நற்றிணை-2/275
275. பேதை நெய்தல் பெருநீர்ச் சேர்ப்பன்!
- பாடியவர் : அம்மூவனார்.
- திணை : நெய்தல்.
- துறை : சிறைப்புறமாகத் தலைமகனது வரவு உணர்ந்து வற்புறுப்ப, வன்முறை எதிர்மொழிந்தது.
[(து.வி.) : தலைவன் வந்து செவ்வி நோக்கியபடி ஒருசார் ஒதுங்கி நிற்கின்றான். அதனை அறிந்த தோழி பிரிவுத் துயராலே வாடியிருக்கும் தலைவியைத் தேற்றுவாளாக, 'அவன் விரைவிலே வருவான்' என்று வலியுறுத்தி கூறுகின்றாள். அவளுக்குத் தன்னுடைய கற்புத்திண்மையும் வருத்தமும் புலப்படத் தலைவி பதிலிருப்பதாக அமைந்த செய்யுள் இது.]
செந்நெல் அரிநர் கூர்வாட் புண்ணுறக்
காணார் முதலொடு போந்தெனப் பூவே
படையொடுங் கதிரொடும் மயங்கிய படுக்கைத்
தன்னுறு விழுமம் அறியா மென்மெலத்
தெறுகதிர் இன்துயில் பசுவாய் திறக்கும்
5
பேதை நெய்தல் பெருநீர்ச் சேர்ப்பற்கு
யான்நினைந் திரங்கேன் ஆகநோய் இகந்து
அறனி லாளன் புகழ்வென்
பெறினும் வல்லேன்மன் தோழி யானே!
தெளிவுரை : தோழீ! முற்றிய செந்நெற் கதிரை அரிபவரது கூரிய வாளாலே அறுக்கப்பட்ட நெய்தலானது, அதனைக் காணாதவரான அவரது நெற்கதிர்க் கட்டுக்களோடுஞ் சேர்ந்து, களத்திற்கும் போய்ச் சேரும். தன்னை அறுத்த வாட்படையோடும், தன்னை எப்புறமும் அழுத்தியபடி யிருக்கும் கதிர்களோடும் நேர்ந்த துயராலே கலங்கிய அந்நெய்தலானது, சூட்டோடு கிடக்கும் தனக்குற்ற துயரத்தையும் அறியாதாகி, இனிய துயிலைப் போக்கியபடி வெம்மையாலே தாக்கும் கதிர்களைக் கொண்ட கதிரவனின் வரவைக் கண்டதும் மகிழ்ச்சியுற்றதுமாகித், தன் பசிய இதழ்களைத் திறந்தபடி பூத்தலையும் செய்யும். அத்தகு பேதைமை வாய்ந்த நெய்தலைக் கொண்ட கடற்கரை நாட்டவன் நம் தலைவன். அவனுக்காக, அவன் என்னைப் பிரிவுத் துயராலே நலியச் செய்த கொடுமையை நினைந்தும், அதனாலே நமக்குற்ற பழியைக் கருதியும், யான் ஏதும் வருந்தமாட்டேன். என் நெஞ்சத்து நோயின் கொடுமையையும் கடந்து, அறனிலாளனாகிய அவன் என்பால் வந்து, என்னைப் புகழ்தற்கு எத்தகைய துயரத்தைப் பெரினும், அதனைத் தாங்கியிருக்கவும் யான் வல்லமை உடையேன். ஆதலின், நீதான் கவலையடைதல் வேண்டாம் காண்!
கருத்து : 'பிரிவை அவன் வரும்வரை பொறுத்திருப்பேன்' என்பதாம்.
சொற்பொருள் : செந்நெல் – நெல்வகையுள் ஒன்று, சிவப்பான அரிசி கொண்டது. படை – அரிவாள். மயங்கிய– வருத்தமுற்றுக் கலங்கிய. படுக்கை – பாயல்; அது நெற்சூடு. விழுமம் – துன்பம். தெறுகதிர் – வாட்டும் வெம்மை கொண்ட கதிர். பேதைத் தன்மை; இது கதிரவன் வரவு கண்டதும் துயரை மறந்து பசுவாய் திறந்து மலர்தல். அறனிலாளன் – அறநெறியைக் காக்கும் பண்பற்றவன்; தலைவனைக் குறித்தது; தன்னால் காதலிக்கப்பட்டாளை முறைப்படி மணந்து இல்வாழ்வாகிய அறத்தைப் பேணுதலை மறந்தவன் என்பதனால் இப்படிக் கூறினாள்; இதனால், தான் மணத்தை விரும்புவதையும் உணர்த்தினாள். என் பெறினும்-எவ்வகைத் துயரத்தை அடையப் பெறினும்; துயரமாவன, பிரிவால் நேர்ந்ததும், அன்னை அறிதலால் விளையும் அச்சமும், அலருரைகளால் உண்டாகும் பழியும் போல்வன.
விளக்கம் : 'பேதை நெய்தல் பெருநீர்ச் சேர்ப்பன்' என்றது, நெய்தற்கு உறும் துயரத்தை அறியாதே போயின தலைவன் என்றதாம். இதனால், தானுற்ற துயரத்தை அவனுக்குக் குறிப்பாகப் புலப்படுத்தினாள். நெய்தல் படையொடுங் கதிரொடும் மயங்கினாற் போலத், தானும் தலைவனின் காதன்மையோடும், தன் குடும்பப் பாங்கோடும் உழன்று மயங்கிய நிலையையும் உணர்த்துகின்றாள். கதிரவன் தெறுகதிர் வரவு கண்டதும், நெய்தல், தான் துயரை மறந்து பூவை மலரச் செய்து களிப்பதுபோலத், தானும் அவன் வரைந்து வருதலோடும், தன் துயரையும் மறந்து களிப்பவளாவள் என்பதுமாம். இதனால், பெண்மையின் திண்மையான தன்மையைத் தோழிக்கு உணர்த்தினாள். நெய்தல் வைகறைப் போதில் மலர்வது. ஆகவே, இரவெல்லாம் துயருற்ற தலைவியும் வைகறைப் போதில் இல்லத்தார் தன் நிலையைக் காணாமற்படிக்குத் தன் துயரை மறைத்து முக மலர்ச்சியோடும் புறத்தே தோன்றுவாள் என்பதாம்.
உள்ளுறை : நெய்தல், தான் பல துயருற்ற போதும், கதிரவன் தோன்றவும் மலர்ந்தாற்போல, பிரிவுத் துயராலே வாடியிருக்கும் தலைவியும், தலைவன் வரைவொடுவரின், அனைத்தும் மறந்தவளாக உவகை கொள்வாள் என்பதாம்.
இதனைக் கேட்டலுறும் தலைவன், தலைவியை முறையாக மணந்துகொண்டு, பிரியாது வாழும் இல்லற வாழ்விலே மனஞ் செலுத்துவான் என்பது இதன் பயனாகும்.