120 இலக்கிய மரபு பொதுவான மனித உணர்ச்சிகளைக் கொண்டு விளங்குவன வாகும். அன்றியும், பலரும் உணரத் தக்க துறைகளை வாழ்க்கைப் பகுதிகளைக் கொண்டு விளங்குதல் நாவலுக்குச் சிறப்பாகும். ஒரு சிலர்க்கு மட்டுமே அனுபவமான துறை களைப் பற்றிய நாவல்கள், பலராலும் போற்றப்படாமல் ஒதுங்கி நிற்கும்; கால வெள்ளத்தைக் கடந்து வாழ வல்ல ஆற்றலும் அவற்றிற்கு இல்லாமற் போகும். இருவகைப் பசி பொதுவாக, மனித உள்ளத்தில் இருவகை அறிவு வேட்கை உள்ளன. ஒன்று: அண்மையில் உள்ளவற்றையும் வாழ்க்கையில் பயின்றவற்றையும் தெளிவாக அறியும் வேட்கை. மற்றொன்று: சேய்மையில் உள்ளவற்றையும் வாழ்க்கையில் காணாதவற்றையும் கற்பனை செய்து அறியும் வேட்கை. நாவல் எழுதுவோரிடத்து இந்த இருவகை வேட்கையின் பயனையும் காணலாம். அதனால் சிலர் வாழ்க்கையோடு ஒட்டியவற்றையே மிகுதியாகப் படைத்துத் தருவர். அத்தகையது உள்ளது புனைதல் அல்லது உண்மையியல் (realism) ஆகும். வேறு சிலர், வாழ்க் கையில் பயிலாதவற்றை மிகுதியாகக் கற்பனை செய்து தருவர். அத்தகையது இல்லது புனைதல் அல்லது கற்பனையியல் (romanticism) ஆகும். காவியம் முதலான எல்லாக் கலைப்படைப்பிலும் இவை இரண்டும் இருக்கும். சிலவற்றில் உள்ளது புனைதல் மிகுந்திருக்கும்; வேறு சிலவற்றில் இல்லது புனைதல் மிகுந்திருக்கும். முழுதும் உள்ளதே கூறினும் கலைப்படைப்பாக விளங்குவதில்லை; முழுதும் கற்பனையே கூறினும் கலைப்படைப்பாக உயர்வதில்லை. ஆதலின், முன்னத்தில், உயர்ந்ததை எட்டித் தாவும் முயற்சி வேண்டும்; பின்னதில், வாழ்க்கையோடு இயைத்துக் காட்டும் முயற்சி வேண்டும்.
பக்கம்:இலக்கிய மரபு.pdf/124
Appearance