186
கலைஞர் மு. கருணாநிதி
உற்சாகமூட்டக்கூடிய இத்தனை செயல்களுக்கிடையே தந்தையின் நினைவு அவளைக் குன்றிப் போகச் செய்தது. "தந்தை, இருங்கோவே ளின் நண்பர்; மகள் சோழ நாட்டுப் பெருமைக்குப் பாடுபடும் வீராங் கனை!' என்று அவள் உதடுகள் உச்சரித்தன. கண்கள் மூடிக் கொண்டன. சற்று நின்றாள் மண்டபத்துப் படிக்கட்டில். மூடிய இமைகளின் வழியே கண்ணீர்த் துளி எட்டிப் பார்த்தது. 'ஆம்! நான் என் தந்தையைக் காட்டிக் கொடுக்க வேண்டும்'! என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். பிறகு அசைவற்று அப்படியே நின்றாள்.
எவ்வளவு நேரம் அப்படி நின்றாள் என்று தெரியாது. பிறகு உணர்வுபெற்று விழிகளைத் திறந்தாள். என்ன ஆச்சரியம்! எதிரே ஒரு கிழவன்! சொரிபிடித்த கிழவன்! பரட்டைத் தலை! பஞ்சு நிறத்தாடி! கூனன்! குறுகிப் போய் எதிரே நின்று கொண்டிருந்தான்.
"யார் நீ?" என்று வியப்பு மேலிட முத்துநகை கேட்டாள். அவளால் அவனைப் பார்க்கவே இயலவில்லை. அவ்வளவு கோர உருவமாகக் காட்சியளித்தான் அந்தக் கிழவன்.
"என்னையா யார் என்று கேட்கிறாய்? பெண்ணே, நீ யார் என்று எனக்குச் சொல்! நிலவைக் கடைந்து செய்த சிலையில் நித்திலத்தைப் பதித்தது போல காட்சி தரும் பாவையே! நீ யார்?"
கிழவனின் பேச்சை அவளால் பொறுக்க முடியவில்லை. தன்னைப் பெண் என்று எப்படிக் கண்டுபிடித்தான் என ஆச்சரியமுற்றாள்.
"நீ இருக்கும் அழகுக்கு வர்ணனைப் பேச்சு ஒரு கேடா? ஆண் - பெண் வேறுபாடு தெரியாத குருடனே நிறுத்திக்கொள் உன் அலங்கோல வார்த்தைகளை!" என்று கடுமையாகப் பதில் கூறினாள் முத்துநகை.
"என்னடியம்மா - இப்படி ஊடல் புரிகிறாய்?" என்று நகைத்தவாறு கிழவன் முத்துநகையின் கையைப் பிடித்து இழுத்து இறுகத் தழுவிக் கொண்டான்.
அவன் பிடியிலிருந்து விடுபட முடியாமல் முத்துநகை தவித்து. இறுதியில் அவனைக் கீழே தள்ளி விட்டுத் தொலைவில் சென்று அங்கு கிடந்த ஒரு கருங்கல்லைத் தூக்கி அவன் தலையில் போட ஓடி வந்தாள். கீழே கிடந்த கிழவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள், அவன் தலைக்குக் குறிபார்த்துக் கல்லை பலங்கொண்டமட்டும் இரு கைகளாலும் உயரத்தூக்கி அவன்மீது எறிந்தாள். அதைப் பற்றிக் கவலையே கொள்ளாமல் படுத்திருந்த கிழவன் தலைக்கு நேரே வந்த கல்லை இடது கையால் தட்டிவிட்டு வேகமாக எழுந்து அவளைத் துரத்தினான். அவள் ஓட முயன்றாள்; கிழவன் விடவில்லை; அவள்