உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/354

விக்கிமூலம் இலிருந்து

354. நட்புக் கௌவையாகின்றது!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) தோழியாற் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; (2) மனைவயின் தோழியைத் தலைமகன் புகழ்ந்தார்க்கு மறுத்துச் சொல்லியதூஉமாம்.

[(து-வி.) (1) களவிலே வந்தொழுகும் தலைமகனிடம், 'இனித் தலைவி இற்செறிக்கப்படுவாள் போன்று நிலையுளது' என்று குறிப்பாகக் கூறி, விரைந்து மணந்து கொள்ளுமாறு அறிவுறுத்துவதாக அமைந்த செய்யுள் இது; (2) மணவினை கழிந்தபின், செவிலியோடு வந்த தோழியைத் தலைவன் புகழ்ந்து கூற, அவள், அதனை மறுத்து, எல்லாம் தலைவியது சால்பே என்று கூறுவதாக அமைந்த செய்யுளும் இது.]


தானது பொறுத்தல் யாவது கானல்
ஆடரை ஒழித்த நீடிரும் பெண்ணை
வீழ்கா வோலைச் சூழ்சிறை யாத்த
கானல் நண்ணிய வார்மணல் முன்றில்
எல்லி அன்ன இருள்நிறப் புன்னை 5
நல்லரை முழுமுதல் அவ்வயின் தொடுத்த
தூங்கல் அம்பித் தூவலஞ் சேர்ப்பின்
கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு
நெடுநெறி ஒழுகை நிரைசெலப் பார்ப்போர்
அளம்போகு ஆகுலம் கடுப்பக் 10
கௌவையா கின்றது ஐய! நின் நட்பே!

ஐயனே! கழிச்சோலையிடத்தேயுள்ள, ஆடியசையும் அடி மரத்தையுடைய நெடிய கரிய பனையிலிருந்து, கழித்து வீழ்த்திய காவோலைகளால் மறைப்புண்டாகக் கட்டியிருக்கப்பெற்ற கட்டுவேலியைக் கொண்ட, கானற்சோலையை அடுத்துள்ள வெண்மணல் முற்றத்திலே, இரவுபோன்ற இருண்ட நிறத்தையுடைய புன்னையின் நல்ல பெரிய அடிமரமாகிய அவ்விடத்திலே, பிணித்துக் கிடத்தலினாலே தங்குதல் கொண்ட தோணியை உடையதும், நீர்த்துவலைகள் தெறித்து விழுவதுமான கடற்கரையிடத்தே, கடுமையான வெயிலினாலே கொதிப்பேறிய கல்லைப்போல் விளைந்த உப்பினை ஏற்றிக்கொண்டு போதற்கு, நீண்ட வழியிலே செலுத்தும் வண்டிகள், ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக ஒழுங்குபடச் செல்வதைப் பார்ப்பவர்கள், அளத்து வெளியிலே விரைந்தோடும் ஆரவார ஒலியைப்போல, நின் நட்பானது, இப்போது பெரும் அலராகின்றது. யாங்கள் அதை எவ்வாறு பொறுத்திருப்போமோ?

கருத்து : 'விரையவந்து மணந்து கொள்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : ஆடரை – ஆடியபடியிருக்கும் அடிமரம். ஒழித்த – கழித்த. நீடிரும் பெண்ணை – நெடிய கரிய பனை. காவோலை – காய்ந்துபோன ஓலை. சூழ் சிறை – சூழச் செறிக்கப் பெற்ற வேலி; சூழயாத்த சிறை என்று கொள்க. வார்மணல் – வெண்மணல். முன்றில் – முற்றம்; இல்லின் முன்பக்கம். எல்லி – இரவு . தூவல் – சிதறும் துளிகள். சேர்ப்பு – கடற்கரைப் பகுதி. கல்விளை உப்பு – கல்லாக விளைந்த உப்பு; நீர்ப்பசையற்ற உப்பு எனலும் ஆம். நெடுநெறி – நெடிய வழி. அளம் – உப்பளப் பகுதி. கௌவை – பழிச்சொல்.

இறைச்சி : 'ஓலை சூழ் சிறை யாத்த கானல்' என்றது, எமரும் எம் அன்னையும் எம் இல்லகத்தைப் பாதுகாத்தலை மேற்கொண்டனர்; ஆதலின் இனி இரவுக்குறி வாயாது என்று உணர்த்தியதாம். புன்னை அடி மரத்திலே கோணி இயக்கமின்றிக் கட்டிக் கிடப்பது போல, இனித் தலைவியும் புறம் போகாதவாறு இற்செறித்துக் கட்டுப்பாடுகள் செய்யப் பெறுவள் என்பதாம்; தூவல் போல நின் அன்புரைகளால் அவள் வாழ்வாள் என்பதுமாம்.

விளக்கம் : பனையோலையால் வேலியை மறைத்துக் கட்டுதலைக் கூறியது; புறத்தே நின்றும் பிறர் கண்டு மயங்காதபடி என்று கொள்க. வேலியைக் கற்பாகவும், பனையோலையால் மறைத்தலைத் தன்நம்பிக்கையால் காத்தலாகவும் கொள்ளலாம். உப்பு வண்டிகள் களத்தை நோக்கி வருவது கண்டு பரதவர்கள் களிப்போடு நெருக்கியடித்துச் செல்வதுபோல, நீ இவளைக் காண வந்துபோவதும் பலர்க்கும் சொல்விருந்தாகி ஆரவாரமாயிற்று என்பதாம். அவ்வாறே, நீ வரைந்துவந்த போது ஊரெல்லாம் மகிழ்வோடு ஆரவாரித்து மகிழ, உங்கள் திருமணமும் நிகழ்வதாயிற்று என்று இரண்டாவது துறையோடு பொருத்திப் பொருள்கொள்க. கட்டுண்டு கிடக்கும் தோணி தூவலால் நனையும் என்பதுபோல, இற்செறித்து வருந்தியிருப்பினும், அலர் எழுவதனால் அவள் மனம் நின்பால் நிலைத்திருக்கும் என்பதும் கொள்க.

பயன் : தலைமகன் தலைமகளோடு பிரியாது வாழும் பெரு நெறி பேணி. இன்புறுவான் என்பதாம்.

பாடபேதங்கள் : யாவது வேனல்; வான்மணல்; முன்றில் கடுவெயிற் கலித்த.

இரண்டாவது துறைக்கும் ஏற்றவாறு பொருத்திப் பொருள் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/354&oldid=1698672" இலிருந்து மீள்விக்கப்பட்டது