உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/292

விக்கிமூலம் இலிருந்து

292. யாணர் வைப்பின் கானம் !

பாடியவர் : நல்வேட்டனார்.
திணை : குறிஞ்சி.
துறை : இரவுக்குறி மறுத்தது.
[(து.வி.) இரவுக்குறி வந்து ஒழுகுதலிலேயே மனஞ் செலுத்தியவனாக இருக்கும் தலைவனிடத்தே, தலைவியை மணம் செய்து கொள்ளும் எண்ணத்தைத் தூண்டக் கருதுகின்றாளான தோழி, இவ்வாறு சொல்லுகின்றாள்.]


நெடுங்கண் ஆரத்து அலங்குசினை வலந்த
பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்
தீந்தேன் கொள்பவர் வாங்குபு பரியும்
யாணர் வைப்பின் கானம் என்னாய்
களிறுபொரக் கரைந்த கயவாய்க் குண்டுகரை 5
ஒளிறுவான் பளிங்கொடு செம்பொன் மின்னும்
கருங்கற் கான்யாற் றருஞ்சுழி வழங்கும்
கராஅம் பேணாய் இரவரின்
வாழேன் ஐய மைகூர் பனியே!

தெளிவுரை : ஐயனே! நெடிய கணுக்கள் கொண்ட சந்தன மரத்தின் அசையும் கிளைகளிலே, பசுமை நிறம் அமைந்த இலையைக் கொண்ட நறுங்கொடியினதான தமாலம் சுற்றிப் படர்ந்திருக்கும். அத்தமாலத்தினை, காட்டிடத்தே இனிய தேன்எடுக்கும் குறவர்கள் வளைத்து அறுத்துக் கொண்டு போவர். அப்படிப் போகின்ற புது வருவாய் மிகுந்த இடத்தையுடைய கானம் என்றும் கருதமாட்டாய்! களிறுகள் தம்முட் பொருதலாலே இடிந்து கரைந்த பெரிய பள்ளங்கள் பொருந்திய ஆழமான பள்ளங்களிலே, ஒளிவிளங்கும் வெள்ளைப் பளிங்குக் கற்களோடு செம்பொன்னும் கிடந்து மின்னிக் கொண்டிருக்கும் கருங்கற்களிடையே ஓடும் காட்டாற்றது அருஞ்சுழியிடந் தோறும் முதலைகள் இயங்கியபடியிருக்கும் இவற்றையும் கருதாயாய், இரவு நேரத்திலே நீயும் வருவாய். இருள் நிரம்பிய பனிக்காலத்து இரவிலே நீ இப்படி வருவதைத் தொடரின், யானும் உயிர் வாழ்ந்திரேன்!

கருத்து : 'நினக்கு. ஊறு நேருமோவென்னும் கவலையே என்னைக் கொன்று விடும்' என்றதாம்.

சொற்பொருள் : ஆரம்–சந்தனம். வலத்தல்–சுற்றிப்படர்தல் கேழ்–நிறம். தமாலம்–தமாலக்கொடி; இது நறுமணமுடையது என்பதும் இதனால் அறியப்படும். பரியும்–பற்றி இழுக்கும். கயவாய் – பெரிய வாய். வான்பளிங்கு – வெண்பளிங்கு. கராம்–முதலை. 'நெடுந்தண் ஆரம்' எனவும் பாடம்.

இறைச்சி : தேனைக் கொள்பவர் சந்தன மரத்துப் படர்ந்த தமாலக் கொடியை அறுப்பர் என்றது, அவ்வாறே தலைவியின் நலனை நாடிவரும் நீயும் அவளைப் படர்ந்து வருத்தும் கவலையை ஒழிப்பாயாக என்பதாம்.

விளக்கம் : இன்று இவண் வந்து சேர்ந்த நீதான் இனித்திரும்புதல் வேண்டா என்பதாம். அதுதான் இயலாமையின் அவன் மணத்தினை விரைந்து செய்து கொள்ளுதற்கு நினைவான் என்பதுமாம். களிறு பொரக் கரைந்த கரையினைக் கொண்ட பள்ளங்களில் வெண்பளிங்கும் செம் பொன்னும் காணப்பெறும் என்றது, அவ்வாறே எதிர்பாராத நின்னது வருகையாலே தலைவியும் இன்பத்தை அடைந்தனள் என்பதாம். பொழுதும் களிறும் ஆற்றுச்சுழியும் அதனிடைக் கராமும் மைகூர் பனியும் கடந்து வருதலால், அவனுக்கு யாதாகுமோ என்னும் கவலையால் அவள் துயருற்றனள் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/292&oldid=1698516" இலிருந்து மீள்விக்கப்பட்டது