உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

124 இலக்கிய மரபு களோ பெரு நிகழ்ச்சிகளோ ஆங்காங்கு அமைந்து, கதை மாந்தரின் பண்புகளை விளக்கப் பயன்பட்டால் போதும். இத்தகைய கதைகளில் வரும் மாந்தர் சிலர் தொடக்கம் முதல் இறுதி வரையில் பண்பு மாறாதவர்களாக ஒரே தன்மையாக இருந்துவருவார்கள். வாழ்க்கையில் மனிதர் அவ்வாறு இல்லாமையாலும், மக்களின் பண்பில் வளர்ச்சி யும் மாறுதலும் இருந்துவருதலாலும், இந்த நாவல்கள் உண்மையோடு ஒட்டி அமையாதவை என்று சிலர் குறை கூறுவர். வாழ்க்கையில் கோமாளி கோமாளியாகவே இருந்துவருவதில்லை; வஞ்சகன் எல்லோரிடத்தும் எப் போதும் வஞ்சகனாகவே இருந்துவருவதில்லை; ஆதலின் நாவலில் மட்டும் ஏன் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று அவர்கள் குறை கூறுவர். ஆயின்,பண்புகளைத் தெளிவாகப் புலப்படுத்துதலே இந்த நாவல்களின் நோக்கம் ஆகையால், அவ்வாறு அமைதல் பொருந்தும் எனலாம். நிகழ்ச்சிகள் மிக்க நாவலில், கதைக் கருவுக்குச் சிறப்பு அமைய, கதைமாந்தர் அதற்குத் துணை புரிவர்.பண்பு நலன் பற்றிய நாவலில் கதைமாந்தர் சிறப்புடன் நிற்க, கதைக் கரு எவ்வாறேனும் அமையலாம். கதைமாந்தரின் பண்புகளை நேரே ஆசிரியரே எடுத் துரைக்க வேண்டியதில்லை. அது சிறந்த முறை அன்று. ஆசிரியர் என்று ஒருவர் நம் மனத்திற்குத் தோன்றாதவாறு அவர் மறைந்திருத்தலே நன்று. அவர் தோன்ற வேண்டு மானால், கதைமாந்தருள் ஒருவராகவே அமைந்துவிடலாம். கதை சொல்லத் தொடங்கிய பிறகு, கதையின் ஆசிரியர் நம் மனக் கண்ணில் புலப்படாமல் ஒதுங்கியிருத்தல் நல்லது. கதைமாந்தரின் பண்புகளை விளக்குவதற்கு, அவர் களின் செயல்களைத் தக்கவாறு அமைக்கலாம். செயல் களால் எல்லாப் பண்புகளும் புலப்படல் இயலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/128&oldid=1681961" இலிருந்து மீள்விக்கப்பட்டது