உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியாரும் சமதர்மமும்/05

விக்கிமூலம் இலிருந்து

5. இந்தியச் சூழலில்
பாட்டாளிகள் யார்?

உலகில் இந்தியா நீங்கிய வேறெந்த நாட்டிலும் இல்லாத கொடுமை, சாதியேற்றத் தாழ்வாகும். கீழ்ச்சாதி மக்கள் என்று கருதப்படுவோர்களும், தொழிலாளர்களும் ஒரே கூட்டத்திற்கு இரு பெயர்களாகும். சம தூரத்தில் ஓடும் இருப்புப் பாதை போல, இந்தியாவில் ‘சின்ன சாதிகள்’ என்று அழைக்கப்படுபவையும், ‘தொழிலாளர்’ என்று அழைக்கப்படுவோர்களும் இருப்பதைக் காணலாம்.

உடலை வாட்டி, வதைத்துச் செய்ய வேண்டிய தொழில்களைச் செய்வோர் தொழிலாளிகள் ஆவார். நம் இந்தியச் சூழ்நிலையில், சேற்றிலே இறங்கி உழுவோர் யார்? அத்தொழிலாளர்கள், கீழ்ச்சாதி என்று காலகாலமாகக் கருதப்பட்டு வருகிறார்கள். வண்டியோட்டும், வண்டியிழுக்கும் பாட்டாளி யார்? மரபுப்படி கீழ்ச்சாதி. மூட்டை தூக்கிகள், சமுதாய ஏணிப் படிக்கட்டுகளில் கீழே இருப்பவர்கள். துணி நெய்வோர் யார்? அத்தொழிலாளிகளும் கீழ்ச்சாதி மக்கள் என்று கருதப்படுகிறார்கள். குப்பை வாருவோர் யார்? கடைநிலைச் ‘சாதி’.

துப்புரவு (தோட்டி) வேலை செய்யும் மேல் ‘சாதி’ இல்லை. குப்பை வாரும் பெரிய ‘சாதி’ இல்லை. நெய்தலும், உழுதலும் செய்யும் மேட்டுச் சாதிகள் இல்லை. எனவே, தன்மான இயக்கம், தொழிலாளர் நலத்தில், இயற்கையான அக்கறையும், ஈடுபாடும் கொண்டிருந்தது.

1929இல் செங்கற்பட்டில் நடந்த முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில், தொழிலாளர் நலன் பற்றி, ஒரு குறிப்பிடத்தக்க முடிவினை மேற்கொண்டார்கள். அது நாட்டு நலனுக்குத் தொழிலாளர் நலன் தேவையென்று சுட்டிக் காட்டியது; சுக வாழ்க்கைக்குத் தேவையான ஊதியம் வேண்டுமென்பதை வற்புறுத்திற்று. தொழிலில் கிடைக்கும் இலாபத்தில், தொழிலாளர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டுமென்றது. இன்றைக்கும், பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத, ஆனால், நாகரிக சமுதாயத்தில் நிலவ வேண்டிய முற்போக்குக் கொள்கைகளை, அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, பெரியதோர் மாநாட்டில் வைத்து, ஒப்புதல் பெற்ற பெருமை, சுயமரியாதை இயக்கத்திற்கு உரியதாகும். தொழிலாளர் நலன் பற்றிய மாநாட்டு முடிவு இதோ:

‘நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்கும், தொழிலாளர்களுடைய முன்னேற்றம் அவசியமானபடியால், அவரவர்களின் வேலைக்குத் தகுந்தபடியும், அவர்கள் சுகமாக வாழ்வதற்கு வேண்டிய அளவு கூலி கொடுக்கவும், ஒவ்வொரு தொழிலிலும் கிடைக்கும் இலாபத்தில், அந்தத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான பங்கு கொடுக்க வேண்டுமென்றும், இம்மாநாடு தீர்மானிக்கிறது.’

இலாபத்தில் பங்கு கொடுக்கும் திட்டத்தை, ஈ.வெ.ரா., பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன்னரே, ஈரோட்டுப் பெரு வணிகராக இருந்த காலத்திலேயே, நடைமுறைப் படுத்தினார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பது இயற்கை. அவை சிற்சில வேளை, போராட்டங்களாக உருவெடுப்பதும் உண்டு. அவை தனியுடைமை அமைப்பின் நோய்களாகும். அத்தகைய போராட்டங்கள் வெடிக்கும் போது, அரசு நடு நிலைமை வகிக்க வேண்டும்; சட்டம், அமைதி காக்கிற சாக்கில், இருக்கும் சுரண்டல் நிலைக்குத் துணை நிற்பது சரியல்ல. சில வேளை, வேலை நிறுத்தத்தை உடைக்க, பலவித சூழ்ச்சிகளில், தொழிலதிபர்கள் முனைவதுண்டு. அந்தச் சமயங்களில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய ஆட்சி, செல்வமும், செல்வாக்கும் மிகுந்த தொழிலதிபர்களுக்கு ஆதரவாகவும், வாழ்க்கைப் போராட் டத்தில் தவிக்கும் தொழிலாளர்களுக்குப் பாதகமாகவும் நடந்து கொள்ளக் கூடாது; நடு நிலைமையில் இருத்தல் வேண்டும். இதுவே சரியான நடைமுறை; நீதியான நடைமுறை. இதைச் செங்கற்பட்டு மாநாடு—அரை நூற்றாண்டுக்கு முந்திய மாநாடு—வரையறுத்துச் சொல்லுகிறது.

அம்மாநாட்டுக்கு முந்திய இரண்டு ஆண்டுகளில், ஆங்கிலேயருடைய சொத்தாக இருந்த தென்னிந்திய இரயில்வேக்கும், அதில் வேலை செய்த தொழிலாளர்களுக்குமிடையில் கடுமையான கருத்து வேறுபாடுகள் வளர்ந்தன. இரயில்வே தொழிலாளர் பொது வேலை நிறுத்தத்தில் இறங்க வேண்டிய நிலையை— நெருக்கடியை—உருவாக்கியது கம்பெனி நிர்வாகம். அவ்வேலை நிறுத்தங்களின் போது, தொழிற் சங்கத் தலைவர்களான தோழர்கள் முகுந்தலால் சர்க்கார், மா.சிங்காரவேலு மட்டுமின்றி, தொழிலாளர்களுக்கு ஆதரவு தந்த ஈ.வெ.ராமசாமியும் சிறைப்பட்டார் என்பது வரலாற்றுச் செய்தியாகும்.

முதல் மாகாண சுயமரியாதை மாநாடு நடக்கும் போது, இந்தியாவை ஆண்டவர்கள் ஆங்கிலேயர். தென்னிந்திய இரயில்வே ஆங்கிலேயருடையது. ‘ஆங்கில ஆட்சிக்கு ஆதரவானவர்கள்’ என்று பொய்யாகக் குற்றஞ் சாட்டப்பட்ட சுயமரியாதைக்காரர்களின் முடிவை ஆழ்ந்து கவனியுங்கள். இதோ அம்முடிவு:

‘தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தில், அரசாங்கத்தார் நடு நிலைமை வகிக்காததற்காக, அவர்களைக் கண்டிப்பதுடன், அநியாயமாய்த் துன்பப்பட்ட தொழிலாளர்களிடம், இம்மாநாடு அனுதாபம் காட்டுகிறது.’

செங்கற்பட்டின் சுயமரியாதை மாநாட்டின் முடிவுகள், தமிழகமெங்கும் எதிரொலித்தன. சாதிப் பெயர்களைப் பற்பலர் விட்டு விட்டனர். கோயிலுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டோர் பலர்.

‘கும்பிட்ட கைக்கொரு செம்புக் காசேனும் தராத தெய்வத்தை நம்பாதே’ என்று அறிவுறுத்தும் பாட்டுக் கூட, மேடைகளில் முழங்கியது. பெரும்பான்மையோரான நம்பிக்கையாளர் மனம் புண்படும் என்று காரணம் காட்டி, கடவுள் மறுப்புப் பாடலைத் தடை செய்ய எவரும் முன் வரவில்லை. அந்தக் கால கட்டத்தில், வசந்த கால மரமாகத் தழைத்தது, சுயமரியாதை இயக்கம்.

அதன் இரண்டாவது மாகாண மாநாடு, 1930 மே திங்களில் ஈரோட்டில் பெரியாரின் நேரடி ஏற்பாட்டில் கூடியது; பம்பாயைச் சேர்ந்த பிரபல அறிஞரும், முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டவருமான எம்.ஆர்.ஜெயகர் அவர்கள் தலைமையில் கூடிற்று.

இரண்டாவது மாநாட்டிலும், வருணாசிரம மறுப்பு, சாதி ஏற்றத் தாழ்வுக்கு உடன்படாமை, சாதிப் பட்டங்களை விடுதல், தீண்டாமையொழிப்பு முதலானவை பற்றி, ஏற்கனவே மேற்கொண்ட முடிவுகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டன.

‘வருணாசிரமக் கொள்கையும், சாதிப் பிரிவினையுமே இந்திய சமூகக் கேடுகளுக்கு மூல காரணமென்று இம்மாநாடு கருதுகிறது.’

அறுபது ஆண்டுகளாக இக்கருத்து பரவி வருகிறது. இதை எதிர்ப்போர் குறைந்து வருகிறார்கள். இருப்பினும் சாதி முறை சாகவில்லை. இன்னும் உயிரோடு இருக்கிறது எதனால்?

‘கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி, நாட்டத்தில் கொள்ளாரடி!’ என்று பாரதியார் நம்மை இடித்துரைக்கிறார். வழுக்கி ஓடி விடும் இந்த இயல்பே, சாதி வேற்றுமைகளை இன்றும் உயிரோடு வைத்திருக்கிறது. இளைஞர்கள் சூளுரைத்துக் கொள்ள வேண்டும். பிறவி முதலாளித்துவத்தை விரைந்து முறியடிப்பதென்று இளைஞர்கள் சூளுரைத்துக் கொள்வார்களாக!

‘பிறவியினால் ஏற்றத் தாழ்வு ஏற்படும் என்னும் கொள்கையை, இம்மாநாடு மறுப்பதுடன் அக்கொள்கையை வெளியிடும் வேத புராணங்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கிறது.’

வேத புராணங்கள், சாதிப் புற்றுநோய்க்கு மூலங்கள் ஆகும். மூலங்கள் தொலைந்தால், அதிலிருந்து வளர்ந்த சாதி ஏற்றத் தாழ்வுகள் நிலைக்காது. இதனால்தான், நம் மக்களுடைய நல்வாழ்வுக்கு, சமத்துவ வாழ்வுக்கு, நம் சமய நம்பிக்கை, அதைத் தாங்கி நிற்கும் வேத புராண ஆதிக்கம் தொலைய வேண்டும்.

தீண்டாமை என்னும் கொடுமை, மனித தர்மத்திற்கு விரோதமென்று ஈரோட்டு மாநாடு முடிவு செய்தது. பொதுச் சாலைகள், குளங்கள், கிணறுகள், தண்ணீர்ப் பந்தல்கள், கோயில்கள், சத்திரங்கள் முதலிய இடங்களில் சகலருக்கும் சம உரிமை வழங்க வேண்டுமென்று அம்மாநாடு முடிவு எடுத்தது.

கோடைக் காலத்தில் வாடிக் கிடக்கும் அருகம் புல்லைப் போல, தீண்டாமைக் கொடுமை தமிழகத்தில் தழைக்காமல் வாடி வதங்கிக் கிடப்பதற்குக் காரணம், தன்மான இயக்கத்தின் இடைவிடாத, தீவிரப் பணியாகும்.

வட மாநிலங்களில் இத்தகையச் சமத்துவ இயக்கம் பரவாமையால், மறைந்து விட்ட சம்பூரணானந்த் என்பவரின் சிலையை, அன்றைய இந்திய அமைச்சர் தோழர் ஜகஜீவன்ராம் திறந்து வைத்ததால், அச்சிலை தீட்டுப்பட்டு விட்டது என்று சொல்லி, அதன் மேல் கங்கை நீரை ஊற்றி, தீட்டைத் துடைக்கும் இறுமாப்பைச் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/05&oldid=1690007" இலிருந்து மீள்விக்கப்பட்டது