ஔவையார் தனிப்பாடல்கள்/முடியாத செயல்கள்!
59. முடியாத செயல்கள்!
சிலர், தாமே 'சகலத்தினும் வல்லவர்' என்று செருக்குற்றுத் திரிகின்றனர். இது மிகமிகத் தவறான மனப்போக்கு. செருக்கு ஒருவனின் அறிவைக் கெடுக்கும். நன்மை தீமைகளை உணருகின்ற தன்மையைப் போக்கிவிடும். முடிவில், ‘செருக்குடன் விளங்கினான் சீரழிந்து போயினான்’ என்ற நிலைமையையும் தந்துவிடும்.
இப்படிப்பட்ட செருக்கினை ஒவ்வொருவரும் முயன்று தவிர்க்க வேண்டும்; இதனை வற்புறுத்த நினைக்கிறார் ஔவையார். மனித சக்தியாற் செய்ய முடியாத சிலவற்றைக் கூறி, இதனை விளக்குகிறார். முடிவில் 'மூர்க்கனைச் சீராக்குவது முடியாத்து' என்ற உலகத்து உண்மையினையும் எடுத்துக் கூறுகின்றார்.
ஆலமரம் ஒருவகை மரம். அதனைப் பலா மரமாக ஆக்க முடியுமா? அது இயலாத செயல்.
நாய் வால் வளைந்து இருக்கும். அதனை நிமிர்த்து விடுவது முடிகிற காரியமோ? முடியாத செயல்தான்.
கிளியைப் பேச வைக்கலாம். காக்கையைப் பிடித்துப் பழக்கிப் பேசச் செய்துவிட முடியுமோ? முடியவே முடியாது.
இவையெல்லாம், மனிதராகிய நம்மால், நம் சக்தியால் செய்வதற்கு முடியாதவை. இதுபோலவே, ‘மூர்க்கனை நல்லவனாக மாற்றி விடலாம்' என்பதும் நம்மால் நம் சக்தியால் முடியாதது ஆகும்.
'மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா' என்பார்கள். மூர்க்கன், தான் நினைத்ததே சாதிப்பவன். எப்போதும் திருந்த மாட்டான். அவனை அழிப்பதுதான் செய்யத்தகுந்தது. இந்த நீதியை வலியுறுத்துகின்ற செய்யுள் இது.
ஒட்டக்கூத்தரின் போக்கைக் கண்டித்துக் கூறியது இது எனவும் சிலர் உரைப்பார்கள். 'பொதுவாக மூர்க்கரைப் பழித்தது' இது என்று சொல்லுவதே சிறப்பு.ஆலைப் பலாவாக்க லாமோ அருஞ்சுணங்கன்
வாலை நிமிர்க்க வசமாமோ - நீலநிறக்
காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா
மூர்க்கனைச் சீராக்க லாமோ?
"ஆலமரத்தை பலா மரமாக ஆக்குவதற்கு இயலுமோ? நாயின் வாலை நிமிர்த்து விடுவதற்கு முடியுமோ? கருநிறக் காக்கையைப் பேசுவிக்கக் கூடுமோ? கருணையில்லாத மூர்க்கனைச் சீர்படுத்த முயன்றால், அதுவும் இயல்வதாகுமோ? இயலவே இயலாது” என்பது இதன் பொருள்.