________________
102 இலக்கிய மரபு பெருகுகின்றன ; நோய் மிக்கு நடக்கும் வலிமை இழந்து நொண்டியான பிறகு தவறுகளை நினைந்து இரங்கி, கடவுளை வேண்டுகிறான் ; கண்ணீர் விட்டுக் கசிந்துருகுகிறான்; கடவு ளருளால் இழந்த உடல்நலம் பெற்றுத் திருந்துகிறான். இதுவே நொண்டி நாடகத்தின் பொதுவான அமைப்பாகும். ஐரோப்பியர் தொடர்பு சென்ற நூற்றாண்டின் முடிவில்தான் ஐரோப்பிய நாடகங்களின் தொடர்பால், தமிழில் சமுதாய நாடகங்கள் தோன்றி வளரலாயின. சேக்ஸ்பியரின் நாடகங்களைப் போல், ஐந்து அங்கங்களாகவும் சிற்சில காட்சிகளாகவும் நாடகம் எழுதும் முறை பரவியது. சுந்தரம்பிள்ளை எழுதிய மனோன்மணீயம் என்னும் நாடகம் அவ்வாறு அமைந்ததே. ஆயின் அது பெரும்பாலும் படிப்பதற்கு உரிய நாடகமாக உள்ளது ; செய்யுளால் அமைந்துள்ளது. வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் என்னும் பரிதிமாற் கலைஞர் இயற்றிய ரூபாவதி, கலாவதி, மான விஜயம் முதலிய நாட கங்களும் அத்தகையனவே. உரைநடையில் எழுதி நடிப்ப தற்கு உரிய நாடகங்கள் பல ஆக்கித்தந்தவர் பம்மல் சம்பந்த முதலியார். அவருடைய நாடகங்களில் மாந்தரின் பண்புகள் நன்கு விளக்கப்படுகின்றன. அவர் நாடக ஆசிரியராக மட்டும் அல்லாமல் நடத்துவோராகவும் நடிப்பவராகவும் விளங்கித் தொண்டு புரிந்த காரணத்தால், தமிழ் நாடக மேடையைப் பெரிதும் சீர்ப்படுத்த முடிந்தது. ஹாம்லெத் முதலான ஆங்கில நாடகங்களும் மண் ணியல் சிறுதேர் சாகுந்தலம் முதலான வடமொழி நாடகங் களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆயின் அவை நாடகங்களாக அனைத்தும் படிப்பதற்கு மட்டும் உரிய உள்ளன.