உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/274

விக்கிமூலம் இலிருந்து

274. வருதியோ பொம்மல் ஓதி!

பாடியவர் : காவன்முல்லைப் பூதனார்.
திணை : பாலை.
துறை : தோழி, 'பருவம் மாறுபட்டது' என்றது.

[(து.வி.) தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற காலத்திலே, 'அவன் கோடையது வெம்மையால் வழியிடையேது துன்பம் அடைதலும் கூடும்' என்று எண்ணி வருந்துகின்றாள். அவளது வருத்தத்தைப் போக்கக் கருதிய தோழி, 'அவ்விடத்து மழைக்காலம் ஆயிற்றுக் காண்' என்று கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


‘நெடுவான் மின்னிக் குறுந்துளி தலைஇப்
படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து
உழைமான் அம்பிணை தீண்டலின் இழைமகள்
பொன்செய் காசின் ஒண்பழந் தாஅம்
குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம் 5
எம்மொடு வருதியோ பொம்மல் ஓதி’எனக்
கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு
இரும்புலி வழங்கும் சோலை
பெருங்கல் வைப்பின் சுரன்இறந் தோரே.

தெளிவுரை : தம்முள்ளே மாறுபட்டவான பெரிய புலிகள் திரிந்து கொண்டிருக்கும் சோலைகளை உடையதான பெரிய மலைநாட்டைச் சார்ந்த நிலமாகிய சுரத்தைக் கடந்து செல்பவர் நம் காதலர். அவருக்கு ஏதம் ஏதும் உளதாமோ என நீயும் வருந்துவாய். ஆயின்,

நெடிய வானத்திடத்தே மேகங்கள் மின்னலிட்டுச் சிறு சிறு துளிகளையும் பெய்யத் தொடங்கிப் பெருமழையாகவும் பொழிந்ததாகிய, பிளப்புக்களையுடைய குன்றத்திடத்தே வாழ்கின்ற உழையாகிய பெண்மானின் அழகிய உடலானது தீண்டுதலாலே, இழையணிந்தாளாகிய பெண் ஒருத்தியது பொன்னாற் செய்யப்பெற்ற காசினைப் போன்றவாகிய ஒள்ளிய பழங்கள் உதிருகின்ற, குமிழ மரங்கள் நிரம்பியிருக்கும் குறுகிய பல வழிகளைக் கொண்டதான சுரநெறியிலே, அடர்ந்த கூந்தலை உடையாளே! நீயும் எம்மோடும் வருகின்றாயோ? என்று அவர் சொல்லிய சொற்களையும் உடையர்காண்! ஆதலின், அங்கு அவர் வேனிலால் வெம்மையுறுவதும் இலரென்று தெளிவாயாக.

சொற்பொருள் : நெடுவான் – நெடிய வானம். வான்–மேகமும் ஆம். குறுந்துளி – குறுகிய சிறு துளி. படுமழை –பெருமழை. பகுவாய்க் குன்றம் – பிளப்புக்களைக் கொண்ட குன்றம். உழைமான் அம் பிணை – உழையாகிய மானின் அழகிய பிணை. பிணை – பெண் மான். இழை மகள் – கலனணிந்த இளமகள். பொன் செய் காசு – பொற்காசு என்றும் வழங்குவர். குமிழ்–குமிழ மரம். தலைமயங்கல்–நிரம்பிச் செறிவோடிருத்தல்; பிற மரங்களோடு கலந்திருத்தலும் ஆம். குறும்பல் அத்தம் – குறுகலான பலவாகிய வழிகள். பொம்மல் ஓதி – அடர்ந்த கூந்தல்; அதனை உடையாளான தலைமகளைக் குறித்தது. வேறுபட்டு – மாறுபட்டு; இரும்புலி – பெரிய புலிகள்.

விளக்கம் : தலைவன் செல்லும் வழியிடையிலே அவன் துன்புறுதல் கூடும் எனக் கவலையுற்ற தலைவிக்கு, அவன் பிரிந்த காலத்துச் சொன்ன சொற்களை நினைவுபடுத்தி, இவ்வாறு தேறுதல் உரைக்கின்றாள் தோழி. 'எம்மொடு' வருதியோ?' என அவன் அழைத்ததை நினைவுபடுத்தியது, அதுகாலை 'அதுதான் மகளிர்க்கு மரபன்று' எனக் கூறி மறுத்துத் தான் ஆற்றியிருப்பதாகக் கூறிய தலைவியின் சொற்களை நினைவுபடுத்துதற்கும் ஆம். இவ்வாறு கணவனோடு மகளிர் உடன்செல்லலையும் கோவலனோடு சென்ற கண்ணகி கதையால் அறியலாம். இனிச் 'செல்லற்கும் எளிது பொருளும் எளிதாகக் கிடைப்பது, எனவே நீயும் உடன் வருகின்றாயோ?' என்று அவன் அழைத்ததாகவும் கொள்ளலாம்.

இறைச்சி : 'மான்பிணை சென்று தீண்டலும் மரத்திற் பழுத்துக் கனிந்திருந்த குமிழின் பழங்கள் பொற்காசு போல உதிரும்' என்றது. அவ்வாறே தலைவன் சென்று பொருளினை ஈட்டத் தொடங்கியதும், பொருளும் விரைவில் கிடைக்கும் என்க. அப்படி வந்து கைகூடுவதாகலின், அவன் அதனோடும் விரைவிலே மீண்டு வருவான் எனவும் கூறித் தலைவியைத் தேற்றுகின்றனளாகக் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/274&oldid=1698472" இலிருந்து மீள்விக்கப்பட்டது