உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/348

விக்கிமூலம் இலிருந்து

348. உலகத்தோடு போராடுமோ?

பாடியவர் : வெள்ளி வீதியார்.
திணை : நெய்தல்.
துறை : வேட்கை பெருகத் தாங்கலளாய், ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது.

[(து-வி.) தலைவன் பிரிவாலே பொங்கி எழும் ஆற்றாமையைத் தாங்க முடியாத ஒரு தலைவி, தன் துயரை நினைந்து புலம்புவதாக அமைந்த செய்யுள் இது.]


நிலவே, நீல்நிற விசும்பில் பல்கதிர் பரப்பிப்
பான்மலி கடலின் பரந்துபட் டன்றே;
ஊரே, ஒலிவருஞ் சும்மையொடு மலிதொகுபு ஈண்டிக்
கலிகெழு மறுகின் விழவய ரும்மே
கானே, பூமலர் கஞலிய பொழிலகம் தோறும் 5
தாதமர் துணையொடு வண்டிமி ரும்மே;
யானே? புனையிழை நெகிழ்ந்த புலம்புகொள் அவலமொடு
கனையிருங் கங்குலும் கண்படை இலெனே;
அதனால், என்னொடு பொரும் கொல்இவ் உலகம்?
உலகமொடு பொரும்கொல், என் அலமரு நெஞ்சே? 10

தெளிவுரை : நிலவானாலோ, நீல நிறத்தையுடைய வானிடமெல்லாம் பலவான கதிர்களைப் பரப்பியதாய், பால் மிகுந்த கடலைப் போல, எங்கும் பரந்திருக்கின்ற தன்மைத்தாய் உள்ளது;

ஊரானாலோ, தழைந்து வருகின்ற பேரொலியோடு நிறைந்து, ஒன்றாகச் சேர்ந்தெழும் பேராவாரத்தோடு, தெருவெங்கும் திருவிழாக் கொண்டாடும் தன்மைத்தாய் உள்ளது;

காடானாலோ, பூக்கள் மலர்ந்து நிறைந்துள்ள பொழிலிடங்கள் தோறும், தாம் விரும்பும் துணையோடு கூடியவாக வண்டினங்கள் திரிந்து ஒலி செய்வதாக உள்ளது;

யானோ, புனைந்துகொண்ட அணிகளையும் கழன்று வீழுமாறு செய்தவளாகத், தனிமைத்துயராலே கொண்ட வருத்தத்தோடு, மிகுதியான இருளையுடைய இந்த இரவுப் போதெல்லாம், கண்களை மூடாதவளாகத் துயிலின்றி வருந்தியவளாயுள்ளேன்.

அதனாலே, இந்த உலகம், தன்னோடு மகிழவில்லையென்று நினைத்து என்னோடு வந்து போரிடுமோ? அல்லது, என்னுடைய துயரங்கொண்ட நெஞ்சமானது, தன்னோடு வருந்தவில்லையென்று சென்று, உலகத்தோடு போய்ப் போரிடுமோ? எதுவுமே தோன்றவில்லையே எனக்கு?

கருத்து : 'எங்கும் மகிழ்ச்சியே தோன்றும் வேளையிலும், தனிமைத் துயரம் என்னை மட்டுமே வருத்துகின்றது' என்பதாம்.

சொற்பொருள் : பான்மலி கடல் – பால் நிறைந்த கடல்; நிலவு பாற்கடல் போல எங்கும் ஒளிபரப்பிப் பரந்தது என்பதாம். ஒலிவருதல் – தழைந்து வருதல். சும்மை – பேரொலி. கலி – ஆரவாரம். விழவு – விழா; இது வேனில் விழா ஆகலாம். கனையிரும் கங்குல் – மிகுதியான இருளையுடைய இரவுப்பொழுது. புலம்பு – தனிமைத் துயரம்.

விளக்கம் : நிலவொளியானது காமத்துயரை மிகுவிக்கும் என்பதால், அதனை முதலில் கூறினள். பாற்கடலிடத்தே நிலவு தோன்றியபின், அடுத்து ஆலகாலமும் நஞ்சாகத் தோன்றியது என்பதும் நினைக்க. ஊர் விழா நினைந்து வருந்தியது, விழவிலே கலந்தாடும் மகிழ்ச்சியும் துணையோடியிருப்பவர்க்கே இன்பந்தருவது என்பதனால் ஆகும். அடுத்து, துணையோடு வண்டினம் ஒலித்தலைக் கூறியது, சிற்றறிவினவான அவையும் துணையைப் பிரியாது கலந்து மகிழ்கின்ற போதில், தான் தனித்திருந்து வருந்துவதை எண்ணியது. தனிமையாலே வருந்துவாரின் மனம், துணையோடு கலந்து செல்லும் எந்த உயிரினத்தைக் காணும்போதும், மேலும் கனன்று நலியும் என்பதாம்.

ஆகவே, ஊரோடு ஒன்றாது தனித்துள்ள நான், என்னோடு துயரப்படாத ஊரைப் பொருதுவேனோ? அல்லது, ஊர் தன்னோடு மகிழாத என்னைப் பொருதுமோ? என்றது, அவள் தனிமை மிகுதியின் தாங்கவியலாத் தன்மையைப் புலப்படுத்துவதோடு, மனித மனத்தின் இயல்பையும் காட்டும். தன்னைப்போலவே தன் சுற்றுப்புறமும் பிறரும் விளங்குவதை எதிர்பார்ப்பதும், விளங்காதபோது நொந்து வருந்துவதும் மனவியல்பு ஆகும்.

பயன் : தலைவியின் ஆற்றாமை மிகுதியானது. இந்தப் புலம்பலாலே சிறிது தணிதல் கூடும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/348&oldid=1698666" இலிருந்து மீள்விக்கப்பட்டது