உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/253

விக்கிமூலம் இலிருந்து

253. கவின் எய்திய காப்பினள் !

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது.

[(து.வி.) தலைவி இல்லிடத்தேயே செறிக்கப் பெற்றனள்; இனிக் களவுறவும் வாய்ப்பது அரிது! ஆதலின் நீதான் இவளை வரைந்துவந்து மணந்து கொள்ளலே இனிச்செய்தற்குரியது' என்று, தலைமகனிடம் தலைவியின் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]


புள்ளுப்பதி சேரினும் புணர்ந்தோர்க் காணினும்
பள்ளி யானையின் வெய்ய உயிரினை
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிதழிந்து
எனவ கேளாய் நினையினி நீநனி
உள்ளினும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள் 5
பேரிசை உருமொடு மாறி முற்றிய
பல்குடைக் கள்ளின் வண்டுமகிழ்ப் பாரி
பலவுறு குன்றம் போலப்
பெருங்கவின் எய்திய அருங்காப் பினளே!

தெளிவுரை : ஒளி செய்கின்ற அணிகலனை அணிந்த இளமகள் நின் தலைவி. அவள் பெரிய முழக்கத்தோடேகூடிய இடியோசையோடு மழைமேகங்கள் மிகுதியாகச் சூழ்ந்ததும், பலவாகிய பனங்குடையிலே இட்டு உண்ணும் கள்ளாகிய வளவிய களிப்பையுடையதும், பலா மரங்கள் நிறைந்ததுமான, பாரியது பறம்புமலையினைப் கண்டார் வியக்கின்ற பேரழகினையும் எய்தினள். அதனாலே. இல்வயின் செறிக்கப் பெற்றனளாய் அரிய காவலை உடையாளும் ஆயினாள். அதனாலே, இனி நின்னோடும் களவுக்குறி சேர்ந்து இன்புறுதலைத் தள்னுள்ளத்தே மிகுதியாக நினைப்பினும், அதுதான் வாயாமை கருதி நடுங்குவாளாயினள். நீயுந்தான்,

புள்ளினம் தத்தம் துணையோடுங் கூடினவாய்த் தத்தம் கூடுகளிடத்தே சென்றடைந்து கூடியிருந்தாலும், கணவனும் மனைவியுமாகக் கூடியிருப்போரைக் கண்டாலும், படுக்கையுற்றுக் கிடக்கின்ற யானையைப் போலச் சுடுமூச்சினை உடையை ஆயினை. மிகுதியான நினைவிலே கலங்கிய வருத்தத்துடனே பெரிதும் உள்ளம் அழிந்தனையாய், என் சொற்களைக் கேளாயுமாயினை. இனியேனும் விரைந்து அவளை வரைந்துகொண்டு வாழ்தலுக்காவனவாய முயற்சிகளை விரையச் செய்தலை நினைவாயாக!

சொற்பொருள் : பதி – கூட்டிடம்; தங்குமிடம். பள்ளி யானை – படுக்கையிலே கிடந்த யானை. கழிபட வருந்திய –மிகுதிப்பட வருத்தமுற்ற. எவ்வம்–துன்பம்; அது காமமிகுதியாலே உண்டாயது. பெரிதழிந்து – பெரிதும் உளமழிந்து. உள்ளினும் –நினைப்பினும்; நினைத்தலாவது, தலைவனைக் களவுக் குறியிடஞ் சென்று சேர்தலை. பனிக்கும்–நடுங்கும். இசை – முழக்கம். மாரி – மழை மேகங்கள். முற்றிய – இருண்டு சூழ்ந்த. கவின்–அழகு.

விளக்கம் : 'உள்ளினும் பனிக்கும்' என்றது, இரவுக்குறி நேர்தல் ஒருகால் வாயாதாகும் எனின், அதன் பொருட்டு நீ வரும் வழியின் ஏதங் கருதியும், நினக்குத் தமராலே ஏற்படக்கூடிய துயரம் கருதியும் நடுங்குவாளாயினள் என்றதாம். களவு முட்டுப்பட்ட விடத்துக் கூடியிருப்பாரையும், கூடியிருக்கும் புள்ளினத்தையும் காணும்போதெல்லாம் தலைவன் பெரிதும் உளமழிந்து சோர்தலேயன்றி, வரைந்து வந்து மணத்தலைப் பற்றி யாதும் நினைத்திலன் என்பதாம்.

பறம்புமலையிலே வாழ்ந்த பாரிவள்ளல் வருவார்க்குக் கள்ளினை மிகுதியாகத் தந்து களிப்பான் என்பதனை, 'ஒருசார் அருவி யார்ப்ப வாக்கவுக்க தேக்கட் டேறல், கல்லலைத் தொழுகு மன்னே' எனக் கபிலர் புறநானூற்றிலும் கூறுவர் (புறம். 115)

மூவேந்தராலும் கொள்ளற்கு அரிதான பெருங்காப்புடன் திகழ்ந்தது பாரியின் பறம்பு. தலைவியையும் அருங்காப்பில் இட்டிருந்த நிலைமைக்கு அந்தப் பறம்புக் காப்பின் வன்மையை உவமை கூறினர்.

'எனவ கேளாய்' என்றது, நின் செயலிழந்த தன்மையாலே, அவள் தான் உயிரழிதலும் கூடும் என்றதாம்.

'பள்ளி யானையின் வெய்ய உயிரினை' என்றது, அதுதான் கோம்பிக் கிடத்தலைப் போல, நீயும் நின் ஆண்மையும் அறப்பண்பும் மறந்தாயாய், வருந்துதல் செயலாகக் மட்டுமே கொள்வாயாயினை என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/253&oldid=1698423" இலிருந்து மீள்விக்கப்பட்டது