உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/277

விக்கிமூலம் இலிருந்து

277. அறிவும் கரிதோ அறனிலோய் !

பாடியவர் : தும்பிசேர் கீரனார்; தும்பிசொகினனார் எனவும் பாடம்.
திணை : பாலை.
துறை : பட்டபின்றை வரையாது, கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய, ஆற்றாளாகிய தலைமகள், தும்பிக்குச் சொல்லியது.

[(து.வி.) தலைமகன் தலைமகளை வரைவிடை வைத்துப் பிரிந்து போயிருக்கின்றான். அவன் நினைவால் அவள் வருந்துகின்றாள். அவன் குறித்தகாலமும் கழிந்தது. அதனால் அவள் துயரமும் பெரிதாயிற்று. அவ்வேளையிலே தம்முட் கூடியிருந்த தும்பிகளை நோக்கி, அவள் தன் நெஞ்சழிந்த நிலைமையைக் கூறுவாள்போல் அமைந்த செய்யுள் இது.]


கொடியை வாழி தும்பி இந்நோய்
படுகதி லம்ம யான்நினக் குரைத்தென
மெய்யே கடுமை அன்றியும் செவ்வன்
அறிவும் கரிதோ அறனிலோய்! நினக்கே?
மனையுறக் காக்கும் மாண்பெருங் கிடக்கை 5
நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய
தாறுபடு பீரம் ஊதி வேறுபட
நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்
சிறுகுறும் பறவைக்கு ஓடி விரைவுடன்
நெஞ்சுநெகிழ் செய்ததன் பயனோ, அன்பிலர் 10
வெம்மலை யருஞ்சுரம் இறந்தோர்க்கு
என்நிலை உரையாய் சென்றவண் வரவே!

தெளிவுரை : தும்பியே! என்னளவிலே நீதான் சொடியை! ஆயினும், நீதான் இன்புற்று வாழ்வாயாக! யானோ, இப்பிரிவுத்துயரென்னும் நோயின் காரணமாக செத்தொழிவேனாகுக! யான் நின்னை நம்பி என் நிலையை நினக்கு உரைத்ததனாலேதான் இந்நிலை எனக்கு ஏற்பட்டது. நின் உடலோ கருமையானது; அன்றியும் அதனைப்போலவே நின் அறிவும் செவ்விதாகக் கருமையானது தானோ! எம்மனையைப் பொருந்தக் காத்திருக்கும் மாட்சிமைப்படப் பெரிதாக அமைக்கப்பட்ட வேலியிடத்துள்ள, நுண்ணிய முட்களையுடைய மரங்களின் மீது பீர்க்குப் படர்ந்துள்ளது. பூந்தாதோடும் பூத்துள்ளதும் குலைகட்டியதுமான அப்பீர்க்கின் பூக்களிலே ஊதித் தேனைப் பருகினை! அதற்கு வேறுபட்டதாக நறுமணம் இல்லாமையினாற் போலும், என்பாற் படர்ந்துள்ள பசலையிடத்தும் வந்து ஊதினாயல்லை. நின் சிறிய குறிய பேட்டினுக்கு அன்புடையையாய் விரைவுடனே ஓடிப்போய் அதன் நெஞ்சம் நெகிழுமாறு அதற்குத் தலையளி செய்ததன் பயனோ இஃதெல்லாம்! என் காதலரோ என்பால் அன்பில்லாதவராயினார். என்னைப் பிரிவினால் இவ்வாறு வருந்தவிட்டு, வெம்மை கொண்ட மலையிடத்துள்ள கடத்தற்கரிய சுரநெறியையும் கடந்து சென்றுள்ளார். அவண் சென்று, இவ்விடத்தே என்பால் அவரும் வருமாறு, என் துயர நிலையை, அவருக்கு நீதான் உரைக்க மாட்டாயோ!

கருத்து : நீதான் உரைக்க மாட்டாயாதலின், இனிச்சாவு ஒன்றே எனக்கு எஞ்சியது என்பதாம்.

சொற்பொருள் : கொடியை – கொடுமை உடையை; கொடுமையாவது துன்புற்றார்க்கு நெஞ்சம் இரங்காத வன்கண்மை. படுக – செத்து ஒழிவேனாகுக. 'தில், அம்ம' அசைகள். செவ்வன் அறிவு – செவ்வையாக இருத்தற்கு உரியதான அறிவு; அதுதான் கரிதோ என்றது, அதுதான் செவ்வையினின்று மாறுபட்டதனால். அறன் – நீதி; இது நொந்தார்க்கு இயன்றதை உதவும் பண்பு. உற– பொருந்த. கிடக்கை – வீட்டைச் சூழ அமைந்து கிடப்பது; இது முள்மரத்தால் அமைந்த வேலி. தாறு–குலை. நாற்றம் – மணம்; பசலை நிறத்தால் பீர்க்கம் பூவை ஒத்திருப்பினும், மணம் இல்லாததனால் அதன்பால் மொய்த்தால் தேன் கிடையாது என அறிந்து தும்பி ஒதுங்கிற்றென்க. நெஞ்சு நெகிழ் செய்தல் – நெஞ்சம் நெகிழுமாறு தலையளி செய்தல். வெம்மலை – கோடையின் கடுமையால் வெம்மைப்பட்ட மலை. இறந்தோர் – கடந்தோர்.

விளக்கம் : 'நின்பால் உரைத்தும் பயனில்லை' என்பாள் நின்னிடம் உரைத்ததன் பயனோ இவ்வாறு யான் மேலும் துயருற்றது என்று நோகின்றனள். நெஞ்சம் கரியார்க்கு ஒன்றை உரைப்பின் அதுதான் மாறான பயனைத் தருமென்பது உலக வழக்கு. அதனை நினைந்து, இவ்வாறு கூறினளும் ஆம். 'தாறு' என்றது பீர்க்கின் காய்க் குலைகளை. 'ஓடி நெஞ்சு நெகிழ் செய்தல்' என்றது, அப்பெட்டையைப் பின்னே தொடர்ந்து பறந்து சென்று, அதன் ஊடலைத் தீர்க்கும் சிறப்பை. மனைப்புறம் காக்கும் என்றது மனையின் புறத்தே அமைந்து அதனைக் காத்தல். 'மாண் பெரும் கிடக்கை' என்றது, புறத்தார் கடந்து புக இயலாத உயரமும் செறிவும் அமையக் கிடக்கும் வேலியை.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/277&oldid=1698480" இலிருந்து மீள்விக்கப்பட்டது