உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/363

விக்கிமூலம் இலிருந்து

363. மணல் கொண்டு வருக!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : 1. பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி, 'தலைமகளை என்னை ஆற்றுவிக்கும் என்று ஆகாதோ எம்பெருமான் கவலாது செல்வது? யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்றால் நீ 'ஆற்றுவி' எனச் சொல்லியது; 2. கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத்ததூஉம் ஆம்.

[(து-வி.) 1. 'யான் வருந்தாது தெளிவிப்பேன் என்றோ நீதான் கவலையில்லாமற் போகின்றனை? யான் தெளிவிக்கவும் அவள் கவலை தீர்ந்திலது என்றால், நீதான் வந்து ஆற்றுவிக்க வேண்டும்' என்று, பகற்குறி வந்து மீளும் தலைவனிடம் தோழி தலைவியின் கவலைபற்றி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது. 2. தலைமகன் தந்த கையுறையை ஏற்று, அதனைத் தலைவிக்குத் தருவதற்கு இசைந்த தோழி, தலைவனிடத்தே சொல்வதாக அமைந்ததும் ஆம்.]


‘கண்டல் வேலிக் கழிசூழ் படப்பைத்
தெண்கடல் நாட்டுச் செல்வேன் யான்' என,
வியங்கொண் டேகினை யாயின், எனையதூஉம்
உறுவினைக்கு அசாவா உலைவில் கம்மியன்
வம்மோ—தோழி! மலிநீர்ச் சேர்ப்பு—
பொறியது பிணைக்கூட்டுந் துறைமணல் கொண்டு 5
பைந்தழை சிதையக் கோதை வாட
நன்னர் மாலை நெருநை நின்னொடு
சிலவிளங்கு எல்வளை நெகிழ
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே. 10

தெளிவுரை : நீர் மலிந்த கடற்கரை காட்டுத் தலைவனே, உடுத்திருந்த பசுமையான தழையுடைய சிதையவும், அணிந்திருந்த தலைமாலை வாடவும், நேற்றை மாலைப்பொழுதிலே, நின்னோடும், நல்லபடியாக, சிலவாகிய ஒளியுள்ள தன் கைவளைகள் நெகிழ்ந்தோட, வண்டுகளை ஆட்டி விளையாடியவளது, காற்சிலம்பானது உடைந்து போயினது. ஆதலினாலே, கண்டல் மரங்களை வேலியாகக் கொண்டதும், கழிகளாலே சூழப்பெற்றதுமான கொல்லைகளையுடைய தெளிந்த நல்ல கடல் நாட்டுக்கு யானும் செல்வேன் என்று நீயும் நெறிக்கொண்டு போவாய் ஆயினை. ஆயின், எத்துணையளவேனும், தான் செய்தற்குரிய தொழிலைச் செய்தற்கு வருத்தம் அடையாது, கெடுதலில்லாத கம்மியன், பொறியற்றுப் போனதை இணைத்து ஒன்று சேர்த்துச் செப்பஞ் செய்யவேண்டும் அல்லவோ! அதற்குக் கருக்கட்டுவதற்கான மண் எடுக்கும் துறையினின்றும் வேண்டிய மணலைக் கொண்டு தந்துவிட்டு நீயும் போவாயாக என்பதாம்.

கருத்து : 'இவளை மணந்து கொள்வதே இனி விரையத்தக்கது என்பதாம்.

சொற்பொருள் : படப்பை – கொல்லைப்புறம். தெண்கடல் –தெளிந்த நீரையுடைய கடல். வியங்கொண்டு – நெறிக் கொண்டு. உறுவினை – செய்தற்கான வினை. அசாவா – சோர்தலற்ற. உலைவில் – வருத்தமும் அடையாத. கம்மியன் – பொற்கொல்லன். பொறியறு – விட்டுவிட்டுப் போன. அலவன் ஆட்டல் – கடற்கரை நண்டுகளை விரட்டியோட்டி விளையாடி மகிழ்தல்.

விளக்கம் : 'நின்னொடு நெருநை அலவன் ஆட்டுவோள்' எனவே, இருவருக்கும் உள்ள உறவைத் தான் அறிந்ததை உணர்த்தினளாயிற்று. சிலம்பு உடைதலால் அன்னையறிந்து இற்செறிப்பு நிகழ்தலை நினைந்து தலைவி வருந்துவள்; அவளை என்னால் ஆற்றுவித்தல் அரிது; ஆதலின், நீயே துறைமணல் கொணர்ந்து, கொல்லனிடம் இச்சிலம்பினைச் சரிசெய்து தந்து, இவள் கவலையைப் போக்குவாய் என்பதாம். 'நீ வந்து ஆற்று விப்பாயாக' என்றது, அதுதான் வரைதற்பொருட்டு வருதலன்றிப் பிறவாற்றால் இயலாதென்பதும் குறிப்பாக உணர்த்தினளாம்.

பயன் : 'தலைவன் வரைந்து வந்து தலைவியை மணந்து கொள்வான்' என்பதாம்.

இரண்டாவது துறைக்கு : 'தோழி! சேர்ப்பனோடு நேற்று அலவனாடியதனாலே உடைபட்ட நின் சிலம்பு கண்டு அன்னை சினங்கொள்வாள்; ஆதலின், சிலம்பனிடம், 'நீ பிரிந்து போயினை என்றால், உடைந்த சிலம்பை மீளவும் ஒன்றுகூட்டுதற்கான மணல்கொண்டு வருவாயாக என்போம்' என்று பொருள் காண்க.

பயன் : தன் காதலைத் தோழி அறிந்தாளென அறியும் தோழி, கையுறைப் பொருளை ஏற்றுத் தலைவனுக்கு அருள் செய்வாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/363&oldid=1698681" இலிருந்து மீள்விக்கப்பட்டது