உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/334

விக்கிமூலம் இலிருந்து

334. இன்னுயிர் நிலையே!

பாடியவர் : ஐயூர் முடவனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி இரவுக்குறி முகம் புக்கது.

[(து.-வி.) 'முகம்புக்கது என்பது' முகத்தோற்றத்தாலேயே தான் சொல்லக் கருதி வந்ததொன்றினை, உரியவர் உணர்ந்து கொள்ளச் செய்வதாகும். தலைமகன் இரவுக்குறி வேண்டினான் என்னும் செய்தியைத் தலைமகளுக்கு அறிவித்து இசைவிக்க வந்த தோழி, அதனைச் சொல்லால் இவ்வாறு கூறி, தன் முகக்குறிகளால் புரியவைக்கின்றனள்.]


கருவிரல் மந்திச் செம்முகப் பெருங்கிளை
பெருவரை அடுக்கத்து அருவி ஆடி,
ஓங்குகழை ஊசல் தூங்கி, வேங்கை
வெற்பணி நறுவீ கற்சுனை உறைப்ப;
கலையொடு திளைக்கும் வரையக நாடன் 5
மாரி நின்ற ஆரிருள் நடுநாள்,
அருவி அடுக்கத்து ஒருவேல் ஏந்தி,
மின்னுவசி விளக்கத்து வரும் எனின்,
என்னோ—தோழி! நம் இன்னுயிர் நிலையே!

தெளிவுரை : தோழி! கரியவான விரல்களையுடைய மந்திக் கூட்டத்தின், சிவந்த முகங்களையுடைய பெரியவொரு கூட்டிமானது, பெரிய மலைப்பக்கத்துள்ள அருவியிலே நீராட, உயர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில்களின் நுனியைப் பற்றி ஊசலும் ஆடி, மனைக்கே அழகுசெய்திருக்கும் வேங்கைமரத்தின் நறுமலர்கள் கல்லிடையேயுள்ள சுனை நீரிலே உதிர்ந்து வீழும்படியாகத், தம் கடுவன்களோடு களித்திருக்கின்ற மலையகநாடன் நம் தலைவன். அவன்தான், தன் கையிலே ஒப்பற்ற வேலினை ஏந்தியவனாக, மாரிக்கால மழையானது நிலைத்துள்ள மிக்க இருளையுடைய இரவின் நடுச்சாம வேளையிலே, மின்னலானது இருளைப் பிளக்க எழுகின்ற வெளிச்சமே வழியறியும் விளக்கமாகக் கொண்டு, அருவிகளையுடைய மலைப்பக்கத்தைக் கடந்து, நம்மைக் காணுதற் பொருட்டாகவும் வருவான் என்றால், தோழி! நம் இன்னுயிர் எவ்வாறு நிலைத்திருக்குமோ, அறிகின்றிலேனே!

கருத்து : அவன் வரும் வழியின் ஏதத்தை நினைத்து நினைத்துத் துடித்து வருந்துவேன் என்பதாம்.

சொற்பொருள் : கருவிரல் – கரியவிரல். மந்தி – குரங்கின் பெண். ஊசல் தூங்கி – ஊசல் ஆடி. 'வெற்பணி வேங்கை நறுவீ என்று கூட்டிப் பொருள் காண்க. கலை – குரங்கின் ஆண். திளைக்கும் – காதற் களியாட்டயர்ந்து இன்புறும். ஆர் இருள் – மிகுதியான இருள். நடுநாள் – இரவின் நடுச்சாமவேளை. ஒரு வேல் – ஒப்பற்ற வேல்; ஒற்றை வேலெனினும் பொருந்தும். வசி – பிளக்கும். விளக்கம் – ஒளியாகிய விளக்கம்.

உள்ளுறை : மந்தி அருவியாடி, ஊசல் தூங்கி, வேங்கை வீ கற்சுனை உறைப்பக் கலையொடு திளைக்கும் என்றது, அவ்வாறே நீயும் பகற்போதில் ஆயத்தாருடனே அருவியாடிக் களித்தும், ஊசலில் அமர்ந்து இனிதாடியும், வேங்கைப் பூக் கொய்து விளையாடியும் மகிழ்ந்தனையாய், இரவிலே நின் காமவேட்கை முற்றத் தீருமாறு நம் வீட்டையடுத்த வேங்கை மரத்து நீழலிலே அவனுடன் இன்புற்று மகிழ்வாயாக என்பதாம்.

விளக்கம் : 'என்னோ நம் இன்னுயிர் நிலையே!' என்னும் சொற்கள், இரவில் அவன் வருதலைத் தாம் ஏற்கவில்லை என்று கூறினபோதும், உட்பொருள் செய்தி அறிவித்தலும், அதனைக் கேட்கும் தலைவி, முகக்குறிப்பால் இசைவு தெரிவித்தலும் நிகழ்ச்சியாகக் கொள்க. பேச்சிலே உள்ளத்தை மறைத்துப் பேசி, உரியவர் மட்டும் புரிந்துகொள்ளச் செய்யும் ஆற்றலும் இதனாற் பெறப்படும்.

வேங்கை நறுவீ கற்சுனையில் வீழ்ந்தது வேங்கை மரக்கிளையிலே கலையும் மந்தியும் கூடிக் களித்த களியாட்டத்தால் என்க.

பயன் : இதனால், தலைவியும் தோழியின் குறிப்புச் செய்திகளை உணர்ந்தாளாய், ஆயத்தினின்றும் நீங்கிச் சென்று, தலைவனுடன் கூடியின்புற்றுத் தன் ஆர்வம் தணிவாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/334&oldid=1698630" இலிருந்து மீள்விக்கப்பட்டது