உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/300

விக்கிமூலம் இலிருந்து

300. முன்கடை நிறீஇச் சென்றனன்!

பாடியவர் : பரணர்.

திணை : மருதம்.
துறை : (1) வாயில் மறுத்தது; (2) வரைவு கடாயதூஉம் ஆம் (மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு மருதத்துக் களவு.)

[(து-வி) (1) பரத்தைபாற் சென்றிருந்த தலைவனின் தூதனாக வந்த பாணனிடம், காமக் கிழத்தியின் தோழியான விறலி, தன் தலைவி, தலைவனை ஏற்க விரும்பிலள் என்று உணர்த்துவதாக அமைந்த செய்யுள் இது; (2) வரைந்து வருதலில் மனஞ் செலுத்தாமல், களவிலேயே ஒழுகிவரும் தலைவனிடம், தலைவியை மணப்பது கருதினனாக, அயலான் ஒருவன் விரும்பி வந்து போயினன் என்று, தோழி கூறுவதாக அமைந்த செய்யுளும் இது.]


சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர்
மடத்தகை ஆயம் கைதொழு தாஅங்கு
உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண்டுறை ஊரன்
சிறுவளை விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம் 5
முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே!
நீயும், தேரொடு வந்து போதல் செல்லாது
நெய்வார்ந் தன்ன துய்யடங்கு நரம்பின்
இரும்பாண் ஒக்கல் தலைவன் பெரும்புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் 10
பிச்சைசூழ் பெருங்களிறு போல வெம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே!

தெளிவுரை : நெய் வடித்தாற் போலப் பிசிரடங்கிய நரம்புகளை இழுத்துக் கட்டியுள்ள யாழையுடைய, பெரிய சுற்றத்தைக்கொண்ட பாணர்களின் தலைவனே! விளங்குகின்ற தொடியணிந்தவளான அரசகுமாரியானவள் சினந்தாளாக, அவ்விடத்திலே அதற்கு எதிராக மடப்பத்தையுடைய தோழியர் கூட்டமானது, அச்சினத்தைத் தணிவிக்கும் பொருட்டாகக் கைதொழுது வணங்கினாற்போல, மிகுதியான காற்று மோதுதலாலே ஆம்பல் வளைந்து தாமரை மலரிடத்திலே சாய்ந்து வணங்கியபடியிருக்கும், தண்ணிய துறையையுடைய ஊருக்குரியவன் தலைவன்! அவன், சிறு வளையினையுடைய இவளுக்கு விலையாவது இதுவேயெனப், பெருந்தேரை ஒப்பனை செய்து, எமது முற்றத்தின்கண்ணே நிறுத்திச் சென்றுள்ளனன் கண்டாய்! அவனுடைய தேரினிலே வந்த நீயும், அவன் பின்னாகவே போதலைச் செய்யாமல், போர்க்களத்திலே பெரும் புண்பட்டவனாகிய அழகினைக் கொண்ட தழும்பன் என்பானின் ஊணூரிடத்தேயுள்ள, பிச்சைக்கு வந்த பெருங்களிறு நிற்றலைப் போல, எம்முடைய அட்டிற்சாலைக் கூரையின் ஓலையைத் தொட்டபடியே நிற்கின்றனையே! இதுதான் எதற்காகவோ?

கருத்து : நின் கருத்தினை யாம் ஏற்கமாட்டோம்; நீ நிற்பதாற் பயனின்று என்பதாம்.

சொற்பொருள் : சுடர்த் தொடி – ஒளி சுடரும் தொடி. கோமகள் – கோமானின் மகள். மடத்தகை ஆயம் – மடப்பத் தகைமை கொண்டவரான ஆயமகளிர். சிறுவளை விலை – அவளையடைதற்கான வரை பொருள். முன்கடை – முற்றம். துய் –பிசிர். பெரும்புண் – பெரிய போர்ப்புண்; 'பெரும்பூண்' என்றும் பாடம். 'ஊணூர்' தழும்பனின் கோநகர்.

உள்ளுறை பொருள் : காற்று மோதுதலாலே ஆம்பல் தாமரையைத் தாழும் என்றது, தலைவனின் ஏவுதலாலே நீயும் இங்கு வந்து எம்மிடத்தே இறைஞ்சி நிற்பாயாயினை என்றதாம்.

பயன் : தலைவனை ஏற்காது மறுத்து உரைத்தல்,

இரண்டாம் துறையின் தெளிவுரை : ஊரன் ஒருவன் இவளைப் பொன் அணிதலை விரும்பினன். இச்சிறுவளை உடையாளுக்கு விலை இதுவென்று தனது தேரினையும் அலங்கரித்துப் பொருளோடு எம் முற்றத்தே நிறுத்தித், தன் முதியோரையும் சான்றோரையும் அழைத்துவரப் போயுள்ளனன். நீயும் அவ்வாறே வந்து பரிசப்பொருளைத் தந்து மணந்து செல்வதற்கு முற்படாமல், தழும்பனது ஊணூரிடத்தே களிறு நிற்பதுபோல, அட்டிற்சாலைக் கூரையைத் தொட்டபடியே இரவெல்லாம் நிற்கின்றனை; யாது பயன்? இப்படியே நிற்பாயாக என்றதாம். இதன் பயன். தலைவனின் உள்ளம் மணந்து கோடலிற் செல்லும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/300&oldid=1698534" இலிருந்து மீள்விக்கப்பட்டது