________________
தியாகராயரும், டாக்டர் நாயரும், நடேசனாரும், தலைமையேற்று நடத்திய நீதிக் கட்சியும், பெரியார் இராம சாமியும், பேரறிஞர் அண்ணாவும், அவர்கள் வழிநின்று கொள்கை வழுவாது காத்த தளநாயகர்களும், தலைமை யேற்று நடத்திய சுயமரியாதை இயக்கமும் தோன்றாமல் போயிருப்பின் தென்னாட்டு மக்கள், குறிப்பாகத் தமிழ் மக்கள், சிறப்பாகத் தாழ்த்தப்பட்டோர்-பிற்படுத்தப் பட்டோர்-பொதுவாக அடித்தளத்து மக்கள், உயர் வகுப்பாருக்கும், மேட்டுக் குடியினர்க்கும், சீமான்களுக்கும் பூமான்களுக்கும் அடங்கி வாழும் ஆமைகளாகத்தான் இழிவுற்று அழிந்திருப்பர். சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியாரோ, இந்திய நாட்டு விடுதலை இயக்கமான காங்கிரசைத் தமிழ் நாட்டில் கட்டிக் காப்பாற்றியவர். ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் பிரமுகர்கள் பெற விரும்புகிற விடுதலை, சாதி மதங்களின் பெயரால் அடித்தளத்து மக்களைத் தங்கள் நிரந்தர அடிமைகளாக்கிக் கொள்ளவே என்பதைப் புரிந்து கொண்டு, காங்கிரசுக் குள்ளேயே தனது சமத்துவ-சமதர்மக் கொள்கைகளை வலியுறுத்தி, அவை ஏற்கப்படாத காரணத்தால் "மண்ணுக்கு விடுதலை கேட்டு ஒரு போர் நடக்கட்டும்- நான் மனிதர்க்கு விடுதலை கேட்டு ஒரு போர் நடத்து கிறேன்" என்று வெளியேறினார். அவருக்குக் கிடைத்த தளபதிகளில் தலைசிறந்தவராகவிளங்கியவர்தான் அண்ணா! பெரியாரும் அண்ணாவும் இணைந்து செயல்பட்டு, நீதிக் கட்சியைத் திராவிடர் கழகமாக ஆக்கினர். தமிழக நிர்வாகத் துறையின் கட்டுக் கோப்புக்கான அடித்தளம் நீதிக் கட்சியின் காலத்திலே வலுவுற அமைக் கப்பெற்றது.