நற்றிணை-2/257
257. இயங்குநர் மடிந்த சிறுநெறி!
- பாடியவர் : வண்ணக்கன் சொருமருங் குமரனார்; வண்ணக்கன் சேரிக்குமரங் குமரனார் எனவும் கொள்வர்.
- திணை : குறிஞ்சி,
- துறை : தோழி, தலைமகனது ஏதஞ்சொல்லி வரைவு
கடாயது.
[(து-வி.) இரவுக் குறியினை விரும்பி வருவானாகிய தலைமகனைத் தோழி நெருங்கி இவ்வாறு உரைக்கின்றனள். வரும் வழிக்கண் ஏதம் மிகவும் உண்டாதலின் யாம் அஞ்சுவேம் எனக் கூறுவதன் மூலம், இரவுக்குறி மறுத்து வரைந்து வருதலை வேண்டுகின்றனள். இவ்வாறு அமைந்த செய்யுள் இது.]
விளிவில் அரவமொடு தளிசிறந்து உறைஇ
மழையெழுந் திறுத்த நளிர் தூங்கு சிலம்பின்
கழையமல்பு நீடிய வானுயர் நெடுங்கோட்டு
இலங்குவெள் ளருவி வியன்மலைக் கவாஅன்
அரும்புவாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கைப்
5
பொன்மருள் நறுவீ கன்மிசைத் தா அம்
நன்மலை நாட! நயந்தனை அருளாய்!
இயங்குநர் மடிந்த வயந்திகழ் சிறுநெறிக்
கடுமா வழங்குதல் அறிந்தும்
நடுநாள் வருதி நோகோ யானே.
10
தெளிவுரை : இடிகளின் ஓயாத முழக்கத்தோடே மழை மிகுந்ததாக எங்கணும் பெய்தலைத் தொடங்கியது; மேகங்கள் திரண்டு சூழ்ந்து கொண்டதனாலே, மலைப்பக்கங்கள் குளிர்ச்சிமிகுந்த ஆயின ; மூங்கில்கள் செறிவாக வளர்ந்து நெடிதாகவும் ஓங்கியுள்ள வானளாவும் மலையுச்சியிலுள்ள விளங்கும் வெள்ளிய அருவியானது, அகன்ற மலைப்பக்கங்களிலே வீழ்கின்றது. அவ்விடத்தே, அரும்புகள் இதழ்விரிந்தவாய் மலர்ந்திருக்கின்றதும், கரிய அடிமரத்தை உடையதுமான வேங்கையினது, பொன்னைப்போலத் தோற்றும் நறியவான பூக்கள் பாறை மேலாக உதிர்ந்து பரவியபடியிருக்கின்ற, நல்ல மலைநாடனே! வழிப்போவார் யாருமில்லாதபடி விளங்கும், ஒடுங்கிய, நீர் பெருகி நிற்கின்ற தன்மையது நீ வரும் வழியாகும். அவ்வழியிடையே கடிய விலங்குகளான புலி முதலானவை வழங்குதலை அறிந்துவைத்தும், நீதான் இரவின் நடுயாமப் பொழுதிலேயே வாராநின்றனை! அதனைக் கருதி யானும் நோவா நின்றேன். எம்பால் விருப்புடையையாகி, இனி அவ்வாறு வருதலை நீக்கினையாய் எமக்கு அருள்தலைச் செய்வாயாக, பெருமானே!
சொற்பொருள் : விளிவில் – இடையீடில்லாதபடி. அரவம் – இடி முழக்கம். தளி – மழை. உறைஇ – பெய்து மழை எழுந்து – மேகங்கள் வானத்தே எழுந்து. இறுத்த – தங்கிய, நளிர் – குளிர்ச்சி. சிலம்பு – பக்கமலை. கழை – மூங்கில். அமல்பு – செறிந்து. வயம் – நீர்ப் பெருக்காகிய வளம். சிறுநெறி – ஒடுங்கிய வழி. கடுமா – புலி போன்ற கொடிய விலங்குகள்.
விளக்கம் : 'வழியிடையே நினக்கு யாதானும் துன்பம் உண்டாகுமோ?' என எண்ணியாம் மிகுதுயர்ப்பட்டுக் கலங்குவேம். ஆதலின், இரவு வருதலைக் கைவிடுக என்றனள். வேங்கைப் பூ கன்மிசைத் தாவும் என்று சொன்னது, அதுதான் மணங்கோடலுக்கு உரித்தான காலமென்பதனை நினைப்பித்ததாம். 'இயங்குநர் மடிந்த' என்றது வழக்கமாகப் போதலை மேற்கொள்வாரும் அச்சமுடையவராய்க் கைவிட்டதனாலே, யாருமற்றதாக விளங்கிய நெறி என்றதாம்.
உள்ளுறை : வேங்கையின் பொன்போன்ற நறிய மலர்கள் தம்மைக் கொய்து சூடுவாரை அற்றவாய்க் கற்பாறை மேல் உதிர்ந்து கிடப்பது போல, நீதான் அருகிருந்து நுகர்ந்து இன்புறுத்தாதலினாலே இவளுடைய நலனும் பயனற்றுக் கொன்னே அழிந்து போதலைச் செய்யும் என்பதாம்.
இதனைக் கேட்கும் தலைவன், விரைய வந்து வரைதலுக்கு மனத்தே உறுதி கொள்வான் என்பது இக்கூற்றின் பயனாகும்.