உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________


ஆகும். வடமொழியில் காளிதாசர் எழுதிய மேகசந்தேசம் (முகில்விடு தூது), ஐரோப்பியப் புலவர்களாலும் பாராட்டப்பட்டுள்ளது.

    காதலர் ஒருவர் மற்றொருவரிடம் தம் காதலைத் தெரிவிக்கத் தூது அனுப்புவதாகக் கூறுதலே இந் நூலின் கருத்து. மனிதரைத் தூதாக அனுப்புதலே அல்லாமல் பறவைகளையும் விலங்குகளையும் தென்றல் முதலிய உயிரில்லாப் பொருள்களையும் தூது விடுத்தல் மரபு. அன்னம், மயில், கிளி, முகில்,பூவை, தோழி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு என்பன தூதாக அமைத்துப் பாடுதற்குச் சிறந்தவை. அவையே அல்லாமல், பணம், மான்,நெல், புகையிலை தமிழ் முதலியனவும் தூது செல்ல அமைந்த நூல்கள் தமிழில் உண்டு (பண விடு தூது, மான் விடு தூது, நெல் விடு தாது, புகையிலை விடு தூது, தமிழ் விடுதூது). இவை தூது செல்லும் தகுதி பெற்று விளங்குவதாகவும், ஏனையவற்றிலும் சிறப்புற்றிருப்பதாகவும் புகழ்ந்து கூறப்படும்.

உலா, தூது, மடல் முதலிய இலக்கிய வகைகளைத் தொடக்கத்தில் பாடிய புலவர்கள், தம்தம் புலவரைப் புகழ்வதே நோக்கமாகக் கொண்டு, அவர்களைப் பாட்டுடைத் தலைவராக அல்லது பாட்டின் தலைவராக அமைத்துப் பாடினர். பிற்காலத்தில் மனிதரைப் புகழ்ந்து வயிறோம்புதல் இழுக்கு என்ற சமயக் கொள்கை வளர்ந்த பின், சமயப் பற்று மிக்க புலவர்கள் தம் வழிபடு தெய்வத்தின் பெயராலேயே அந் நூல்களைப் பாடி அமைக்கத் தலைப்பட்டனர். அவ்வாறு அவர்கள் இயற்றிய நூல்களில் காதலுக்கு ஈடாகப் பக்தியுணர்ச்சி மிக்கு விளங்கும். சொற்களும் துறையமைப்புக்களும் அகப்பொருளுக்கு உரியனவாகவே இருப்பினும், பொருளெல்லாம் வழிபாட்டுணர்ச்சி மிகுந்துவிளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/21&oldid=1690997" இலிருந்து மீள்விக்கப்பட்டது