உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி/பதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து

பதிப்புரை

ஒரு நாட்டின் எதிர்காலம் சிறப்புற அமைய, அந்த நாட்டின் வீர மரபினரின் வரலாறுகளே கலங்கரை விளக்கங்களாகத் திகழ்கின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரை இத்தகைய கலங்கரை விளக்கங்கள் கணக்கற்றவை. ஒளி வீசி வழி காட்டுகின்றன.

தென்னாட்டுச் சரித்திரத்தில் உரிமைக்காகப் போராடி, வீரத்திற்கும் தியாகத்திற்கும் அழியாத நினைவுச் சின்னமாய் மாறி விட்ட வீரபாண்டியக் கட்டபொம்மனைப் போல் பாராட்டப்பட வேண்டியவன் மைசூர் அரசிருக்கையிலிருந்து தென்னாட்டை ஆண்ட மாவீரன் ஹைதர் அலி. அத்தகைய ஒரு வீரனைப் பற்றி, பள்ளிப் பிள்ளைகளின் சரித்திரப் புத்தகங்களின் நாலைந்து பக்கங்களைத் தவிர, சரி வர விளக்கம் தரும் நூல் எதுவும் இது வரை தமிழ் மொழியில் இல்லாதது ஒரு பெருங் குறையே. பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரை அவர்களின் சிறந்த ஆராய்ச்சியில் பிறந்த இந்த நூல் அந்தக் குறையை நிவர்த்திக்கிறது.

சாதாரணச் சிப்பாயாகப் பிறப்பெடுத்து, சாம்ராஜ்யாதிபதியான பிறகும் கூட வாழ்நாளெல்லாம் போராடியே கழித்த, கன்னடம் தந்த அந்த மாவீரனைப் பற்றி அணு அணுவாக ஆராய்ந்து கூறுகிறார் பன்மொழிப் புலவர். அவன் பட்ட அல்லல்களைச் சொல்லுகிறார்—நம் மனம் அவனுக்காக இரங்குகிறது. அவன் செய்த வீரச் செயல்களைக் கூறுகிறார்—நம் மனம் அவனைக் கண்டு வியக்கிறது. அவன் சினத்தால் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளைப் பற்றிப் படிக்கிறோம் - நம் மனம் அவனுக்காக வருந்துகிறது.

இப்படிப் பல கோணத்திலிருந்தும், ஹைதரின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் இந்தச் சிறந்த வரலாற்று நூலை எங்கள் நிலைய வாயிலாக மக்களுக்களிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இதனை இயற்றித் தந்த அறிஞர் அப்பாத்துரையார் அவர்களுக்கு எங்கள் நன்றியும் வணக்கமும் உரியன.

சென்னை,
16-11-1958

பாரி நிலையத்தார்.