உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/317

விக்கிமூலம் இலிருந்து

317. கண்கள் என்னாகுமோ?

பாடியவர் : மதுரைப் பூவண்டனாகன் வேட்டனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி தலைமகனை வரைவு கடாயது.
[(து-வி.) தலைவியை மணந்து கூடி இல்லறமாற்றக் கருதானாக, அவள் களவில் தரும் இன்ப நலத்தையே நாடியவனாக வருகின்றான் தலைவன். அவன் உளத்தை வரைந்து வருதலிற் செலுத்தக் கருதிய தோழி கூறுவதாக அமைந்தது இச்செய்யுள்.]

நீடிருஞ் சிலம்பில் பிடியொடு புணர்ந்த
பூம்பொறி யொருத்தல் ஏந்துகை கடுப்பத்
தோடுதலை வாங்கிய நீடுகுரல் பைந்தினை
பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும்
உயர்வரை நாடநீ நயந்தோள் கேண்மை 5
அன்னை அறிகுவள் ஆயின்—பனிகலந்து
என்னா குவகொல் தானே—எந்தை
ஓங்குவரைச் சாரல் தீஞ்சுனை யாடி
ஆயமொடு குற்ற குவளை
மாயிதழ் மாமலர் புரைஇய கண்ணே. 10

தெளிவுரை : நெடியதும் பெரியதுமான மலைப்பக்கத்திலே, பிடியானையோடும் கலந்த, முகத்திலே புள்ளிகளையுடைய அழகிய களிற்று யானையினது தூக்கி எடுத்த துதிக்கையைப் போல, மேலிலை நீங்கிய நீண்டு வளைந்த பசிய தினையின் கதிர்கள் வளைந்து விளங்கும். பவளம்போலச் சிவந்த வாயையுடைய பசுங்கிளிகள், அக்கதிர்களைக்செய்து கொண்டும் போகா நிற்கும். அத்தன்மை கொண்டதான உயர்ந்த மலைநாட்டிற்கு உரியவனே! நீதான் விரும்பிக் காதலித்தவளாகிய தலைவியது நட்பினை அன்னையும் அறிந்தாளானால்—

எம் தந்தையது உயரமிகுந்த மலைச்சாரலிடத்தே உள்ளதான, இனிய சுனை நீரிலே நீராடினமாய், தோழிப் பெண்களோடும், அச்சுனையிடத்தே பறித்த குவளை மலரின், கரிய இதழ்கள் கொண்ட சிறந்த மலரைப்போல விளங்கும் எம் கண்கள்தாம்,

கண்ணீர் கலந்து வடியப் பெறுவதாகி, இனி என்ன கேட்டைத்தான் அடையுமோ?

கருத்து : 'நின்னைக் கண்டு மகிழ்கின்ற எம் கண்கள் நலனழியாத வகையில், நீதான் மணந்துகொண்டு அருள வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : நீடிருஞ் சிலம்பு – நெடிதும் பெரிதுமான மலைப்பகுதி. ஒருத்தல் – தலைவனாகிய களிறு. தோடு – மேலிலை; கதிரை மூடியிருக்கும் இவ்விலைகளைத் 'தோடு' என்பதே இன்றும் மரபாகும். பொறி – புள்ளிகள். ஏந்துகை – மேலாக ஏந்திய கை; தோடு நீங்கிய தினைக்கதிரின் தோற்றத்திற்கு உவமை. கவரும் – கவர்ந்து போம்; உரியவர் அறியாதபடி கொண்டு செல்லும். வாங்கிய கதிர் – வளைந்த கதிர்; நீண்டு பருத்த கதிருமாம். குறுதல் – பறித்தல்.

விளக்கம் : தினை முற்றியது; இற்செறிப்பு இனி நிகழும்; இவளோ நின் பிரிவைத் தாங்கமாட்டாதே நலிவாள்; இரவுக் குறி வாய்த்தலும் அரிது; அன்னை அறியினும் ஏதமாம்; ஆகவே, இனி, இவளை விரைய வந்து மணந்து கொள்ளுதலே செயத்தக்கதான உரிய செயல் என்பதாம். நுகர்தற்கான பருவங்கொண்ட முற்றிய தினைக்கதிரைக் கிளிதான் கவர்ந்து சென்று உண்டு இன்புற்றாற்போல, நீயும் மணப்பருவம் பெற்ற இவளை, இவளைப் பெற்றோர் அறியாதே களவில் அடைந்து இன்புறுவாய் ஆயினை என்பதாம்.

உள்ளுறை : கொய்துகொண்டு போன கிளிக்கன்றி, அதனை முயன்று பயிரிட்ட கொல்லையுடையார்க்குத் தினைக்கதிர் பயன்படாது போயினது போன்று, இவளும் நலன் நுகர்ந்து இன்புறும் நினக்குப் பயன்பட்டவளன்றித், தான் பிறந்த குடிக்கும், தன்னைப் பெற்றோருக்கும் யாதும் பயனற்றவள் ஆயினாள் போலும் என்பதாம்.

பாடபேதம் : பூவண்டூர் நாகன் வேட்டன் எனவும் பாடியவர் பெயர் வழங்கும். மதுரை நாட்டுள்ள ஓர் ஊர் இது என்பர்.

பயன் : கண்ணழகு என்னாகுமோ என்று கவல்வதனால், அதுதான் கெடாமையை நினைக்கும் தலைவன், விரைவில் மணவினையை முடித்தற்கு முயல்வான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/317&oldid=1698587" இலிருந்து மீள்விக்கப்பட்டது