப் பண்பு ஆகிய யாவும் நாய் முன் எறிந்த சந்தனக் கட்டை போலாயின.

1780-ல் மராட்டியர், நிஜாம், மைசூர் ஆகிய மூன்று வல்லரசுகளும், ஆங்கிலேயருக்கெதிராக நேச ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி, துங்கபத்திரைக்கு வடக்கே, கிருஷ்ணா ஆறு வரை, ஹைதர் வென்றிருந்த பகுதி மீது அவன் உரிமை உறுதி செய்யப்பட்டது. மராட்டியருக்கு, ஹைதர் தர வேண்டிய திறை 11 இலட்சம் என்பதும் வரையறுக்கப்பட்டது. தவிர, ஆங்கிலேயருடன் போர் தொடங்கிய பின், பேராறையும், தென்னாட்டுக்கு வடக்கிலுள்ள பகுதிகளையும், மராட்டியர் வென்று கைப்பற்றுவது என்றும், வட சர்க்கார் அல்லது ஆந்திரக் கரையோரப் பகுதியை, நிஜாம் கைக்கொள்வது என்றும், தமிழகப் பகுதியை ஹைதர் தாக்கி, வென்று இணைத்துக் கொள்வதென்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது.

ஒப்பந்தம் முடிவுற்றவுடனே, ஹைதர் படையெடுப்புத் தொடங்கி விட்டான். மற்ற இருவரும், அவர்கள் வழக்கப்படி, தயங்கித் தயங்கியாவது, நடவடிக்கை தொடங்குவர் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், அவர்கள் போரில் இறங்கவேயில்லை! ஹைதரின் முயற்சியை, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்!

ஹைதர் தாக்குதலுக்குத் திரட்டிய படையில் 83,000 வீரர்கள் இருந்தனர். தென்னாட்டில், அதற்கு முன்னும், பின்னும் அவ்வளவு சிறந்த கட்டுப்பாடும், பயிற்சியும்,