உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/269

விக்கிமூலம் இலிருந்து

269. பாலார் துவர்வாய்ப் புதல்வன்!

பாடியவர் : எயினந்தை மகனார் இளங்கீரனார்.
திணை : பாலை.
துறை : தோழி வாயின் மறுத்தது (1); செலவழுங் குவித்ததூஉம் ஆம் (2).

[(து.வி.) பரத்தையிற் பிரிந்து வந்தானாகிய தலைமகன் விடுத்த தூதர்கள் சென்று தோழியை வாயில் வேண்ட, அவள் தலைவனது செயலைக் கடிந்து அதற்கு மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் (1); பிரியக் கருதிய தலைமகனுக்குத் தலைவியின் நிலைமையை அவன் வாயிலர் கேட்பக் கூறிப் பிரிவைக் கைவிடத் தூண்டும் வகையில் அமைந்த செய்யுள் எனினும் பொருந்தும் (2).]


குரும்பை மணிப்பூண் பெருஞ்செங் கிண்கிணிப்
பாலார் துவர்வாய்ப் பைம்பூண் புதல்வன்
மாலைக் கட்கின் மார்பூர்பு இழிய
அவ்வெயி றொழுகிய செவ்வாய் மாண்நகைச்
செயிர்தீர் கொள்கைநம் உயிர்வெங் காதலி 5
திருமுகத் தலமருங் கண்இனைந் தல்கலும்
பெருமர வள்ளியிற் பிணிக்கும் என்னார்
சிறுபல் குன்றம் இரப்போர்
அறிவார் யாரவர் முன்னி யவ்வே.

தெளிவுரை : குரும்பை போன்ற மணியைக் கொண்ட பூணாகிய பெரிய செவ்விய கிண்கிணியையும், பால் உண்ணுகின்ற சிவந்த வாயினையும், மற்றும் பலவான பசும்பொன் கலன்களையும் உடையவன் நம் புதல்வன். அவன், மாலை விளங்குவதும், கண்ணுக்கு இனிதானதுமாகிய தலைவனின் மார்பினிடத்தே ஏறியும் இறங்கியுமாக விளையாட்டு அயர்வான். அதனைக் கண்டு மகிழ்ந்த அவனது அழகிய எயிறுகள் நிரல்பட அமைந்த சிவந்த வாயிடத்தே மாட்சிமைப்பட்ட நகையும் தோன்றும்! குற்றமில்லாத கோட்பாட்டை உடையவளான உயிர்போல விரும்பப்பட்ட காதலியானவள், அதனைக் கண்டு பொறாது, தன் திருமுகத்திலே உலவும் கண்கள் கலங்கியவளாவாள். நாள்தோறும் பெருமரத்தைச் சுற்றித் தழுவிப் படர்ந்திருக்கும் வள்ளிக்கொடியைப் போல, நம்மையும் மேலே செல்லவிடாது பிணித்துக் கொள்வாள் என்று அவர் தாம் கருதிற்றிலர். சிறிய பலவாகிய குன்றங்களைக் கடந்து செல்வாரும் ஆயினர். அவர் உள்ளத்தே நினைபவற்றை அறியவல்லார் தாம் யார்? அறிந்தோரைப்போல நீவிரும் வந்து வாயில் வேண்டுவதுதான் எதற்காகவோ?

சொற்பொருள் : குரும்பை மணிப்பூண்–குரும்பைபோலச் செய்த மணிகள் கோத்த அரையிற் கட்டும் கிண்கிணி. கட்கின் மார்பு–காண்டற்கு இனிமை தருவதாகிய மார்பு. ஊர்பு இழிதல்–ஏறியும் இறங்கியும் விளையாட்டயர்தல். மாண் நகை–மாட்சி கொண்ட சிரிப்பு ; இது புதல்வனின் விளையாட்டைக் கண்ட இன்பத்தால் தோன்றியது. வள்ளி–வள்ளிக்கொடி. இறப்போர்–கடந்து செல்வோர்.

விளக்கம் : காதலனது மார்பிலே ஊர்ந்து விளையாடும் புதல்வனின் விளையாட்டுச் செயலைக் கண்ட தலைவி, அவன் மார்பினைக் கிண்கிணி ஊறுபடுத்தும் எனக் கலங்கியவளாய்த், தலைவனைப் பெருமரவள்ளியிற் பிணித்துக் கொண்டனள் என்க.

அவரது அத்தகைய காதற்பெருக்கையும், புதல்வனது அத்தகைய இனிய விளையாட்டையுமே மறந்து பிரிந்து சென்றவர், இனி யாதுதான் செய்தற்குத் துணியார்? அவர் பேச்சை யாமும் இனி ஒருபோதும் நம்புதற்கில்லோம் என்பதாம்.

காதலனது முயக்கத்து நினைவினாலேயே அவன் பிரிவை மறந்து யாமும் ஆற்றியிருப்போம் என்று வாயில் மறுத்ததும் ஆம்.

தலைவனாலே விரும்பப்பட்ட பரத்தையர் அவன் குடிக்கு விளக்கஞ் செய்யும் புதல்வரைப் பெற்றுத்தரும் உரிமை இல்லாதவர் என்பதைக் குறிப்பாகக் கூறித் தமது கற்பற உயர் மாண்பினை வாயிலர்க்கு உரைத்ததும் ஆம்.

இதனால், தலைவியின் காதற்பெருக்கையும் மறந்து பரத்தையர் உறவினை நாடிச்சென்ற தளர்ச்சியுடையவன் தலைவன் எள்பதும், அவனது அச்செயலால் தலைவி பெரிதும் வெகுளி உடையவளாயினாள் என்பதும் விளங்கும். இத்தகு உரிமையும் துணிவும் கொண்டிருந்தனர் பண்டைத் தமிழகத்துத் தலைவியர் என்பதும் அறிதல் வேண்டும்.

புதல்வன் தலைவனது மார்பணியைச் சிதைக்க, அதுகண்டு தலைவி மனம் வருந்துவாள் என்பது அவளது காதற் பாசத்தினால் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/269&oldid=1698459" இலிருந்து மீள்விக்கப்பட்டது