உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/302

விக்கிமூலம் இலிருந்து

302. சுடர்வீக் கொன்றை!

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்.
திணை : பாலை.
துறை : பருவங் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது.
[(து-வி.) முன்னர்ப் பிரிந்து சென்ற பொழுதிலே, 'தான் கார்காலத்து மீண்டு வருவதாகத் தலைவன் கூறிச் சென்றிருந்தான். அந்தக் கார்காலத்தின் வரவு வரைக்கும் அவன் பிரிவைப் பொறுத்திருந்தாள் தலைவி. கார்காலம் வந்ததும், அவள் வேதனையும் மிகுந்தது. அவள் நலிவு மிகுதியைக் கண்ட தோழி, அவளைத் தேற்றுவாளாகச் சில கூறவும், அவள் தன் மிகுதியான வருத்தத்தைத் தோழிக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


இழையணி மகளிரின் விழைதகப் பூத்த
நிடுசுரி இணர சுடர்வீக் கொன்றைக்
காடுகவின் பூத்த வாயினும் நன்றும்
வருமழைக்கு எதிரிய மணிநிற இரும்புதல்
நறைநிறம் படுத்த நல்லிணர்த் தெறுழ்வீ 5
தாஅம் தேரலர் கொல்லோ சேய்நாட்டுக்
களிறுஉதைத் தாடிய கவிழ்கண் ணிடுநீறு
வெளிறில் காழ வேலம் நீடிய
பழங்கண் முதுநெறி மறைக்கும்
வழங்கரும் கானம் இறந்திசி னோரே ! 10

தெளிவுரை : தொலைவான நாட்டிடத்துள்ளதும், களிறு காலால் உதைத்து ஆடுதலினாலே மேலெழுந்த புழுதியானது செல்பவரின் கவிழ்ந்த கண்களிலும் விழுந்து மறைப்பதாயிருப்பதும், உட்புழையின்றி வயிரம் பாய்ந்த வேலமரங்கள் உயரமாக வளர்ந்திருப்பதும், பாழ்பட்டதுமான பழைய நெறியினையும் அப்புழுதி மூடிமறைப்பதுமான, செல்வதற்கரிய காட்டு வழியினும், பொருளார்வத்தினால் நம்மைப் பிரிந்து சென்றுள்ளவர் நம் காதலர். அவர் தாம்—

பொன்னிழை யணிந்த மகளிர்போல விருப்பந்தருமாறு பூத்துள்ள, நீண்டு சுரிந்த கொத்துக்களிலே விளங்கும் பூக்களைக் கொண்ட கொன்றையானது, காடெல்லாம் அழகு பெறுமாறு பூத்திருக்கின்றதாயினும், அதனையும், நன்மைப் பொருட்டாக வருகின்ற மழைக்கு எதிரேற்று விளங்கும் நீலமணியின் நிறத்தையுடைய பெரிய புதரிடத்தே வீழ்கின்றதனாலே, வெண்ணிறம் தோற்றுமாறு செய்த நல்ல கொத்துக்களையுடைய தெறுழமலர்கள் வீழ்வதனையும் காண்பவர், இதுதான் கார்காலம் என்று தெளிய மாட்டாரோ?

கருத்து : 'கார்காலம் வந்ததென அறிந்தும், அவர் மனம் பொருளைவிட்டு நம்மிடத்தே வருதலிற் சென்றதில்லையே' என்பதாம்.

சொற்பொருள் : சுரி – சுரிதலுடைய. எதிரிய – எதிரேற்ற. நரை நிறம் – வெண்ணிறம். தெறுழ் – ஒருவகைக் காட்டுமரம். வெளிறு – புட்புழை. காழ் – வயிரம். பழங்கண் – வருத்தம். முதுநெறி – பழைதான நெறி; பலகாலும் பலரும் சென்று திரும்பும் பழையதான வழி.

விளக்கம் : வருத்தந்தரும் கொடிய பாலையையும் பொருளார்வத்தால் கடந்து சென்றவரான நம் காதலர், இதுகாலை வழியும் கவின்பெற்றுக் கடத்தற்கு இனிதான போதும், நம்மை நிலையாமையால் அல்லவோ சொல்லிச் சென்றபடி திரும்பி வந்திலர் என்று நோகின்றனள். தெறுழம் பூக்கள் உதிர்தலால் கரிய புதர் வெண்ணிறம் பெற்று அழகிதாகத் தோன்றுமாறு போல, அவர் வந்து தலையளி செய்தனராயின், தானும் துயர் நீங்கி அழகுபெறுவதையும் நுட்பமாகக் கூறுகின்றனள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/302&oldid=1698549" இலிருந்து மீள்விக்கப்பட்டது