உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/316

விக்கிமூலம் இலிருந்து

316. மேகம் மடமையுடையது!

பாடியவர் : இடைக்காடனார்.
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.

[(து-வி.) தலைவனைப் பிரிந்த பிரிவுத் துயரத்தால் தலைவியின் மனத்துயரம் பெரிதாகியது. அவள் பெரிதும் நலிவடைகின்றாள். அவள் துயர நிலைகண்டு மனம் வருந்தினாள் தோழி தலைவிக்கு அவள் தேறுதல் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


மடவது அம்ம மணிநிற எழிலி
மலரின் மௌவல் நலம்வரக் காட்டிக்
கயலேர் உண்கண் கனங்குழை இவைநின்


எயிறேர் பொழுதின் எய்தரு வேமெனக்
கண்ணகன் விசும்பின் மதியென உணர்ந்தநின் 5
நன்னுதல் நீவிச் சென்றோர் நல்நசை
வாய்த்துவரல் வாரா அளவை அத்தக்
கல்மிசை யடுக்கம் புதையக் கால்வீழ்த்துத்
தளிதரு தண்கார் தலைஇ
விளியிசைத் தன்றால் வியலிடத் தானே! 10

தெளிவுரை : தோழி! கயல்மீன்போன்ற மையுண்ட கண்களையும், கனவிய குழையையும் உடையவளே! மலரையுடைய முகையை அழகுதோன்றக் காட்டியபடி, இம்முல்லையானது நின் பற்களைப்போலத் தோற்றும் அரும்புகள் ஈனுகின்ற அத்தகு பொழுதிலே, யாமும் நின்பால் வந்தடைவேம் என்று நமக்குத் தேறுதல் கூறிப் பிரிந்து போயினவர் நம் தலைவர். 'இடம் அகன்ற வானத்தினிடத்தே உள்ளதான நிலவோ' என்னுமாறு அமைந்த, நின் முகத்திடத்தேயுள்ள நறிய நுதலைத் தடவிவிட்டபடியே, நினக்கு ஆறுதலும் கூறிச்சென்றவரும் அவர். அவர்தாம், நம்மை வந்தடையும் விருப்பினராகி, நம்பாலே வந்து சேராததன் முன்பாகவே—இக்காலமல்லாக் காலத்திலேயும்—

சுரத்து நெறியையுடைய மலையின்மேலே, அதன் பக்கவிடம் எல்லாம் மறையும்படியாகக் காலிறங்கி, நீர்த்துளிகளையும் பெய்வதாய், தண்ணிய மேகமானது, அகன்ற வானத்திடத்தே இடிமுழக்கத்தையும் மேற்கொள்ளா நின்றது. ஆதலினாலே, நீலமணியைப் போலும் நிறத்தை உடையதான இம்மேகமும் மிக்க அறியாமை உடையது, காண்பாயாக!

கருத்து : 'அவர்தாம் தம் சொற் பிழையாதவராய், குறித்த காலத்தே மீண்டு வருவர்; நீதான் அதுவரை தேற்றி இருப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : மடவது – மடமை உடையது; மடமையாவது குறித்த காலத்தின் வரவுக்கு முற்பட வந்த அறியாமைச் செயல். மணி – நீலமணி. மௌவல் – முல்லை. கண்ணகன் – இடம் அகன்ற. நீவி – தடவி; தடவுதல் அன்பினைக் காட்டுதற்கான செயல். நசை – விருப்பம்; நல் நசையாவது நமக்கு நன்மை செய்தல் வேண்டுமென்னும் விருப்பம். வாரா அளவை – வாராததன் முன்பேயே, அடுக்கம் – மலையடுக்கம். கால்வீழ்த்தல் – காலிட்டுப் பெய்தல். விளி – கூப்பீடு; இடியின் முழக்கம்.

விளக்கம் : 'அவர் குறித்த காலத்துத் தவறாது வருவர்; ஆதலின், அவர் வருதற்கு முற்பட வந்த இக்கார்தான் மடமை உடையது.' இப்படிக் கூறுவதன் மூலம் அவள் துயரத்தை மறக்கவைக்க முயலுகின்றாள் தோழி. அவர்தாம் சூள் பொய்த்தனராதலின், அவர் அணங்கப்பெறுவர் என்னும் அச்சத்தையும் இதனால் போக்கியதாயிற்று. முல்லை யரும்புவது கார்காலத்து என்பதையும் சுட்டி அதனை உரைத்தானாகலாம். 'இவை நின் எயிறேர் பொழுதின்' என்றது, நலம் புனைந்து உரைத்து அவள் கவலையை மாற்றித் தெளிவித்ததாம். இக்காலவரவு அவர் சென்றிருக்கும் இடத்தும் உளதாம்; ஆதலின், அவர் சொற்பிழையாராய் நம்மை நினைந்து விரைவிலே திரும்புவர் என்பதுமாம். இதனைக் கேட்கும் தலைவி தன் துயர் மறந்து ஆற்றியிருப்பாளாவள் என்பதுமாம்.

'மடவது அம்ம மணிநிற எழிலி' என்றது, அவன் சொற் பிழையான் ஆகவே, காலவரவுக்கு முற்பட்டு எழுந்து தோன்றிய இம்மேகந்தான் மடமையுடையது எனக் கூறிப் பழித்ததாம்.

'எயிறு ஏர் பொழுது'—அவள் சிறு நகைபோல முல்லை அரும்புகளை ஈன்று தோன்றும் கார்காலப் பொழுதினைக் குறித்ததாம்.

பயன் : அவர்தாம் சொன்ன காலத்து வரவில்லை என்ற போதும், காலம் நம்மை நினைப்பிக்க, விரைவிலே வந்து சேரவேண்டும் என்று தாம் விரும்பி, அமைதி காண்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/316&oldid=1698584" இலிருந்து மீள்விக்கப்பட்டது