விடுதலைப் போராட்டம்
93
ஆறு கடந்த பின், பேரம்பாக்கம் செல்லும் வழியில், ஹைதர் படைகள் அப்படைகளை மடக்கின. 700 வெள்ளையர்கள், 5,000 ஆங்கிலேயரின் நாட்டுப் படை வீரர்கள் அப்போரில் கொல்லப்பட்டனர். 2,000 வெள்ளையர்கள் சிறைப்பட்டனர். சிறைப்பட்டவர்களில், புகழ் மிக்க வீரரான பேயர்டு ஒருவர். இவர் மூன்றாண்டுகளுக்கு மேல், சீரங்கப்பட்டணம் சிறையில் அவதியுற்றுப் பின், விடுவித்துத் தாய்நாட்டுக்கே அனுப்பப்பட்டார்.
சென்னையில், ஆங்கிலேயர் நிலை மோசமாவதை அறிந்து, வங்காளத்திலிருந்து, பழைய சென்னை ஆட்சியாளர் வாரன் ஹேஸ்டிங்ஸ், ஸர் அயர் கூட் என்ற அனுபவமிக்க கிழத் தலைவனை அனுப்பினான். ஹைதர், ஆர்க்காட்டையும், ஆம்பூரையும் கைப்பற்ற முடிந்தது. ஆனால், வந்தவாசி நீடித்த முற்றுகையைச் சமாளித்த பின், ‘கூட்’ அதை விடுவித்தான். அதன் பின், அவன் கூடலூரை நோக்கிச் சென்றான். ஹைதர் ‘கூட்’டின் படைக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே சென்று, போர்ட்டோநோவோவில், அவனுடன் கை கலந்தான். இதில் ஹைதருக்கு மிகவும் படையழிவு நேர்ந்தது. ஆனால், பேரம்பாக்கத்தில் நடந்த அடுத்த கைகலப்பில், இரு சாராரும் சலிப்படைந்தனர். அத்துடன் ஹைதரின் வேலூர் முற்றுகையைத் தடுக்க முடியாததால், ‘கூட்’ சென்னைக்குத் திருப்பியழைக்கப் பட்டான்.
இச்சமயம், ஆங்கிலேயருக்கும், டச்சுக்காரருக்கும் போர் மூண்டது. ஹைதர், உடனே நாகப்பட்டணத்திலுள்ள டச்சுக்காரருடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். ஆனால், ஆங்கிலப் படைத்தலைவன் கர்னல் பிரேயித்வைட், நாகப்பட்டணத்தைச் சூழ்ந்த தஞ்சை மாவட்டப் பகுதிகள் முழுவதையும், கைப்பற்றினான். எனினும், 1782-ல்