உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி/காலமும் களனும்

விக்கிமூலம் இலிருந்து

2. காலமும் களனும்

ஹைதர் வாழ்வாகிய நாடகத்துக்கு 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி ஒரு மேடையாய் அமைந்தது. அக்காலத் தென்னகத்தின் அரசியல் சூழல்களே அதற்கேற்ற பின்னணித் திரைகளாக இயங்கின. காலம், களன் ஆகிய அத்திரையின் இரண்டு கூறுகளையும் தெளிவாக உணர்ந்தாலல்லாமல், ஹைதர் வாழ்வைச் சரிவர மதிப்பிட முடியாது.

கனனட நாடு இன்னும் அரசியலரங்கத்திலே அழைக்கப் படவில்லை. தமிழகம் ‘சென்னை’ என்று அழைக்கப் படுவது போல, அது மைசூர் என்றே அழைக்கப் படுகிறது. ஆனால், அணிமை வரை மைசூர் என்பது ஒரு தனியரசின் பெயராகவே நிலவிற்று. ஹைதர் காலம் முதல்தான், இது இங்ஙனம் ஒரு முழுப் பகுதியாக இயல்கிறது. அதற்கு முன், அது பல குறுநிலப் பகுதிகளாகவே பிரிந்திருந்தது. முதல் முதல் அப் பெரும் பகுதியை ஒன்றுபடுத்தி, ஒரே அரசாக்கி, ஒரு குடைக் கீழ் ஆண்டவன் ஹைதரே! மைசூர் என்ற பெயரால் அப்பகுதி முழுவதும் அழைக்கப்பட்டதும் அக்கால முதல்தான்.

பழங்காலத்தில், மைசூர்ப் பகுதி கங்க நாடு என்றழைக்கப்பட்டது. இப்பெயர் கொங்கு நாடு என்பதன் மறு வடிவமேயாகும். இன்று கொங்கு நாடு என்ற பெயரை நாம் சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களடங்கிய தமிழகப் பகுதிக்கு மட்டுமே வழங்குகிறோம். ஆனால் சங்க காலங்களில்—அதாவது, கி. பி. மூன்றாம் நூற்றாண்டு வரை—இது கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக மட்டுமே கொள்ளப் பட்டது. அதை அன்று, தென் கொங்கு நாடு என்று வழங்கினர். இன்றைய மைசூர்ப் பகுதி, வட கொங்கு நாடு என்றும், தென் கன்னட மாவட்டமடங்கிய மேல் கடற்கரைப் பகுதி, மேல் கொங்கு நாடு என்றும் குறிக்கப்பட்டன. இம் மூன்றும் சேர்ந்தே, பண்டைக் கொங்கு நாடு அல்லது பெருங் கொங்கு நாடு ஆயிருந்தது.

மைசூர்த் தனியரசு ஹைதர் நேரடியாக ஆண்ட பகுதியே. அவன் பேரரசாட்சியின் விரிவு, மேற்குறிப்பிட்ட பெருங் கொங்கு நாடு முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அத்துடன், பல சமயங்களில் அது அவ் எல்லை கடந்து மலபார் மாவட்டம், கொச்சித் தனியரசு, சோழ நாடு, தொண்டை நாடு, ஹைதராபாதின் பகுதி ஆகிய எல்லைகளிலும் பரவியிருந்தது.

தென்னாட்டில் எங்கும் முடியரசுகள் தோன்றுவதற்கு முன், குடியரசுகளும், குடிமன்னர் ஆட்சிகளுமே பரவியிருந்தன என்று எண்ண இடமுண்டு. சங்க காலத்தில், தமிழகத்திலே சேர சோழ பாண்டியர் என்ற முத்தமிழ் முடிமன்னர் ஆண்டனர். ஆனால், தமிழகம் நீங்கலாக எப்பகுதியிலும், அந்நாளில் மொழி எல்லை வகுப்போ, மொழி சார்ந்த அரசுகளோ ஏற்படவில்லை. குடி மரபுகளே நிலவின. தமிழகத்திலே கூட, முடியரசுகள் ஏற்பட்ட பின்பும், அவர்களுக்கு அடங்கியும், அடங்காமலும் பல குடி மரபுகள் நிலவின. தமிழகத்துக்கு அப்பால் முடியரசுகள் இல்லை; குடியரசுகளே நிலவின. தமிழகத்திலும், தமிழகத்துக்கு அப்பாலும் இக்குடி மன்னர்கள் வேளிர் அல்லது சளுக்கர்கள் எனப்பட்டனர்.

வட தொண்டை நாட்டில், இன்றையத் தெலுங்கு நாட்டுப் பகுதியில் ஆய் அண்டிரனும், திரையரும் வேளிராக ஆண்டனர். அண்டிரர் குடியே ஆந்திர மரபாய் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை பேரரசாக நிலவிற்று. கலிங்கரும் இத்தகையக் குடியரசரே. சில காலம், கலிங்கரும் சில காலம், ஆந்திரருமாக இமய முதல் வடபெண்ணை வரைப் பேரரசாட்சி நடத்தினர். சங்க காலத் திரையர் குடி மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின், பல்லவப் பேரரசு நிறுவி, இன்றைய ஆந்திர, வட தமிழகப் பகுதி முழுதும் ஆண்டது. இதே சமயம், மேல்திசையில் கடம்பர் குடியரசு மரபினராக ஆண்டனர். கலிங்கர், ஆந்திரர், பல்லவர் அல்லது திரையர், கடம்பர் ஆகிய இவ்வெல்லா மரபுகளும், கடலோடிகளாக விளங்கி, கடல் வாணிகம் நடத்தினர். அயல்நாடுகளில், சிறப்பாகத் தென் கிழக்காசியாவெங்கும் இவர்கள் தென்னக நாகரிகம் பரப்பி, தென்னகக் குடியேற்றங்கள் நிறுவினர்.

இக்காலத்தில் மைசூர்ப் பகுதியில், எருமை அல்லது எருமையூரன் என்ற வேளும், தென் கன்னடப் பகுதியில் நன்னன் என்ற வேளும் ஆண்டனர். இவர்கள் பெயர்கள் இன்றளவும் நம்மிடையே நிலவுகின்றன. எருமையூர் என்பதன் சமஸ்கிருத வடிவம் மஹிஷபுரி என்பது. அதன் பாளி அல்லது பாகத (பிராகிருத) வடிவமே இன்று மைசூர் என்ற பெயரைத் தந்துள்ளது. அது முதலில் ‘மைசூர்’ என்ற ஊர்ப் பெயராய் இருந்தது. ஹைதர் காலத்திலிருந்து, அது அவ்வூரைத் தலைநகராகக் கொண்ட பரப்பின் பெயராய் இயங்குகின்றது.

மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின், பாண்டியர் சோழர் குடிகளைச் சேர்ந்த இளவல்கள் பலர், தென் தெலுங்கு நாட்டிலும், மேற்கு மைசூர்ப் பகுதியிலும் பல தனியரசுகள் நிறுவினர். தெலுங்கு கன்னட மொழிகளில் ‘சோழ’ என்ற சொல் ‘சோட’ என்று திரிந்தது. நன்னன் என்ற பெயருடன், சோட என்ற பெயரும் இணைந்து, இன்று வரை ‘நன்னிசோட’ என்ற குடிப் பெயராய் அப்பகுதிகளில் நிலவுகிறது.

கி.பி.3 முதல் 10-ம் நூற்றாண்டு வரை, தமிழகத்தின் பெரும் பகுதியைப் பாண்டியர் ஆண்டனர். வட தமிழகத்தையும், ஆந்திரப் பகுதியையும் பல்லவர் ஆட்சி கொண்டனர். இதே சமயம், தென்னாட்டின் வடபகுதியை ஆண்டவர்கள் கடம்பர், சாளுக்கியர், இராஷ்டிரகூடர் ஆகிய மரபினர்.அவர்களுக்குக் கீழ்ப்பட்டும், கீழ்ப்படாமலும் கங்கர் (மேலைக் கங்கர்) என்ற மரபினர் மைசூர்ப் பகுதியை ஆண்டு வந்தார்கள். கங்கரும், அவருக்குப் பின் வந்த மரபினரும் சமண சமயம் சார்ந்தவர்கள். ஹளபீடு, பேலூர் ஆகிய இடங்கள், இன்றும் அவர்கள் கலை வளத்துக்குச் சின்னங்களாய் அமைகின்றன. ஹம்பியிலுள்ள விஜய நகரச் சிற்பங்களுடன் போட்டியிட்டு, இவை கன்னட நாட்டின் கலைச் செல்வங்களாகப் புகழ் பெற்றுள்ளன.

12-ம் நூற்றாண்டில், மைசூர்ப் பகுதி சோழப் பேரரசர் ஆட்சிக்கும், அதன் பின், பாண்டியப் பேரரசர் ஆட்சிக்கும் உட்பட்டிருந்தது. ஆனால், அப்பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின், 14-ம் நூற்றாண்டு வரை ஹொய்சளர் என்ற வலிமை வாய்ந்த மரபினர், துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு அப்பகுதியில் ஆண்டு வந்தனர்.

14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான், முதன் முதலாக, தென்னகத்தின் அரசியல் வாழ்வில், வட திசையிலிருந்து ஒரு பேரிடி வந்து விழுந்தது. சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், தென்னாட்டுக்கப்பாலுள்ள சிந்து கங்கைவெளி ஆப்கானிய மரபின் ஆட்சிக்கு உட்பட்டது. டில்லியில் ஆண்ட ஆப்கானியப் பேரரசன் அலாவுதீன் கில்ஜியின் படைத் தலைவன் மாலிக் காபூர் 1310-ல் தென்னாட்டின் மீது படையெடுத்தான்.

மைசூர்ப் பகுதிக்கு வடக்கே, தேவகிரியில் யாதவ மரபினரும், வாரங்கலில் காகதீயரும் ஆட்சி செய்து வந்தனர். மாலிக் காபூர் படையெடுப்பின் முன் இவர்களும், ஹொய்சளரும் வீழ்ச்சியுற்றனர். மாலிக் காபூர் தமிழகத்திலும், பாண்டியப் பேரரசை நிலை குலையச் செய்து, இராமேசுவரம் வரை கொள்ளையடித்துச் சென்றான்.

மாலிக் காபூர் படையெடுப்பின் அழிவிலிருந்து, முதல் முதல் தலை தூக்கிய இடம் மைசூர்ப் பகுதியே. இங்கே விஜயநகரப் பேரரசு உருவாகி, 16-ம் நூற்றாண்டு வரை கன்னடம், தெலுங்கு நாடு, தமிழகம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கி ஆண்டது. இதன் வடபால் பகமளி என்ற மற்றொரு இஸ்லாமியப் பேரரசு தோன்றி வளர்ந்தது. இப்பேரரசு விரைவில், பீஜப்பூர், கோல்கொண்டா, அகமது நகர், பீஹார், பீடார் ஆகிய ஐந்து தனியரசுகளாகச் சிதறுண்டது. ஆயினும், இவை வலிமை குன்றாத அரசுகளாகவே நிலவின.

பாண்டியப் பேரரசர் ஆட்சிக் காலத்திலும், விஜயநகரப் பேரரசர் ஆட்சிக் காலத்திலும், தென்னாட்டின் கடல் வாணிகமும் செல்வ வளமும் உச்ச நிலை அடைந்தன. உலக வாணிகத்தில் தென்னாட்டவர், சீனருடனும், அராபியருடனும் கை கோத்து உலாவினர். உலகின் பொன்னும், மணியும் மிகப் பேரளவில் தமிழகத்திலும், தென்னாட்டிலும் வந்து குவிந்து கிடந்தன. இப்பெரு வளம் மேலை நாட்டினர் பொன்னாசையைத் தூண்டிற்று. 15-ம் நூற்றாண்டின் இறுதியில், போர்ச்சுகீசிய நாட்டானாகிய வாஸ்கோடகாமா கடல் மூலமாகத் தென்னாட்டுக்கு வர வழி கண்டான். அவன் கள்ளிக்கோட்டையில் இறங்கி, அதன் குடிமன்னனாகிய சாமூதிரியின் ஆதரவையும், விஜய நகரப் பேரரசனாகிய கிருஷ்ண தேவராயரின் ஆதரவையும் பெற்றான்.

16-ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரும், டச்சுக்காரரும், 17-ம் நூற்றாண்டில் பிரஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் தென்னகக் கடற்கரைப் பட்டினங்கள் பலவற்றில் வாணிகத் தளங்கள் ஏற்படுத்தினர். படிப்படியாக அவர்கள் வாணிக ஆட்சி, நாட்டாட்சியில் தலையிட்டு, தாமே சிறு நாட்டாட்சிகளாகத் தொடங்கின.

விஜயநகரப் பேரரசு, 16-ம் நூற்றாண்டின் பிற் பகுதியிலிருந்து சரியத் தொடங்கிற்று. தலைநகரைத் தமிழகத்தின் வடபகுதியிலுள்ள சந்திரகிரிக்கு மாற்றி, பேரரசர் பெயரளவில் பேரரசராக நின்று, சிற்றரசர் போல ஒதுங்கி ஆட்சி செய்து வந்தனர். தமிழகத்தில், அவர்கள் கீழ் ஆண்ட தஞ்சை நாயகரும், மதுரை நாயகரும் வலிமை வாய்ந்த அரசர்களாயினர். அது போலவே, கன்னடப் பகுதியில் மேல் கரையோரத்தில் இச்சேரி நாயகர்களும், மைசூர்ப் பகுதியில் உடையார் மரபினரும் பேரரசின் மேலுரிமையை உதறித் தள்ளி, தனியாட்சி நிறுவினர்.

பகமளிப் பேரரசிலிருந்து கிளைத்த அரசுகளில், வடக்கே அகமது நகரும், தெற்கே பீஜப்பூர், கோல்கொண்டா ஆகியவையும், விஜய நகரப் பேரரசின் அழிவுக்குப் பின், வலிமையுற்று, வளர்ச்சி அடைந்தன. பீஜப்பூர், தமிழ்க் கொங்கு நாட்டை நோக்கியும், கோல்கொண்டா, தொண்டைநாட்டை நோக்கியும் தம் ஆட்சியைப் பரப்ப முயன்றன. இம்முயற்சிகளால், விஜய நகர அரசு பின்னும் நலிந்தது. தஞ்சை நாயகரும் வீழ்ச்சியுற்றனர். ஆனால், மதுரை நாயகர், மைசூர் உடையார், இச்சேரி, பேடனூர்த் தலைவர் ஆகியோர் வளம் பெற்றனர்.

பீஜப்பூர் சுல்தானிடம் ஷாஜி என்ற மராட்டிய வீரன் படைத் தலைவனாயிருந்தான். அவனும், அவன் புதல்வர்களான எக்கோஜியும், சிவாஜியும் தஞ்சை நாயகர் ஆட்சியில் தலையிட்டு, அப்பகுதியைக் கைக் கொண்டனர். தஞ்சையில் 18-ம் நூற்றாண்டு இறுதி வரை, ஒரு மராட்டிய மரபு நிலை பெற்றது. சிவாஜி மற்றொரு புறம், மேல் கடலோரத்தில் கொண்காணக் கரையில், ஒரு மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் இட்டான்.

சிந்து கங்கை வெளியில் 16 - ம் நூற்றாண்டில் ஆப்கானியரை வென்று, மொகலாயர் பேரரசு அமைத்தனர். அகமது நகர் அரசு 17-ம் நூற்றாண்டிலேயே முகலாயப் பேரரசன் அக்பரால் விழுங்கப்பட்டிருந்தது. அவன் பின்னோர்களான ஷாஜஹான், அவுரங்கசீப் ஆகியவர்கள் பீஜப்பூரையும், கோல்கொண்டாவையும் படிப்படியாக அழித்துக் கீழடக்கி, தமிழகத்திலும், தம் படைத்தலைவரை அனுப்பினர். அச்சமயம், அவர்களால் முற்றிலும் கீழடக்கப்படாதிருந்த பகுதி, சிவாஜியின் மராட்டியப் பகுதி ஒன்றேயாகும்.

ஆனால், மராட்டிய மண்டலத்திலே, சிவாஜி மரபைக் கவிழ்த்து, பேஷ்வாக்கள் என்ற புதிய மரபினர் ஆண்டனர். இவர்கள் பேரரசு நாட்டினர். இப்பேரரசு ஐந்து கிளை அரசுகளாய்ப் பிரிவுற்றிருந்தாலும், பேஷ்வாக்களின் திறமையால் ஒற்றுமை குலையாமல், வலிமை வாய்ந்த கூட்டரசாகவே இயங்கிற்று.

17-ம் நூற்றாண்டின் இறுதிக்குள், உடையார் மரபினர் இன்றைய மைசூர்த் தனியரசின் ஒரு பாதியளவான பரப்பைப் படிப்படியாக வென்று வளர்ச்சியுற்றனர். உடையார் மரபினரில், புகழ் வாய்ந்தவரான சிக்க தேவராயர் 1699-ல் மொகலாயப் பேரரசர் அரங்கசீப்புடன் நட்புறவு கொண்டு, அவர் ஆதரவைப் பெற்றார். ஆனால், சிக்க தேவராயர் 1704-ல் உலகு நீத்தார். அவருக்குப் பின், வந்த அரசர்கள் திறமையற்றவர்களா யிருந்தனர். மைசூர் அரசு மீண்டும், அவல நிலையடையத் தொடங்கிற்று. அதன் மேல் திசையில், குடகுப் பகுதியையாண்ட பேடனூர்த் தலைவரும், கீழ் திசையில் சித்தல துருக்கத் தலைவரும், மைசூர் அரசர்களுக்குப் பெரும் போட்டியாக வளர்ச்சியடைந்து வந்தனர்.

தமிழகத்தில் மொகலாயப் பேரரசின் ஆளாக, ஆர்க்காட்டு நவாபும், அதன் வடபால், தென்னாடு முழுவதற்கும் பேரரசர் பேராளாக ஹைதராபாது நிஜாமும் நிலை பெற்றனர். அவுரங்கசீப் 1707-ல் மாண்ட பின், மொகலாயப் பேரரசு சரிந்தது. நிஜாமும், ஆர்க்காட்டு நவாபும் கிட்டத்தட்டத் தன்னுரிமையுடைய தனியரசர்கள் ஆயினர். பெயரளவில் மட்டும், ஆர்க்காட்டின் மீது நிஜாமுக்கு மேலுரிமை இருந்தது.

மேனாட்டு வணிக ஆட்சி நிறுவிய வெள்ளையர்களில், பிரஞ்சுக்காரர் கை வரிசையே 18-ம் நூற்றாண்டில் மேலோங்கி இருந்தது. டியூப்ளே போன்ற ஒப்பற்ற அரசியல் தலைவர்களும், லாலி, புஸி போன்ற திறமையான படைத் தலைவர்களும், தென்னகத்திலே பிரஞ்சுப் பேரரசு நாட்டக் கனவு கண்டு வந்தனர். இதற்கேற்ப, தென்னாட்டு மக்களிடையேயும், தென்னக அரச மரபுகளிடையேயும் அவர்கள் நட்புறவும், செல்வாக்கும் வளர்ந்து வந்தன. இந்நிலையினால், தம் வாணிகம் பங்கம் அடையுமே என்ற அச்சத்தினால், ஆங்கிலேயர் அவர்கள் வளர்ச்சியை எதிர்த்து நிறுத்த, அரும்பாடு பட்டு வந்தனர்.

பிரஞ்சுக்காரருக்குத் தாயகத்திலிருந்து போதிய நல்லாதரவு கிடைக்கவில்லை. தமிழரைப் போல, பிரஞ்சுக்காரரும் போட்டி, பொறாமை, சூழ்ச்சிகளுக்கு இடம் தருபவராயிருந்தனர். இந்நிலை படிப்படியாக, பிரஞ்சு இனத்தின் பெருமை குலைத்து, ஆங்கிலேயர் சூழ்ச்சிகளுக்கு வலுத் தருவதாய் அமைந்தது.

தென்னக அரசியல் வாழ்வில் ஹைதர் புகுந்த சமயம் இதுவே.

தென்னகத்தில், அச்சமயம் வலிமை வாய்ந்த பேரரசர்கள் மராட்டியப் பேஷ்வா மரபினரும், நிஜாமுமேயாவர். அவர்களுக்கு அடுத்தபடியான வலிமை வாய்ந்த அரசன், ஆர்க்காட்டு நவாபு. ஆனால், இப்பேரரசுகளிடையேயும், அரசுகளிடையேயும் பிரஞ்சுக்காரரும், ஆங்லேயரும் அரசியல் சூதாட்டத்தில் இறங்கியிருந்தனர்.

இந்த அரசியல் வேட்டைக்காரரின் வேட்டைக்கு, மைசூர் நடுநாயகமாக அமைந்திருந்தது. அதற்குத் தொல்லை கொடுத்து, அதன் வளர்ச்சியைத் தடை செய்யும் வேட்டை நாய்களாக, பேடனூர், சித்தல துருக்கத் தலைவர்கள் இரு புறமும் இருந்தனர். இவர்கள் தவிர, வடக்கே, இன்றைய தார்வார்ப் பகுதியில், குத்தி என்ற இடத்தில் மொராரி ராவ் என்ற ஒரு மராட்டியத் தலைவனும், கடப்பை, கர்நூல், சாவனூர் ஆகிய பகுதிகளில் தனித்தனி நவாப்களும் ஆட்சி செய்தனர்.

உள்நாட்டு வேற்றுமைப் பூசல் களமாகவும், வெளிநாட்டார் வேட்டைக் களமாகவும் விளங்கிய அந்நாளைய தென்னாட்டு அரசியல் வாழ்வில் ஹைதர் புகுந்து, அதை எவ்வாறு தன் வீர வெற்றிக் களமாக மாற்றினான் என்பதை இனிக் காண்போம்.