13. மீரத் சதி வழக்கு :
பெரியாரின் கண்டனம்
தொழில் செய்பவர்கள் ஏழு மணிக்கு மேல் வேலை செய்யக் கூடாது என்று, 1952ஆம் ஆண்டு டிசம்பர் கடைசியில், பெரியார் முன்னின்று தீட்டிய சுயமரியாதை சமதர்மத் திட்டம் கூறிற்று. அது அன்றைய தொழிலதிபர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. எனினும், தொழிலாளர் வர்க்கம் ஓரளவு அமைப்புகளின் கீழ் இயங்குவதால், இத்திட்டம் எளிதில் நிறைவேறியது. டாக்டர் அம்பேத்கார் இந்திய அரசில் தொழில் அமைச்சரான போது, எட்டு மணி நேர வேலை நாள் சட்டப்படி நடைமுறைக்கு வந்ததை, இங்கே குறிப்பிட வேண்டும்.
ஈரோட்டு சுயமரியாதை சமதர்மத் திட்டம் வெளியான சில நாட்களில், இந்தியாவை உலுக்கிய முடிவு ஒன்று வெளியானது. அது அரசியல் கட்சிகளின் முடிவா? இல்லை. ஆட்சியின் முடிவா? இல்லை. பின் என்ன? வழக்கு மன்றத்தின் முடிவு ஆகும். என்ன வழக்கின் முடிவு?
மீரத் சதி வழக்கின் முடிவு. இவ்வழக்கு எப்போது தொடரப் பட்டது? 1929ஆம் ஆண்டு தொடரப்பட்டது. குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் எத்தனை பேர்? முப்பத்திரண்டு பேர். அவர்களில் இருவர், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் இந்தியர்கள்.
அவர்களில் சிலர் எஸ். ஏ. டாங்கே, அதிகாரி, எம்.ஜி. தேசாய் ஆவர். அன்று இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசு, பொதுவுடைமைக் கட்சியை, முளையிலேயே கிள்ளி எறிந்து விட முனைந்தது.
1925இல் தோழர்கள் சிங்காரவேலர், டாங்கே போன்றவர்கள் இந்திய பொது உடைமைக் கட்சியைத் தொடங்கினார்கள். கான்பூர் போன்ற தொழில் நகரங்களில், பாட்டாளி மக்களை ஒன்று திரட்டினார்கள்; உரிமைக் குரல் எழுப்பச் செய்தார்கள். ஆங்கில ஆட்சி மிரண்டது. மிரண்டவர் கண்களுக்கு இருண்டதெல்லாம் ‘பேய்’.