உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்மை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழி

37

எதிரே விசாலத்தின் வீடு. இன்னும் தூங்கவில்லையா? அவளுக்கென்ன மகராஜி. கொடுத்து வைத்தவள்.

அப்பொழுது, “கட்டிக் கரும்பே தேனே…” என்ற பாட்டு, கிராமபோன் ஓலம். பாட்டு, கீழ்த்தரமான சுவையுடைய பாட்டுத்தான்.

அன்று அவளுக்கு மூண்டெழுந்த தீயிலே, எண்ணை வார்த்தது போல் இருந்தது. அவளுக்குப் பாட்டு இனிமையாக இருந்தது. கேட்பதற்கு நாணமாக இருந்தது. இருட்டில் அவள் முகம் சிவந்தது. இனி. இப்படி யாராவது அவளையழைக்க முடியுமா?

இவ்வளவிற்கும் காரணம் இயற்கையின் தேவை. தேவையென்று பெரிய எழுத்துக்களில். இதிலே ஒரு முரட்டுத் தைரியம் பிறந்தது. ஏன் அந்தக் கோடித் தெருச் சீர்திருத்தக்காரர் திரு. குகன் சொல்லியது மாதிரி செய்தால் என்ன? அப்பாவிடம் சொல்ல முடியுமா? அவர் அன்னியன். மேலும்… நான் விதவை என்று தெரியும். போனால், அவருக்குத் தெரியாதா?

திரு. குகன் செய்த பிரசங்கத்தின் வித்து வேகமாகத் தழைத்து, ஆட்சி செய்ய ஆரம்பித்தது. நினைத்தபடி நடக்க ஹிந்துப் பெண்களுக்குத் தெரியாது. ‘இயற்கையின் தேவை’யென்ற ஈட்டி முனையில் அவள் என்னதான் செய்ய முடியாது? மேலும் தாயார் இருந்தால், ஒரு ஆறுதல், கண்காணிப்பு இருந்திருக்கும். இது வரை, தனக்கு வேண்டியதை அவளே செய்து கொண்டவள். அவளுக்குக் கேட்டுச் செய்ய ஆள் கிடையாது. மனம் சீர்திருத்தவாதியை அணுகி விட்டால், உலகமே மோட்ச சாம்ராஜ்யமாகி விடும் என்று சொல்லுகிறது. சீ, போயும், போயும் மூளையில்லாமல் ஆண் பிள்ளையிடம் போய் என்ன கத்தரிக்காய்க் கடையா, வியாபாரம் பண்ண? அவளுக்குச் சீர்திருத்தவாதி உள்பட இந்த உலகம் எல்லாவற்றையும் கொன்று, துடிப்பதைப் பார்க்க வேண்டுமென்று படுகிறது. சீ ! பாபம். உலகமாவது, மண்ணாங்கட்டியாவது! நெருப்பில் போட்டுப் பொசுக்கட்டுமே. மார்பு வெடித்து விடுவது போலத் துடிக்கிறது. இருளில் கண்ட சுகம், அந்தச் சங்கீத ஓலத்தில் போய் விட்டது. அவளுக்கு விசாலத்தின் மீது ஒரு காரணமற்ற வெறுப்பு. அவளையும், அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/38&oldid=1694381" இலிருந்து மீள்விக்கப்பட்டது