உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

ஆற்றலும் வாய்ந்த படை இருந்ததில்லை என்று ஆங்கிலேயரே ஒப்புக் கொள்கின்றனர். வேவு படை, மறை ஒற்றர் படை வகையில், எந்த அரசனும் ஹைதரின் அமைப்பிற்குப் பிற்பட்டவனேயாவன். ஏனெனில், அவனே நேரிடையாக எல்லா ஏற்பாடுகளையும் கவனித்தாலும், ஒவ்வொருவர் துறையும், பொறுப்பும், திட்டவட்டமாக வகுக்கப்பட்டிருந்தன. சென்னை அரசியலார் நிலை ஒன்று, இவ்வெல்லா வகையிலும் ஹைதருக்குப் பலவகையில் பிற்பட்டதாகவே இருந்தது. உண்மையில், ஹைதர் படைகள் சென்னைக்கு ஒன்பது கல் அருகில் பறங்கிமலை வருவது வரை, அவன் திட்டம், நிஜாம், மராட்டிய ஒப்பந்தம் ஆகிய எதையும் ஆங்கிலேயர் அறிந்து கொள்ளவில்லை. இந்த ஒரு வகையில், ஆர்க்காட்டு நவாப் முகமதலி முன்கூட்டி எச்சரிக்கை தந்தும், போர் முறைகள் அறியாத ஆங்கில அரசியலார் செவியில், அது ஏறவில்லை.

ஆங்கிலேயர்கள் விழித்ததும், ஆணைகள் எங்கும் பறந்தன. திருச்சிராப்பள்ளியிலிருந்து ஒரு படை, ஹைதர் படைக்குப் பின்னின்று உதவி வருவதைத் தடுக்கும்படி, ஆணையிடப்பட்டது. பாண்டிச்சேரியருகிலிருந்த ஒரு படை, சென்னை வரும்படி கட்டளையிடப்பட்டது. குண்டூரிலுள்ள ஒரு படை, தெற்கு நோக்கி வரும்படி கோரப்பட்டது. தவிர, உடையார் பாளையம், செஞ்சி, கருநாடகக் கரை, வந்தவாசி ஆகிய முகமதலியின் கோட்டைகளுக்கு, ஆங்கிலப் படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டன. ஆனால், குண்டூர் படை ஒன்று தவிர, எதுவும் முன்னேற முடியவில்லை. அப்படையும் வந்தவாசியில் வந்து தங்கிற்று. அதன் தலைமையை இங்கே ஏற்ற கர்னல் பேய்லி, கூத்தலாற்றை ஆகஸ்டு 25-ல் அடைந்தும், உடனே கடக்காமல் காலம் தாழ்த்தியதால், மாதக் கணக்கில் தடைப்பட வேண்டி வந்தது. ஏனெனில், அன்றிரவே ஆற்றில் வெள்ளம் பெருகிற்று. இறுதியில்,