பெரியாரும் சமதர்மமும்/06
6. கோயில் சொத்துக்களும்
ஊதிய உச்சவரம்பும்
‘செங்கோலுக்கு முன்னே சங்கீதமா?’ என்பது நாட்டு வழக்கு.இதன் பொருள் என்ன? சட்டத்திற்கு முன்னே, எந்தப் பாட்டும் செல்லாது என்பதாகும். சமுதாயத்தில், நாட்டில் நடக்க வேண்டிய அடிப்படை மாற்றங்கள், சட்ட வலிமையால் மட்டுமே நடக்கும். வெறும் அறிவுரைகளும், அருளுரைகளும் போதிய பயனைக் கொடுக்காது.
குழந்தை மணம் கூடாது என்று எத்தனையோ முற்போக்காளர்கள் உணர்ந்தார்கள்; அவர்களில் துணிச்சலுடையோர் ஊரறிய உரைத்தார்கள்; ஆனால், கேட்டு நடந்தவர்களோ சிலர். இப்படிப் பல்லாண்டுகள் கழிந்த பின், குழந்தை மணங்களைத் தடுக்கும் ‘சாரதா சட்டம்’ என்ற பெயரில் ஓர் சட்டம் 1930இல் இயற்றப்பட்டது. அப்போது பெண்களுக்குக் குறைந்த அளவு திருமண வயது, பதினான்காக இருக்க வேண்டுமென்று சட்டம் கூறிற்று. அதைக் கூட மீறுவோர், இந்தியாவின் பல மாநிலங்களில் பலர் ஆவார். இன்றையத் தமிழ்நாட்டில் அத்தகையோர் இல்லை என்றே சொல்லி விடலாம். தமிழ்ச் சமுதாயத்திற்கு, அந்த அளவு அறிவு வரக் காரணமாயிருந்தவர் எவர்? தந்தை பெரியாரும், அவர் தோற்றுவித்த தன்மான இயக்கமுமே. பெரியாரைப் போன்ற புரட்சியாளரையும், தன்மான இயக்கத்தைப் போன்ற புரட்சி இயக்கத்தையும் பெறாததால், பல மாநிலங்கள் இன்னும் இருட்டறையில் உள்ளன. இதிலிருந்து என்ன தெரிகிறது? பரவலான, பயனுள்ள, நிலையான, தலை கீழ் மாற்றங்களை உருவாக்க, மக்கள் மனங்களை மாற்றும் இடைவிடாத பிரசாரமும், அதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் சட்டங்களும் தேவை என்பது தெரிகிறது. இதை, ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, தன்மான இயக்கத்தவர்கள் உணர்ந்தார்கள். அதன் விளைவு?
‘பிறப்பின் பேரால் ஏற்பட்ட சமூகக் கொடுமையையும், வேற்றுமையையும் அடியோடு ஒழிப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள், பெரிதும் அவைகளைக் காப்பாற்ற ஏற்பட்டவர்களின் தீவிர முயற்சிகளால் வெற்றி பெறாத நிலையில் இருப்பதால், பொதுமக்கள் முன்னேற்றத்தைக் கருதி, அவைகளைச் சட்டத்தின் மூலம் ஒழிக்க வேண்டுமென்று இம்மாநாடு கருதுகிறது.’—இம்முடிவு, ஈரோட்டில் நடந்த இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டின் முடிவுகளில் ஒன்றாகும்.
சட்டத்தின் வலிமை சேர்ந்ததால் அல்லவா, பிற்காலத்தில் கோயில் நுழைவு தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமையாயிற்று! தீண்டாமையை எந்த வடிவத்திலும் அனுசரிப்பதைத் தடை செய்யும் அரசியல் சட்டம் இருப்பதாலன்றோ, வெளியே நிறுத்தி, கொட்டாங்குச்சியில் தேனீர் ஊற்றுவதைக் குற்றமாக்கித் தண்டிக்க முடிகிறது? சட்ட ஆதரவு இல்லாத எந்தச் சீர் திருத்தமும், மணல் வீடு கட்டியதற்கு ஒப்பாகும். சட்ட ஆதரவு இல்லாத நிலையில், தனிப்பட்ட முற்போக்காளர்கள் சிலரோ, பலரோ வாழ்க்கை முறையாக்கிக் கொண்ட சமூக சமத்துவமோ, பொருள்களைப் பகுத்துண்ணுதலோ, பரந்த சமுதாய வாழ்க்கை முறையாகி விடாது
செல்வர்கள், தாங்களாகவே அறங்காவலர்களாகி, சமுதாயத்தைத் தாங்கிக் கொள்வார்கள் என்னும் கற்பனையில், மதி மயங்கி இந்தியா நாற்பது ஆண்டு தன்னாட்சியை வீணாக்கி விட்டது. சட்டபூர்வமாக நில உச்ச வரம்பு வந்ததால், பெரிய புள்ளிகள், தந்திரமாகத் தப்பித்துக் கொண்டாலும், எண்ணற்றோரிடமிருந்த நிலக் குவியல்கள் குறைந்தன. செல்வர்கள், அறங்காவலர்கள் ஆகி விடுவார்கள் என்று நெருப்புக் கோழியின் மனப்போக்கை மேற்கொள்ளாதிருந்தால், என்ன செய்திருப்போம்? பிற வகையான சொத்துக்களை நாட்டுடைமையாக்கா விட்டாலும், அவற்றிற்கும் உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்திருப்போம். நடக்க முடியாத அற்புதங்கள் நடக்குமென்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டே வந்ததால், ‘பெருந்தொழில்களா, சிறு தொழில்களா?’ என்னும் வெட்டி மன்ற வாதங்களில், இத்தனை ஆண்டுகளைப் பாழாக்கி விட்டோம்.
ஈரோட்டு மாநாட்டுக்குத் திரும்புவோம்.
‘பூசாரிகளுக்குத் தற்காலம் விடப்பட்டிருக்கும் மானியங்களை ரத்து செய்ய வேண்டுமென்பது’ அம்மாநாட்டின் மற்றோர் முடிவு ஆகும். இது பூசாரிகள் மேல் உள்ள வயிற்றெரிச்சலால் செய்யப்பட்ட முடிவு அல்ல. பின் எதனால்? வணங்குவோருக்கும், வணங்கப்படுவதற்கும் மத்தியில், தரகரையோ, பூசாரியையோ ஏற்படுத்துவது சுயமரியாதைக்கு விரோதமென்றும், தெய்வ வணக்கத்திற்குப் பணச் செலவு அனாவசியமென்றும் அம்மாநாடு கருதிற்று. கடவுள் நம்பிக்கையுடையவர்களும், காய்தல், உவத்தல் அற்ற அறிவு நிலையில் நின்று சிந்திப்பார்களானால், தந்தைக்கும், பிள்ளைகளுக்குமிடையில் கூலிக்காரனுக்கு வேலையில்லை என்னும் முடிவுக்கே வருவார்கள்.
நம் இந்தியாவில், தனியுடைமை முறையின் கீழ், தனிப்பட்ட மனிதர்களின் ஒட்டு மொத்த உறிஞ்சலை விட அதிகப்படியானது நம்முடைய கோயில்கள், மடங்கள், சத்திரங்கள் ஆகியவற்றின் கூட்டு உறிஞ்சல் ஆகும். இவற்றால் பாழாகும் பணம் கணக்கில் அடங்கா. இவற்றைக் காப்போராகக் கருதப்படுவோர், விழுங்கும் பணம் கொஞ்சமல்ல. இது உலகறிந்த உண்மை. ஆனாலும், கோயிற் பூனைகளுக்கு, அறங்காவலர்களாகத் திரியும் பல காட்டுப் பூனைகளுக்கு மணி கட்டுவது யார்? தன்மான இயக்கம் இன்றியமையாத அப்பணியை மேற்கொண்டது ஈரோட்டு மாநாட்டிலேயே.
கோயில்கள், மடங்கள் ஆகியவைகளின் வருமானங்களை—படிப்பு, சுகாதாரம் ஆகிய அபிவிருத்திக்காகச் செலவிடுவதுதான் மேலென்றும், புதிதாக மடங்களும், வேத பாடசாலைகளும், அன்ன சத்திரங்களும் கட்டுவது அனாவசியமென்றும் முடிவு செய்யப்பட்டது. இம்முடிவின் முற்பகுதி ஓரளவு செயல்படுவது பகுத்தறிவாளர்களின் தொடர்ந்த தொண்டால். பிந்திய பகுதி செயலுக்கு வரவேயில்லை என்றால் மிகையல்ல. இது, முடிவில் உள்ள குறைபாட்டால் அல்ல; தமிழர்களுக்கே தனியுடைமையாக உள்ள முனைப்பான விதண்டாவாதத்தால்; ஏட்டிக்குப் போட்டிப் போக்கால் என்பவை வெளிப்படை.
ஈரோட்டு மாநாட்டின் போதே, அதாவது 1930லேயே, தன்மான இயக்கத்தில் சமதர்மக் கோட்பாடு இழையோடிற்று. இதோ ஓர் எடுத்துக்காட்டு. சுயமரியாதை இளைஞர் மாநாட்டின் முடிவுகளில் ஒன்று என்ன சொல்லுகிறது தெரியுமா?
அரசாங்கத்திலுள்ள எந்த உத்தியோகக்திற்கும், மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் ஏற்படுத்தாதிருக்கும்படி, அரசாங்கத்திற்கும், அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்ளுகிறது.எதை எதையோ சொல்லி, ஆட்சியைப் பிடித்தவர்கள், ஊதிய உச்சவரம்புக் கொள்கையையாவது, விடுதலை பெற்ற இந்தியாவில் நடைமுறைப்படுத்தியிருந்தால், நம் மக்களில் வறியவர்கள் எண்ணிக்கையும், விழுக்காடும் இப்போது பெருகியிருப்பது போல், பெருகியிராது. அகவிலை நஞ்சும், இன்றைய அளவிற்கு ஏறியிராது.
எங்கோ பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்தவர்கள் ஆங்கிலேய அதிகாரிகள். அவர்கள் இவ்வளவு தூரம் கடந்து வந்து, வெய்யிலைத் தாங்கிக் கொண்டு, பதவி வகித்து, கூடிய மட்டில் சுரண்டிக் கொண்டு போகவே, அந்நோக்கத்திற்கேற்ப ஊதியங்களை உயர்வாக வைத்துக் கொண்டார்கள். இதை மன்னிக்கா விட்டாலும், புரிந்து கொள்ளலாம்.
தன்னாட்சி பெற்றதும், சொந்த நாட்டு அலுவலர்களுக்கு மக்கள் வருவாய் நிலைக்கு ஏற்ப, ஊதியங்களைக் குறைத்திருக்க வேண்டும். பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம், அப்போதைக்கப்போது போய் வர வேண்டியவர்களுக்கு ஆகும் செலவு பெரிது. சென்னையிலிருந்து இருநூறு கிலோ மீட்டர் தூரத்திற்கும் குறைவாக உள்ள வளவனூருக்குப் போய் வர ஆகக் கூடிய செலவு, முந்தியதோடு ஒப்பிட்டால் குண்டுமணி அளவு. தன்மான இயக்கம் முதன் முதல் கூட்டிய—அனைத்திந்திய காங்கிரசு மாநாட்டில் பின்னர் முடிவு செய்த, ஊதிய உச்சவரம்புக் கொள்கையைக் கூட நம்முடைய தன்னாட்சி அரசுகள் நடைமுறைப் படுத்தவில்லை. விளைவு? வெள்ளைக்காரன் பீராய்ந்த அளவு, நம்மவர்களும் பீராய்ந்து கொண்டு வருகிறார்கள். இல்லை; மெல்ல, மெல்ல இந்தச் சலுகை, அந்த வசதி என்று மொத்த ஊதியப் பெருக்கத்தில் வெற்றி பெற்றபடியே இருக்கிறார்கள். இப்போது, நம்முடைய அதிகார வர்க்கம், சுரண்டுவதில் முதலாளி வர்க்கத்தோடு போட்டி போடுகிறது என்னும் கசப்பான உண்மையைச் சுட்டிக் காட்டுவது கடமை.
ஏன் ஊதிய உச்ச வரம்பு கொண்டு வரவில்லை? குழப்பம். என்ன குழப்பம்? சமதர்மப் பொருளியல் முறையே ,எல்லார்க்கும் வேலையும், கல்வியும், வாழ்வும் அளிக்கும் என்னும் உண்மை ஒரு பக்கம் மின்னிற்று. அதே நேரத்தில், ஆயிரம் ஆண்டுகளாக மங்கிய ஒளியில் கிடந்த செல்வர்கள், அறங்காவலர்கள் ஆகியோரது குருதியில் ‘ஈவது விலக்கேல்’ என்பது கலந்தது. அவர்களாகவே வலிய வந்து, ‘வறியரை வாழ்விப்பார்கள்’ என்னும் மாயைக்கு இருந்த அளவிற்கு மீறிய மரியாதை, அதன் புது ஒளியிலேயே வளர்ந்து விட்ட ‘மகான்கள்’, ‘சான்றோர்கள்’ ஆகியவர்களைப் பகைத்துக் கொண்டால், தங்கள் நிலை கவிழ்ந்து விடுமோவென்ற அச்சம். இந்த இரண்டு ஆடுகளில் ஊட்டிய குட்டிகளாக, நம் அரசியல் தலைவர்கள் இருந்து விட்டார்கள்.
ஆகவே, காற்றடித்த பக்கம் பறந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் காலம் நன்றாக ஓடிற்று. ஆனால், பொதுமக்கள் நிலையோ, பாம்புகள் நிறைந்த பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டவர்கள் நிலைக்கு ஒப்பாக இருக்கிறது.
இன்று ஏறத்தாழ, இரண்டு கோடி படித்த இளைஞர்கள், வேலை தேடும் நிலையங்களில் பெயர்களைப் பதிந்து விட்டு, வழி மேல் விழி வைத்து ஏங்குகிறார்கள். பூசாரி ‘சொர்க்கத்திற்கு’ அனுப்புவதாகக் கூறுவது போல், பொதுத் தேர்தலின் போது, இந்திய அரசியல் புரோகிதர்கள் வேலையில்லாத் திண்டாட்டதைத் தீர்த்து விடுவதாக உளமாரப் பொய் சொல்லுகிறார்கள். நாம் பின்பற்றும் தனியுடைமைப் பொருளியல் முறையில், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கி விட்ட நாடே இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்; தெரிந்தும், எதையோ சொல்லி வைக்கிறார்கள். எவரும், இதற்குப் பரிகாரம் காணவில்லை. ஏன்? இன்றையப் பொருளியல் முறை, தலைகீழாக மாற்றப்பட்டாலொழிய, வேலை வாய்ப்புகள் போதிய அளவு பெருகா.
இதை அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, தந்தை பெரியார் உணர்ந்தார்; ஊரறிய, உலகறிய உரைத்தார். நாம் கூடி நின்று ஆதரித்தோம். போராட வேண்டிய அளவுக்குப் போராடினோமா? கேள்விக் குறி.