உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியாரும் சமதர்மமும்/04

விக்கிமூலம் இலிருந்து

4. முதல் சுயமரியாதை மாநாடு

முதல் சுயமரியாதை மாநாட்டில், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சமையல்காரர்கள் (விருது நகர நாடார்) உணவு சமைப்பார்கள். பல சாதியார் பரிமாறுவார்கள். அதை மாநாட்டு பிரதிநிதிகள், பல சாதியரோடும் அமர்ந்து உண்ண உடன்பட வேண்டும் என்று முன் கூட்டியே அறிவிக்கப்பட்டது. அக்காலத்தில் அது பெரும் புரட்சி.

உயர்வாகக் கருதப்பட்ட சமுதாயத்தினர் (அய்யர்கள்) சமைப்பதை உண்ணவும், சமபந்திக்கு உடன்படுவோர் அன்று அருமை. சமுதாயத்தின் அநீதிகளுக்கு ஆளான (நாடார்) சமூகத்தினர் சமைப்பதை உண்பது என்பது, அன்று அநேகருக்கு அதிர்ச்சி தரும். வேறு எந்த மக்கள் இயக்கமும் செய்யத் துணியாத, இந்த அதிர்ச்சி மருத்துவத்தைப் பெரியாரின் தன்மான இயக்கம் தொடக்கத்திலேயே வெற்றிகரமாகச் செய்து காட்டியது. ஆறாயிரம் தமிழர்கள் ஒன்றாக உட்கார்ந்து, உண்ட புரட்சி பெரிது. ஆம்; வரலாற்றுச் சிறப்புடையது ஆகும்.

முதல் சுயமரியாதை மாநாடு—சாதியொழிப்பு, வழிப்பாட்டில் தரகர் ஒழிப்பு, ஆண் பெண் சமத்துவம் பற்றி முற்போக்கான முடிவுகள் எடுத்தது. அவற்றைப் பார்ப்போம்.

‘மக்கள் பிறவியினால் உயர்வு, தாழ்வு உண்டென்ற கொள்கையை இம்மாநாடு அடியோடு மறுப்பதுடன், அதை ஆதரிக்கும் மதம், வேதம், சாத்திரம், புராணங்களையெல்லாம் பொது மக்கள் பின்பற்றக் கூடாதென்றும்,

‘வருணாசிரமமென்ற கொடுமையான கட்டுப்பாட்டையும், சமுதாய முறையில் காணப்படும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவுகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடாதென்றும்,

‘மனித நாகரீகத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து, எல்லாப் பொதுத் தெருக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலிய பொது நிறுவனங்களைத் தட்டுத் தடங்கலின்றி அனுபவிக்கச் சகல மக்களுக்கும், சம உரிமை கொடுக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.

அறுபது ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இம்முடிவில், எந்தப் பகுதி தேவையற்றது? எந்தப் பகுதி காலத்துக்கு முந்தியது? எந்தப் பகுதி தீங்கானது? எதுவும் தேவையற்றது அல்ல; எதுவும் அவசரப்பட்டு பிறந்து விடவில்லை. நெடுங்காலம் பொறுத்துக் கொண்டிருந்த பிறகே, இப்போர்க்குரல் ஒலித்தது.

சமுதாய ஏணியின் உச்சியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு மட்டுமே தீங்கானதாகத் தோன்றக் கூடிய இப்புரட்சி முரசு, சமுதாயத்தில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர்களின் தூக்கக் கலைப்பிற்கு உதவியது. சமத்துவ நிலைக்குத் துணையானது.

அறுபது ஆண்டுகளாக, இப்போர் முரசு கொட்டியும், அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு விதியைச் சேர்த்திருந்தும், இன்றும் படித்துறையில், சுடுகாட்டில், இடுகாட்டில் வேற்றுமை அடியோடு ஒழிந்தபாடில்லை. இங்கும், அங்கும் ஒட்டிக் கொண்டுதான் தமிழகத்தில் இருக்கிறது.

பெரியாரின் தன்மான இயக்கம், தமிழகத்தில் தோன்றிப் போராடியிரா விட்டால், இன்றும் எண்ணற்ற வட மாநில ஊர்களில் நடப்பது போல், தாழ்த்தப்பட்ட, பின் தங்கிய சாதிகளைச் சேர்ந்தோர், பெரிய சாதித் தெருக்களில் நடக்கும் போது, செருப்புப் போட்டுக் கொண்டோ, சட்டை அணிந்தோ நடக்கக் கூடாது என்னும் காட்டு மிராண்டிக் காலத்துக் கொடுமை, இங்கும் கொடி கட்டிப் பறந்திருக்கும்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் சிற்றுண்டி, உணவுச் சாலைகளில், பல சாதியினர் நுழையக் கூடாது. நுழைய உரிமையுடையவர்களிலும், பார்ப்பனருக்குத் தனியிடம், மற்றவர்களுக்குத் தனியிடம் என்னும் இழிவுப்பாடு பின்பற்றப்பட்டது.

இது தனியார் உணவுச் சாலைகளில் பின்பற்றப்பட்டது போன்றே, வெள்ளைக்காரக் கம்பெனிகள் நடத்திய இரயில்வே சிற்றுண்டிச் சாலைகளிலும் கடைபிடிக்கப்பட்டது. அம்முறைக்கு எதிரான முடிவுகளும், முதல் சுயமரியாதை மாநாட்டையொட்டிய இளைஞர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டன.

‘வகுப்பு பேதம் காண்பிக்கப்படுகிற எல்லா ஓட்டல்களையும், காப்பி கிளப்புகளையும் இந்த மாநாடு கண்டிப்பதுடன், இவ்வித விஷமத்தனமான பேதங்களுள்ள ஓட்டல்களுக்கும், காப்பி கிளப்புகளுக்கும், அவ்விடத்திலுள்ள அதிகாரிகள் லைசென்ஸ் கொடுக்கக் கூடாதென்றும் கேட்டுக் கொள்கிறது.’ இது தனியார் நடத்தும் உணவுச் சாலைகளைப் பற்றியது.

அடுத்து ‘இரயில்வே அதிகாரிகள் தங்கள் வசத்திலும், மேற்பார்வையிலும் உள்ள சாப்பாட்டுச் சாலைகளிலும், சிற்றுண்டிச் சாலைகளிலும் சாதி, மதம், வகுப்பு, நிறம் முதலியவற்றைப் பொறுத்து, எவ்வகையிலும் வேற்றுமையாகப் பிரயாணிகளைப் பாராட்டாமலிருப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனே கைக்கொள்ளுமாறும், இம்மாநாடு கேட்டுக்கொள்ளுகிறது’ என்னும் ஓர் முடிவும் செய்யப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில், அமெரிக்காவில் பின்பற்றப்படும் நிற ஒதுக்கல் முறையைப் போலவே, இந்தியாவில் பின்பற்றப்படும் ‘வருண ஒதுக்கல்’ முறையும், கல்லியெறியப்பட வேண்டிய அநீதியாகும். இதற்காகப் பாடுபட்டது பெரியாரின் தன்மான இயக்கமே என்பது மிகையல்ல.

‘மக்கள் தங்கள் பெயர்களோடு, சாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டு விட வேண்டுமென்று இம்மாநாடு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது’ என்பது மற்றோர் முடிவாகும். இப்புதுமையான முடிவைக் கேட்டு, மிரண்டவர்கள் பலர் ஆவார். இதற்கு எதிராக முணுமுணுத்துக் கொண்டிருந்தவர்களும் ஏராளம். ஆயினும், இக்கோட்பாடு வெற்றி பெற்று வருவதைக் காண்கிறோம்.

ஈசன், சந்தானம், சிவசைலம், அருணாசலம், ராமசாமி, இராமகிருஷ்ணன், சௌந்தரராசன், கிருஷ்ணசாமி, தாமோதரம் என்று சாதிக் குறியை விட்டு விட்டுச் சொல்லுவது, பெரிய இடத்து மரபாகி விட்டது.

பெரியாரைக் கிண்டல் செய்தவர்களின் பிள்ளைகளே, இப்படி இருப்பதைக் காணும் தன்மான இயக்கத்தவர் உள்ளங்கள் உவகை கொள்ளாமல் இருக்க முடியுமா? இது பொதுமக்கள் முறையாகத் தழைக்க வேண்டும். சாதிப் பெயர் ஒட்டடைகள் எங்குமில்லாது துடைக்கப்பட வேண்டும். ஆகவே, பகுத்தறிவு இயக்கத்திற்கு இன்னும் தேவையிருக்கிறது.

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத, மேல் சாதி—கீழ்ச் சாதி முறையைக் காக்கும் கோட்டைகளாக விளங்குபவை இந்துக் கோயில்களே. அவற்றுள் நுழைய உரிமையுடையவர்களில், பெரும்பாலோர் எட்டி நின்று கும்பிட மட்டுமே உரிமையுடையவர்கள்.

அரசியல் தலைவர்களை ,அதிகாரிகளை அணுகுவதற்குத் தரகர்கள் தேவை என்பது நம்முடைய முறையாகும்.

கடவுள் நம்பிக்கையாளர்கள் என்ன சொல்லுகிறார்கள்? நாம் அனைவரும் ஆண்டவனின் பிள்ளைகள் என்று பறை சாற்றுகிறார்கள். ஆண்டவன் எல்லாமறிந்தவன்; எல்லாம் வல்லவன் என்று முரசு கொட்டுகிறார்கள். அப்படியானால், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தம் பிள்ளைகளிற் பெரும்பாலோரைத் தாழ்த்தி வைத்திருப்பது, தெரிந்திருக்க வேண்டுமே!

அக்கொடுமையை நொடியில் அழித்திருக்க வேண்டுமே! ஏன் பொறுமை என்று கேட்டால், ஆத்திகர்கள் ஆத்திரப்படுவார்கள். அது கிடக்கட்டும். இப்போது கோயில் வழிபாடு பற்றி, முதல் மாகாண சுயமரியாதை மாநாடு மேற்கொண்ட முடிவைக் கவனிப்போம்.

‘கடவுள் என்பதின் பேரால், கோயில்களிலாவது அல்லது வேறு இடங்களிலாவது ஒரு பைசாவாவது, ஒரு பைசா பெரும்படியான சாமானாவது செலவழிக்கக் கூடாதென்றும் வணங்குகிறவனுக்கும், வணங்கப்படுவதற்கும் மத்தியில் தரகனாவது, வட மொழியாவது இருக்கக் கூடாதென்றும் இம்மாநாடு கருதுகிறது.

‘இனி மேல், கோயில்கள் புதிதாய்க் கட்டக் கூடாதென்றும், இப்போதிருக்கிற கோயில், மடம், சத்திரம், வேத பாடசாலை முதலியவைக்காக விட்டிருக்கும் சொத்துக்களைக் கைத்தொழில், வியாபாரம், ஆராய்ச்சி முதலிய கல்விகளுக்காகவும் கைத் தொழிலுக்காகவும் செலவழிக்க முயற்சி செய்ய வேண்டுமாய், பொதுமக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.’

‘கோயில்களில், உற்சவங்கள் முதலியவை கொண்டாடுவதை நிறுத்திக் கொண்டு, அவற்றிற்குப் பதிலாகப் பொதுமக்களுக்கு அறிவு வளர்ச்சி, உடல் நல வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி முதலியன சம்பந்தமான பொருட்காட்சிகளை நடத்தி, மக்களுக்கு அறிவும், செல்வமும் ஏற்படச் செய்ய வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.’

தன்மான இயக்கம் முளை விட்ட போது, கடவுள் மறுப்பு இயக்கமாகத் தலை காட்டவில்லை என்பது வெளிப்படை. கடவுள் பெயரைச் சொல்லி, சோம்பேறிக் கூட்டத்தின் சுரண்டல் முறைக்குக் காரணமாகவும், ஆதரவாகவும் இருந்து வந்த நடை முறையை மட்டுமே மாற்றியமைக்க முளைத்தது. தரகு முறையை ஒழிக்க முயன்றது.வழிபாட்டு நேரத்தைக் கூட தமிழையும், தமிழர்களையும் இழிவுபடுத்தும் வாய்ப்பாகப் பயன்படுத்தியதை மாற்ற முன் வந்தது.

‘உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தையும், மொழிகள் அனைத்தையும் படைத்தவர் ஒருவரே’ என்று சொல்லி விட்டு, அந்த ஒருவரைத் தமிழால் பாடினால், அவருக்குப் புரியாது; அதோடு அவர் தீட்டாகி விடுவார் என்பது எவ்வளவு முரண்பாடு! இம்முரண்பாட்டை விலை கொடுத்து வாங்கும் இழிவை, மானமுள்ளவர்கள், அறிவுடையோர் போக்க வேண்டாமா?

தமிழர் பல தலைமுறையாக ஏற்றுக் கொண்டிருந்த இம்முரண்பாட்டை—இழிவைப் போக்க தன்மான இயக்கம் துணிந்து போராட முன் வந்தது. தமிழர்கள் மெய்யான தமிழ்ப் பற்றுள்ளவர்களாக இருந்திருப்பின், தன்மான இயக்கத்தின் இம்முடிவையாகிலும், உரத்த குரலில் ஆதரித்திருப்பார்கள். வழிபாடு தாய்த் தமிழில் நடக்கும்படி செய்திருப்பார்கள்.

இந்தியாவில் கோயில்கள், தனியுடைமைக் கொடுமையின் செறிவாக உள்ளன. நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமான நிலமும், சொத்தும் தனியார் உடைமையானதைப் போன்றே, கொடுமையானவை, தீங்கானவை கோயிற் சொத்துக்கள். அவை அர்ச்சகர்க்கு, பூக்கட்டுவோர்க்கு, நாயனம் வாசிப்போர்க்கு பிழைக்க வழி செய்கின்றன என்று சொல்லி, அத்தகைய பாழடிப்பை நியாயப்படுத்த முடியாது.

அண்ணல் காந்தியடிகள் கோயில்கள், விபச்சார விடுதிகள் என்று ஒரு முறை கடுமையாகக் கூறினார். ஏன்?

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, ‘தாசி’ இல்லாத கோயில், கோயிலாக மதிக்கப்படுவதில்லை. தாசிகள் திருமணஞ் செய்து கொள்ளக் கூடாது. தேவர்க்கு அடியாள்களாக பொட்டு கட்டிக் கொண்டு, கோயில் திருவிழாக்களில் சதுர் ஆட வேண்டும். பாட்டுப் பாட வேண்டும். இப்படி வாழ்கின்ற கன்னிகளை, பணம் கொழுத்தவர் சும்மா விட்டு வைப்பார்களா?

கூடா ஒழுக்கமும், பரத்தையர் இல்லம் போதலும் தழைத்தது. பக்தனை, இறைவனே பரத்தையர் இல்லத்திற்கு அழைத்துப் போனதாகக் கதை கட்டி, அதையே வெட்கமின்றி காலட்சேபஞ் செய்யும் சமுதாயத்தில், விபசாரம் பெருகிற்று. அதன் வேடந்தாங்கலாகக் கோயில்கள் இருந்தன.

அதனால்தான் காந்தியார் கோயில்களை, ‘விபசார விடுதிகள்’ என்று சொல்ல நேர்ந்தது. தேவர் அடியார்களுக்கும் மான்யம் உண்டு. இத்தகைய சொத்தை எப்படி நியாயப்படுத்துவது? மொத்தத்தில் சொத்து என்பதே, பலவிதத் தகாத செயல்களுக்குக் கொடுக்கப்படும் இலஞ்சமே.

கோயில் சொத்துக்களில் கணிசமானவை, அவற்றிலுள்ள நகைகள் ஆகும். இந்துக் கோயில்களில் காசு மாலைகளாக, வைர முடிகளாக, மூக்குத்திகளாக, முடங்கிப் பாழாகிக் கிடக்கும் சொத்தின் மொத்த மதிப்பு சில கோடியல்ல, பல கோடியல்ல, அதற்கும் மேலே; பல கோடி கோடியாகும். இவற்றைப் பணமாக்கி, தொழில்களைத் தொடங்கினால், எல்லார்க்கும் வேலை கொடுக்க முடியும்.

பழங்குடி மக்கள் எங்கெங்கே ஓட்டை போட முடியுமோ, அங்கெல்லாம் ஓட்டை போட்டு, எதையாவது மாட்டிக் கொள்ளுவார்கள். இரு கைகளிலும், கால்களிலும் எலும்பு வளையல்களையும், காப்புகளையும் மாட்டிக் கொண்டு திண்டாடுவார்கள். நாகரீகம் முதிர, முதிர நகைகளின் எண்ணிக்கை குறையும்; எடை குறையும்.

இங்குள்ள புல்லுருவிக் கூட்டமோ, ஒரு கோடி மதிப்பில் ஏற்கனவே முடங்கிக் கிடக்கும் வைர முடி போதாதென்று, மற்றோர் வைர முடி, அதே மதிப்பில் செய்ய முயல்கிறது. இந்தக் காட்டுமிராண்டி காலத்து ஆடம்பரத்தைக் கண்டிக்க ஆள் இல்லை.

கோயிலுக்குத் தங்கக் கூரை வேய்வதும், தங்கத் தேர் செய்வதும் அருவருப்பான, ஆடம்பரச் செயல்கள்.

டாடாவுக்குப் பணம் குவிந்திருப்பதால், அவர் தங்கக் காரில் பவனி வந்தால் எப்படி மதிப்பிடுவீர்கள்? அந்த ‘ஆடம்பரம்’ அருவருப்பாக இராதா? ‘பீரோ’ நிறைய பட்டுப் புடவைகளை அடுக்கி வைத்திருக்கும் சீமாட்டியைக் கிண்டல் செய்யாத எழுத்தாளன் உண்டா?

பல சிலைகளுக்கு இரண்டு மூன்று தங்கப் பூணூல்கள்; ஒன்றுக்கு மேற்பட்ட முடிகள்: மாற்று அணிகள். கடவுள் நம்பிக்கையாளர்களைப் பணிவோடு கேட்கிறேன். இவை நம்பிக்கையின் அடையாளங்களா? வழிபாட்டிற்கு இவை தேவையா? இன்றைக்கு நாணமூட்டக்கூடிய பகட்டு அல்லவா?

இறைவன் ஓருருவம், ஒரு நாமம் இல்லான்—பிச்சாண்டி என்றெல்லாம் சொல்வது உண்மையா? பாமரர்களை ஏமாற்றவா? உண்மையானால், கோயில் நகைகளில், பலவற்றைக் கொண்டு, அறிவு வளர்ச்சிக்கு, துப்புரவுப் பெருக்கத்திற்கு, மக்களை இழிவிலிருந்து விடுவிப்பதற்குச் செலவிடுதல் எப்படிக் குற்றமாகும்? இதை, அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். கேளாக் காதர்களாகத் தொடரலாமா?

இந்திய அரசியல் விடுதலைக்குப் பின், நம் சமுதாயத்தில், மந்தைப் போக்கையே அதிகம் வளர்த்துள்ளோம். அப்போக்கு, கடவுள்களின் பேரால் முன்னர், பாழாக்கியதிலும் பலமடங்கு அதிகமான சொத்தை முடக்கவும், பாழாக்கவும் பெருந்துணையாக நிற்கிறது.

தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி தோற்றுவித்த தன்மான இயக்கம், சாதி ஏற்றத் தாழ்வுகளைத் தகர்த்து, எல்லாரையும் ஒரு நிலை மக்களாக்கும் குறிக்கோளோடு தொடங்கியது. தன்மான இயக்கத்தின் பார்வை குறுகியது அல்ல; விரிந்தது. வாழ்க்கையின் எல்லா நோய்களுக்கும் மருந்துகளைக் காட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/04&oldid=1690006" இலிருந்து மீள்விக்கப்பட்டது