உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 ஸ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகளின் பிருந்தாவனம் என்பது இரண்டாவது. இந்தச் சுவாமிகள் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார்கள். மஞ்சள் அரைத்துப் பூசி, பெண்களைப்போன்று புடவையும் நகைகளும் அணிந்து, திருமாலைத் தம் நாயகன் என்று பாடி, இந்தச் சுவாமிகள் வைணவத்தை வளர்த்தார்கள். சுவாமி களின் பிருந்தாவனம், அழகர்கோயில் சாலையில் காதக்கிணறு என்னும் இடத்தில் உள்ளது. அங்கு வேணுகோபாலன் வழிபாடு நிகழ்கிறது. கூடலழகர் கோயில் மதுரை மாநகரின் தலையாய வைணவக் கோயில் இதுவே. இக்கோயில் உள்ள பகுதி 'இருந்தையூர்' என்று பெயர் பெற்றிருக்கலாம் என்று பெரும்புலவர் ஆ.கார்மேகக் கோனார் தெரிவித்துள்ளார். பரிபாடல் குறிக்கும் இருந்தையூர்,இதுவாக இருத்தல் கூடும். இருந்தவளமுடையார் இருக்கும் இருந்தவூர் என்று பெயர்பெற்று, பின்னர் இருந்தையூர் எனத் திரிந்தும் மருவியும் இருக்கலாம். இருந்தையூர் கருங்கோழி மோசியார் என்னும் புலவர் இவ்வூரினர் போலும். ஊர்' வெற்றிலைப்பேட்டைக்கு அருகே முனிச்சாலை என்னும் இடத்தில் அந்தரவானம் தண்ணீர்ப் பந்தல் தெரு என்று ஒரு தெரு உள்ளது. இது கூடல் அழகப் பெருமானுக்கு அந்தரவானத் தெம்பெருமான் என்னும் பெயர் அமைந்திருந்ததற்குச் சான்று பகருகிறது. . கூடல் அழகர் கோயில். மேலைமாசி வீதி, தெற்குமாசிவீதி ஆகிய இரு வீதிகளும் சந்திக்கும் இடத்திற்கு அருகே மதுரை அகநகரின் தென்மேற்கு மூலையில் உள்ளது. இங்கே கோயில் கொண்டுள்ள திருமால் (1) இருந்த கோலம், (2) நின்ற கோலம், (3) கிடந்த கோலம் ஆகிய மூவகை நிலைகளிலும் காட்சி தந்து கூடலழகர் என்னும் பெயருடன் ஸ்ரீ தேவி, பூமாதேவி இருவருடனும் எழுந்தருளியுள்ளார். மூலவர் கோயிலின் மீது அஷ்டாங்க விமானம் கட்டப் பட்டிருக்கிறது. முதல் மாடியில் நெடுமாலின் நின்ற கோலத்தை யும் இரண்டாம் மாடியில் பள்ளிகொண்ட திருக்கோலத்தையும் காணலாம்.