140
பெரியாரும் சமதர்மமும்
குறிப்பாக சென்ற அய்ந்து வருட காலமாக நடந்து வரும் உலக யுத்தத்தில், நல்ல நெருக்கடியில் நேச நாடுகளின் வெற்றிக்குக் கேடு உண்டாக்கும் நிலையில், நம் நாட்டில் பல ஸ்தாபனங்கள் செய்து வந்த பெருங் கிளர்ச்சிகளையும், நாச வேலைகளையும் எதிர்த்து அடக்குவதிலும், நேச நாடுகளுக்குப் பணம், ஆள், பிரசாரம், முதலியவைகள் நிபந்தனையின்றி, சர்க்காருக்கு உதவி வந்ததும், சர்க்காராலும், பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப்படத் தக்க நிலை ஏற்படுவதற்குப் பயன்பட்டு விட்டது.
‘இந்திய அரசியல், சமூக இயல் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில், சர்க்கார், நம் கட்சியையும் நம் இலட்சியமாகிய திராவிட நாட்டுப் பிரிவினையையும் அலட்சியம் செய்து வருகிறார்கள்.’
‘இந்திய மக்களின் அரசியல், சமுதாய இயல் சம்பந்தமான ஸ்தாபனங்களில், நம் ஸ்தாபனம் குறிப்பிடத்தக்கதாகவும், நீதி நெறி உடையதாக இருந்து, ஒழுங்கு முறைக்கும் கட்டுப்பட்டு, சர்க்கார் மெச்சும்படி நடந்து வந்ததும், நம ஸ்தாபனம் சர்க்காரால் மற்ற சாதாரண ஸ்தாபனங்களோடு ஒன்றாகக் கூட சேர்த்துப் பேசுவதற்கில்லாததாக, அலட்சியப் படுத்தப்பட்டு விட்டது.
‘நம் கட்சிக்கு அடியிற் கண்ட திட்டம், உடனே அமுலுக்குக் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமும், அவசரமும் ஆன காரியமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(அ) நம் கட்சியிலிருக்கும் அங்கத்தினர்களும், இனியும் வந்து சேர இருக்கும் அங்கத்தினர்களும், சர்க்காரால் மக்களுக்கு அளிக்கப்பட்ட எந்தவிதமான கவுரவப் பட்டங்களையும், உடனே சர்க்காருக்கு வாபஸ் செய்து விட வேண்டும்; இனி ஏற்றுக் கொள்ளவும் கூடாது.
(ஆ) அது போலவே, அவர்கள் யுத்தத்திற்காகவும், மற்றும் சர்க்கார் காரியங்களுக்காகவும், மத்திய சர்க்காராலோ, மாகாண சர்க்காராலோ, எந்த வித கமிட்டியில் எப்படிப்பட்ட கவுரவ ஸ்தாபனம், அங்கத்தினர் பதவி, ஆலோசகர் பதவி, அளிக்கப்பட்டிருந்தாலும், அவைகளை எல்லாம் உடனே ராஜினாமா செய்து விட வேண்டும்.