உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்மை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

வழி

இன்பங்கள் புஸ்தகமும் பிரசங்கமும். சில சமயம், அலமுவையும், அழைத்துச் சென்றிருக்கிறார்.

மரண தண்டனை அனுபவிக்கும் ஒருவன், சார்ளி சாப்ளின் சினிமாவை அனுபவிக்க முடியுமா? வைதவ்ய விலங்குகளைப் பூட்டி விட்டுச் சுவாரஸ்யமான பிரசங்கத்தைக் கேள் என்றால், அர்த்தமற்ற வார்த்தையல்லா அது!

அன்று அவளுக்குத் தூக்கம் வரவில்லை. துக்கம் நெஞ்சையடைத்தது. தொண்டையிலே ஏதோ ஒரு கட்டி அடைத்திருப்பது மாதிரி உணர்ச்சி. உதடுகள் அழ வேண்டுமென்று துடித்தன.

உறக்கம் வரவில்லை. எழுந்து முந்தானையால் முகத்தின் வியர்வையைத் துடைத்துக் கொண்டு, வெளியிலிருந்த நிலா முற்றத்திற்கு வருகிறாள்.

வானம் அத்யந்தமும் கவ்விய இருட்டு. உயர இலட்சியங்களை அசட்டுத்தனமாக வாரி இறைத்தது மாதிரி கண் சிமிட்டும் நட்சத்திரங்கள். அவளுக்கு அவை சிரிப்பது போல், தன்னைப் பார்த்துச் சிரிப்பது போல் குத்தியது. மணி பன்னிரண்டாவது இருக்கும். இந்த இருட்டைப் போல உள்ளமற்றிருந்தால், தேகமற்றிருந்தால் என்ன சுகமாக இருக்கும்!

இந்த வெள்ளைக்காரன் ஒரு முட்டாள். ‘சதி’யை நிறுத்தி விட்டதாகப் பெருமையடித்துக் கொள்ளுகிறான். அதை இந்த முட்டாள் ஜனங்கள் படித்து விட்டுப் பேத்துகிறது. முதலில் கொஞ்சம், பிறகு… வெள்ளைக்காரன் புண்ணியத்தால், வாழ்க்கை முழுவதும், சதியை, நெருப்பின் தகிப்பை அனுபவிக்க வேண்டியிருக்கிறதே. வைதவ்யம் என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நிமிஷமும், நெருப்பாகத் தகிக்கும் சதியல்லவா வைதவ்யம்…

அவர் இருந்திருந்தால்… அதை நினைத்தவுடன், மனம் ஐந்தாறு வருஷங்களைத் தாண்டிச் சென்று விட்டது. பழைய நினைவுகள், எட்டாத கனவுகள் அவற்றில் முளைக்க ஆரம்பித்தன. அவள் உடல் படபடத்தது. நெஞ்சில் சண்டமாருதமாக, பேய்க் கூத்தாக எண்ணங்கள் ஒன்றோடொன்று மோதின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/37&oldid=1694360" இலிருந்து மீள்விக்கப்பட்டது