உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியாரும் சமதர்மமும்/21

விக்கிமூலம் இலிருந்து

21. சுயமரியாதைப் பணியா?
சமதர்மப் பணியா?

சுயமரியாதை இயக்கத்தின் பொருளியல் கொள்கை சமதர்மம் என்பதை, 1930 ஆகஸ்டில் விருதுநகரில் நடந்த மாகாண சுயமரியாதை வாலிபர் மாநாட்டின் முதல் முடிவே அறிவித்து விட்டது.

1932ஆம் ஆண்டின் இறுதியில், ஈரோட்டில் உருவாக்கப்பட்ட சுயமரியாதை சமதர்மத் திட்டம், அக்கோட்பாட்டிற்கு முழு உருவம் கொடுத்தது.

அக்கொள்கையைப் பொதுமக்களிடம் பரப்பும் பொருட்டு, பத்துப் பதினைந்து மாநாடுகள் நடத்தப்பட்டன; நூற்றுக்கு மேற்பட்ட சுயமரியாதைச் சமதர்ம இயக்கக் கிளைகள் நிறுவப் பட்டன.

பிரிட்டானியப் பேரரசு போன்ற எந்த முதலாளித்துவ அரசோடும், தொடர்பில்லாத, மக்கள் சமதர்ம ஆட்சியை நிறுவுவதே சுயமரியாதைச் சமதர்ம இயக்கத்தின் குறிக்கோள் என்றும் பறை சாற்றப்பட்டது. இவ்வளவிற்குப் பிறகும், ஆங்கில ஆட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? அடக்கு முறையில் இறங்கியது இயற்கையே.

முதலில் பெரியாரையும், கண்ணம்மாவையும் சிறைக்கு அனுப்பிய ஆட்சியாளர்கள் பின்னர், பெரியாரின் அண்ணார் ஈ.வெ.கிருஷ்ணசாமியையும் தண்டித்தனர்.

உற்பத்திச் சாதனங்களை நாட்டுடைமை ஆக்கும் சுயமரியாதைச் சமதர்மத் திட்டத்தைச் ‘செல்வர்களின் கட்சி’ என்று வீணாகப் பழிக்கப்பட்ட நீதிக் கட்சி ஆலோசித்து ஏற்றுக் கொண்டது. ஆனால், ‘தியாகிகள்’ நிறைந்ததாகச் சொல்லப்பட்ட காங்கிரசு அதை அன்று ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கில ஆட்சி, பொது உடைமைக் கட்சியைத் தடை செய்த பிறகும், பெரியாரின் சமதர்மத் தொண்டு நிற்கவில்லை. ‘கட்சிக்குத் தடையேயொழிய, கொள்கைக்குத் தடையில்லை’ என்று திறமையாகப் பெரியார் வாதிட்டுப் பார்த்தார். ஆனால், பலிக்கவில்லை. நாட்டின் ஆதிக்கப் பிற்போக்குச் சக்திகள், வெள்ளையர் காதைக் கடித்தபடி இருந்தன. சுயமரியாதை இயக்கத்தையும், தடை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

வாழ்க்கையின் அடிப்படைத் துறைகளில், எதிர் நீச்சல் போடும்படி மக்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்த தன்மான இயக்கத்திற்கு, அடக்கு முறை நிலை ஓர் நெருக்கடியை உருவாக்கியது.

‘சமத்துவமும் தேவை; சமதர்மமும் தேவை. முடிந்தால், இரண்டிற்கும் பாடுபட வேண்டும். முடியா விட்டால்? அடக்கு முறைக்கு ஆளாகி, இயக்கத்தவர் பலர் சிறைக்குச் சென்று, தக்க சூழ்நிலைக்காகக் காத்துக் கொண்டிருக்கலாம். அத்தகைய சிறை வாழ்க்கை நம் மக்களுக்குத் தியாகமாகவும், வீரமாகவும் தோன்றலாம். அவ்வழியைப் பின்பற்றுவதா? அல்லது மாற்று வழியைப் பின்பற்றுவதா?’ இத்தகைய கேள்விகள் தன்மான இயக்கத்தவர் உரையாடல்களில் எழுந்தன.

மாற்று வழி எது? சுயமரியாதைப் பணியை மட்டும் தொடர்வது ஆகும்.

சமதர்மக் கொள்கையைப் பரப்புவதற்காகச் சிறை சென்று விட்டால், தீண்டாமையொழிப்பு, சாதியொழிப்பு, மூடநம்பிக்கையொழிப்பு ஆகிய சமுதாயச் சீரமைப்புப் பணியை எவர் செய்வர்?

‘புத்தருக்குப் பின் முதன் முதலாகப் பெரியாரின் இயக்கமே, இதில் முனைப்பாக ஈடுபட்டது; ஓரளவு வெற்றியும் கண்டு வருகிறது. இதே சூட்டில் பாடுபட்டால், சாதிக் கொடுமைகளை ஒழித்து விட முடியுமே! எல்லாவற்றையும் நாமே செய்தோம் என்று சொல்லிக் கொள்ளவோ, நாங்களும் வீரர்கள் என்று விளம்பரப் படுத்திக் கொள்ளவோ, சாதியொழிப்புப் பணிக்கு இடையூறு செய்து விட்டால், மீண்டும் அது முளைக்குமா? பரவுமா?’ இப்படி இயக்கத்தின் உயிர் நாடிகளாக இருந்த பலர் கேட்கத் தலைப்பட்டனர்.

இறுதியில், அப்போதைக்குச் சமத்துவப் பணியில் மட்டும், முழு மூச்சாக ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இயக்கத்தின் இம்முடிவு எதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்டது? இயக்கத் தலைவர் பெரியாரின் சொற்களால், அதைத் தெரிந்து கொள்வோம்.

“நான் இரஷ்யாவிற்குப் போவதற்கு முன்பே, பொது உடைமைத் தத்துவத்தைச் சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான். இரஷ்யாவில் இருந்து வந்தவுடனும், அதை இன்னும் தீவிரமாகப் பிரசாரம் செய்ததும் உண்மைதான். ஆனால், சர்க்கார் பொது உடைமைக் கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து, நமது சுயமரியாதை இயக்கத்தையும் அடக்கி ஒடுக்கி, ஒழித்து விட வேண்டுமென்று கருதியிருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகு, எனக்குப் புத்திசாலித்தனமாகச் சில காரியம் செய்ய வேண்டியதாக ஏற்பட்டு விட்டது.

“இந்த நிலையில், சுயமரியாதை இயக்கத்தை ஒழித்து விட்டு, நான் மட்டும் வீரனாக ஆவதற்கு, ஜெயிலுக்குப் போய் உட்கார்ந்து கொள்ளுவதா?

“அஸ்திவாரத்தில் கையை வைத்துச் சாதிகளை ஒழிப்பதற்கு, இன்று இந்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தவிர, வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாக ஞாபகத்தில் வையுங்கள்.

“சமதர்ம வளர்ச்சிக்குப் பிற பக்கங்களிலும் ஆட்கள் கிடைக்கலாம். சாதியொழிப்புக்குத் தன்மான இயக்கம் மட்டுமே போராடுவதால், இவ்வியக்கத்தைக் காப்பாற்றிப் பயன்படச் செய்வது இப்போதைக்கு முன்னுரிமை உடையதாகும்.”

மேற்கூறிய காரணத்தால் பெரியாரும், அவருடைய இயக்கமும், அப்போதைக்குப் பொது உடைமைக் கொள்கையைப் பரப்புவதில் முனைவதில்லை என்று முடிவு செய்தார்கள்.

பிழைப்பிற்காகப் பொதுப்பணிக்கு வந்தவர்களாக இருந்தால், பொது உடைமைக்கு ஆதரவான எல்லாவற்றையும் அழுத்திக் கொன்றிருப்பார்கள். பெரியாரின் இயக்கமோ, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களையும் கண்டித்துக் கொண்டு திருத்தப் பாடுபடுவதாயிற்றே!

எனவே, பொது உடைமைப் பிரசாரம் சட்ட விரோதம் என்று சொன்னதும், அதைக் கைவிடக் கோரும் அறிக்கையைத் தாங்கி வந்த ‘குடியரசு’ சமதர்மப் பணியை அடியோடு கை நழுவ விடவில்லை.

இரஷ்ஷியா அய்ந்தாண்டுத் திட்டம் பற்றிய தொடர் கட்டுரைகளை, ‘ருஷ்ய பால பாடம்’ என்ற தலைப்பில் ‘குடியரசு’ பல வாரங்கள் வரை வெளியிட்டது. ருஷியாவின் முன்னேற்றம் பற்றிய தொடர் கட்டுரைகளோடு ருஷியாவின் விபசாரத் தடுப்பு முறை பற்றிய கட்டுரையையும் வெளியிட்டது.

24-11-1935 நாளைய ‘குடியரசு’ லெனினுடைய தங்கை அன்னா உலியனோவாவின் மறைவுச் செய்தியை வெளியிட்டது.

8-3-1936 ஆம் நாளைய ‘குடியரசு’ ‘பணக்காரத் தன்மை, ஒரு மூடநம்பிக்கையே’ என்ற அருமையான தலையங்கத்தைத் தாங்கி வெளி வந்தது.

சமதர்மப் பெருமழையை அப்போதைக்குப் பெரியார் நிறுத்தி வைத்தார். ஆனால் சிறுமழை பெய்வதைத் தடை செய்யவில்லை. தன்மான இயக்கத்தைப் பொறுத்த மட்டிவ், சமதர்ம உணர்வு உயிரோடு இருந்தது; இருக்கிறது.

ஆனால், பெரியாரின் எதிர்பார்ப்பு பலிக்கவில்லை. சமதர்ம வளர்ச்சிக்குப் பிற பக்கங்களிலும் ஆள்கள் கிடைக்கலாமென்று பெரியார் எதிர்பார்த்தது, அப்போது நடைபெறவில்லை.

‘அபேதவாதம்’ என்னும் நூலைத் தமிழில் எழுதி வெளியீட்டு அவ்வுயரிய கொள்கையைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தியவர் மூதறிஞர் இராசகோபாலாச்சாரியார். அவர் தொடர்ந்து, அபேதவாதியாக இயங்கவில்லை. அதற்கு எதிரியாக மாறினார். சுயமரியாதை இயக்கத்தால், வெள்ளம் போல், பெருக்கப்பட்ட சமதர்ம உணர்வினைக் கண்டு அஞ்சினார். அதைத் திசை திருப்ப முயன்றார். அதில் ஒரளவு வெற்றியுங் கண்டார். அத்திட்டம் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/21&oldid=1690984" இலிருந்து மீள்விக்கப்பட்டது