கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி/விடுதலைப் பாறை
கன்னட நாட்டின் போர்வாள்
ஹைதர் அலி
1. விடுதலைப் பாறை
முடி சார்ந்த மன்னர், பிடி சாம்பராயினர்! இதுவே மன்னர் மரபின் பொது நீதி. இதற்கு விலக்கான தென்னாட்டு மன்னர் இருவர் உண்டு. ‘பிடிசாம்பர்’ வாழ்க்கைகளை ஒழுங்காய் எழுதிய ‘தாள் வரலாறு’, அவர்கள் புகழ் பொறிப்பதில் தள்ளாடியதுண்டு. ஆனால், மக்கள் உள்ளமாகிய பொன் வரலாற்று ஏட்டில், இருவர் புகழும் நீடித்துள்ளன. புதுப்புது மேனியுடன் இருவர் புகழும் நீடித்து வளர்கின்றன.
தமிழகத்தின் தென் கோடியிலே, பாஞ்சாலங்குறிச்சியருகே ஒரு மண் மேடு காட்சியளிக்கிறது. அது தமிழர் கண்களில் ஒரு வீர காவிய ஏடு. தமிழர் உள்ளங்களில், அது விடுதலைக்குக் கொடி எடுத்த வீரத்தின் காடு. வீரத்தின் எல்லை நோக்கி, விடுதலை ஆர்வம் என்ற கவண் பொறி ஏந்தி, வீரபாண்டியக் கட்டப்பொம்மன் வீசி எறிந்த புகழ்க் கல்லின் சுவடு அது! உடல் சாய்ந்தாலும், சாயாத ஒரு வீர உள்ளம், இன்றும் அவ்விடத்தில் நின்று வருங்காலம் நோக்கி வீறிட்டு முழக்கமிடுகிறது.
தென் கோடியின் இக் குரலுக்குத் தமிழகத்தின் வடகோடி எதிர்க் குரல் தருகிறது. சித்தூர் அருகே, நரசிங்கராயன்பேட்டைப் புறவெளியிலே, அது கன்னட மொழியிலே குரலெழுப்புகின்றது. அதுவே கன்னடத்தின் போர் வாள், ஹைதர் அலியின் வீர முழக்கம். அது தமிழகத்தின் உள்ளம் தடவி, ஆந்திரம் நோக்கி அடர்ந்தெழுகின்றது. கன்னடம் அதிர, மலையாளம் மலைப்பு எய்த, அது தென்னகத்தைத் தட்டி எழுப்புகிறது.
மன்னன் மரபில் வந்த குடிமன்னன் கட்டப் பொம்மன். ஆனால், அவன் மக்கள் தலைவனானான். வெளியார் ஆதிக்கத்தை வீறுடன் எதிர்த்து நின்று, விடுதலைக் கொடியேற்றினான். இதற்கு மாறாக ஹைதரோ, குடி மரபிலே, பொதுமக்களிடையே பொதுமகனாகத் தோற்றியவன். அவன் வீரனானான். வீரத்தை நாடு அழைக்க, அவன் வீர மன்னனானான்; பேரரசு நாட்டினான். அது மட்டுமோ? அவன் மற்றப் பெரும் பேரரசுகளுடன் மோதிக் கொண்டான். ஆயினும், அவன் தன் பேரரசைக் காப்பதை விட, மாநிலம் காப்பதிலேயே பெரிதும் மனங்கொண்டான்.
ஆள வந்த வெளியார்களை மீள வைக்க, அவன் அரும் பாடுபட்டான். எனினும், ஆளத் தெரியாத கோழை மன்னர் பலர் வெளியார் வலுவால், வாழ எண்ணினர். பேரரசுகளோ, சரிந்து வரும் தம் வலுவைச் சதி, எதிர் சதிகளின் உதவியால் சப்பைக் கட்டுக் கட்ட எண்ணின. இன்னும் சிலர், பல வெளியாரை அண்டிப் பிழைப்பதையே ஆக்கமாகக் கொண்டனர். விடுதலைக்கான உயிர்ப் போராட்டத்தைக் கூட அவர்கள் தம் சிறுதனி நலத்துக்காகப் பயன்படுத்தி, அதில் குளிர் காய எண்ணினர்.
விடுதலைப் பூஞ்சோலையில், இவ்வாறாக வேற்றுமைப் புயலடிக்கத் தொடங்கிற்று. ஒற்றுமை சாயத் தலைப்பட்டது. சதியும், பூசலும் சதிராட முற்பட்டன. அஞ்சாநெஞ்சன் ஹைதர் இத்தனை சூழல்களையும் தன்னந்தனியனாய் நின்று, மும்முரமாகத் தாக்கினான். சாய்வைத் தடுக்க முயன்றான். ஒற்றுமையைத் தானே படைத்து, உருவாக்க விரைந்தான். அவ்வொற்றுமைப் பாறையின் முகட்டில், விடுதலைக் கொடியை உயர்த்தி விட அவன் விதிர்விதிர்த்தான்.
சாய்வை அவனால் நீண்ட நாள் தடுத்து நிறுத்த முடியவில்லை. சாய்வு வலுத்தது. விடுதலைக் கொடியை அவனால் ஏற்ற முடியவில்லை. வேற்றுமைப் புயல், மேலும் கீழும் நாலா புறமும் குமுறியடித்தது. ஆனால் புயலிடையே மின்னல் போல, அவன் சுழன்று சுழன்று போராடினான். அப் புயலின் வீச்சு, எதிர் வீச்சுக்களையெல்லாம் சமாளித்து, அவன் விடுதலைக் கம்பத்தின் அடிப்படைக் கல் நாட்டினான்.
புயல் எளிதில் அமையவில்லை. ஆனால், புயலிடையே ஹைதர் நட்ட கல், அந்தப் புயலடியிலேயே அசையாத விடுதலைப் பாறையாய் நிலவிற்று.
புயலிடையே ‘வீர வெற்றிச் சிங்கம்’ ஹைதர் நாட்டிய அடிப்படைக் கல்லின் மீதே, பின்னாளில் வீரபாண்டியக் கட்டபொம்மன் விடுதலைக் கொடி நாட்டினான்.
ஹைதரின் புதல்வன் திப்பு, சிங்கத்தின் பின் வந்த சிங்கமாய், அந்தக் கொடியை உலக அரங்குக்கே உயர்த்த முயன்றான். அவன் முயற்சி வெற்றி பெறவில்லையானாலும், வீணாகவில்லை. அதன் எதிரொலியே வெள்ளையரைப் பின்னாளில் வெருட்டித் துரத்தியடிக்க முடிந்தது.ஹைதரைக் காட்டிக் கொடுக்க முனைந்த போலி மரபுகளில் மராட்டிய மரபு ஒன்று உண்டு. அது சிவாஜியின் வீர மராட்டிய மரபன்று. அம் மரபின் அரியாசனத்தைக் கவர்ந்து, அதனைத் தன் நரியாசனமாக்கிக் கொண்ட பேஷ்வா மரபு. ஆயினும், அம் மரபு கூட ஹைதர் காலத்துக்கு நெடு நாட்களுக்குப் பின், தன் மாசு கழுவ முற்பட்டது. ஹைதர், கட்டபொம்மன் ஆகியவரின் புகழ் மரபுக் கொடியை அம்மரபின் கடைசித் தோன்றலான நானாசாகிப் சில காலம் வானளாவப் பறக்க விட்டான். இதன் மூலம், அவன் தன் முன்னோர் மாசகற்றி, சிவாஜியின் வீர மரபுக்கு மீண்டும் ஒளி தந்தான்.
மாநிலத்தின் விடுதலையை மதிக்கவில்லை, மாநிலத்தில் அடிமையாட்சி பரப்பிய ஆங்கில அரசியலார். 1857-ம் ஆண்டு வீசிய விடுதலைப்போரின் ஒரு பேரலையை அவர்கள் ‘சிப்பாய்க் கலகம்’ என்று கூறி நையாண்டி செய்தனர். மத வெறி கொண்டவர்களின் மட எதிர்ப்பென்று அதை அவர்கள் தட்டிக் கழிக்கப் பார்த்தனர். ஆனால், விடுதலை வரலாற்றாசிரியர்களில் தலை சிறந்தவர், மராட்டிய திலகம் வீரசவர்க்கார். ‘எரிமலை’யாய் மூண்டு வெடித்த பெரும் போராக அதைத் திரட்டிக் காட்டினார். விடுதலைப் புதுப் பயிர் வளரும்படி, மாநிலமெங்கும் வெடித்துச் சிதறி, விதை தூவிய நெற்றாக அதைச் சித்தரித்துக் காட்டினார். ஆனால், விடுதலைப் பயிருக்கான விதைகளைச் சிதறடித்த காட்சியுடன், அவர் ஆராய்ச்சி நோக்கு நின்று விட்டது.
விடுதலை விதை தந்த கொடி விளைவுற்றது மராட்டியத்திலேதான். அதை வீரசவர்க்கார் திறம்படச் சுட்டிக் காட்டுகிறார். அவர் தாயகமாகிய மராட்டியத்தின் பெருமை அது. சிவாஜியின் வீர மரபு விளங்கிய இடம். அது என்பதையும் அவர் மறக்கவில்லை. ஆனால், மராட்டியத்தில் காய்த்து முற்றி விளைவுற்ற கொடி, தமிழகத்திலே மலர்ந்தது என்பதையோ, கன்னடத்திலே மூல விதையூன்றிய தென்பதையோ அவர் கனவிற்கூடக் காண முடியவில்லை. ஒரு வேளை, அக் காட்சியை அவர் மறக்க எண்ணியிருக்கலாம். சிவாஜியின் மரபுக்கும், நானா சாகிபுக்கும் இடையேயுள்ள போலி மரபு பேஷ்வா மரபு. அது கன்னடத்தின் விடுதலைப் போராட்டத்திடையே கொண்ட பங்கை அவர் வீர வரலாற்றுக் கண் காண விரும்பியிருக்க முடியாது. அது அவர் விழுமிய மராட்டிய உள்ளத்தை உள்ளூர உறுத்தி இருக்கக்கூடும்!
மராட்டிய மண்டலத்தின் வேற்றுமைப் பிணக்கு, ஐதராபாதை ஆண்ட நிஜாமின் கோழை அடிமைத்தனம், ஆர்க்காட்டு நவாபு மகமதலியின் குள்ள நயவஞ்சகச் சூழ்ச்சிகள், கிலி கொண்ட திருவாங்கூர் மன்னர் மரபின் ஆங்கில ஆதிக்க நேசம்—இத்தனை இருள்கள் சூழ்ந்த தென்னாட்டின் அந்நாளைய வாழ்விலே, வீறொளி பரப்பிய வீர சோதி, ஹைதர்! அவன் வாழ்க்கை வரலாறு தென்னாட்டவர் உள்ளங்களை, சிறப்பாக வீரம் கருக் கொள்ளும் நிலையில் உள்ள இளைஞர் உள்ளங்களை ஈர்க்கும் தன்மையுடையது. அது காலத்தின் செல்வம். காலந்தாண்டி ஞாலத்துக்கு வழிகாட்டும் சீரிய பண்பு அதற்கு உண்டு.
வரலாற்றில் மறைக்கப்பட்டிருந்த பொன்னேடு பாஞ்சாலங் குறிச்சி. ஆண்ட அயலார் அதைக் கற்பனைக் கண் கொண்டு பார்க்கவும் அஞ்சினர். 19-ம் நூற்றாண்டின் வாயிலில், அவர்களை எதிர்கொண்டழைத்த அந்நிகழ்ச்சியின் நிழலைக் கூட, அவர்கள் வரலாற்றில் குறிக்கவில்லை. அதன் பின் 1857-ல் எழுந்த வீர ஏட்டையோ, அவர்கள் திரித்துக் கூறி அமைந்தனர். ஆனால், ஹைதர் வாழ்வை அவர்கள் திரித்துக் கூறவில்லை; மறைக்கவில்லை; அதை அவர்கள் மறக்கவும் இல்லை. ஆயினும், அவர்கள் அதைத் தம் இனத்தவர்க்கு—ஆளும் இனத்தவர்க்கு—ஒருநிலையான எச்சரிக்கையாக மட்டுமே தீட்டினர். ஆளப்படும் மக்கள் கண்களில், அதன் மெய்யான உருவம் தென்படாமல் இருக்கும்படி, அவர்கள் அதற்குச் சாயமடித்து உருமாறாட்டம் செய்தனர். மெய்யான ஊடு நூலுடன், பொய்யான பாவு நூலிழைத்து, அவர்கள் திரை இயற்றினர். அத்திரையிலே விடுதலையின் வீரத் திருவுரு, வேட்டைக் காட்டின் வெங்கொடுமைப் பேருருவாகக் காட்சி தந்தது.
இம்மாறாட்டத் திரை அகற்றி, ஹைதர் வாழ்வின் பார தீர உருவில் நாம் கருத்துச் செலுத்தவேண்டும்.
விடுதலைப் பயிர் வளர்க்க முனையும் நமக்கு, அவ்விடுதலை இயக்கத்தின் நாற்றுப் பண்ணைக்கே வித்தும், உரமுமிட்ட வீர வாழ்வு ஒரு நல்ல வழி காட்டியாதல் ஒரு தலை. நமக்கும், நம் பின்னோர்களுக்கும் அது நற்பயனூட்டும் பண்புடையதாய் அமையும் என்பதும் உறுதி.