நற்றிணை-2/370
370. நகுகம் வாராய்!
- பாடியவர் : உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்.
- திணை : மருதம்.
- துறை : (1) ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் பாணற்குச் சொல்லியது; (2) முன் நிகழ்ந்ததனைப் பாணற்குச் சொல்லியது.
[(து-வி.) (1) மனைவியைப் பிரிந்து மறந்து பரத்தை இன்பத்திலே மயங்கிக் கிடந்தவன், மீண்டும் தன் மனைவியை நாடி வருகின்றான். அவளோ ஊடலாற் சினந்து ஒதுங்கி விடுகின்றாள். அவன் பன்முறை வேண்டியும் அவள் இசையவில்லை. அப்போது, அவனிடம் ஆற்றாமை மிகுகின்றது. அவளும் கேட்டறியுமாறு, தம் முன்னைக் காலத்து நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தவனாகத் தன் பாணனிடம் கூறுகின்றதாக அமைந்த செய்யுள் இது. (2) தலைவியை மறந்தனையே, அவள் சினந்து வெறுத்து ஒதுக்கினால் யாதாகுமோ எனக் கவலையோடு சொன்ன பாணனுக்கு, அவளது உழுவலன்பு புலப்படத் தலைவன். கூறியதாக அமைந்ததாகவும் கொள்ளலாம்.]
வாராய் பாண நகுகம்—நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக்கு உதவி
நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள்காழ்
விளங்குநகர் விளங்கக் கிடந்தோள் குறுகிப்
புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்த் தவ்வரித்
5
திதலை அல்குல் முதுபெண் டாகித்
துஞ்சுதி யோமெல் அஞ்சில் ஓதியெனப்
பன்மாண் அகட்டிற் குவளை ஒற்றி
உள்ளினென் உறையும் எற்கண்டு மெல்ல
முகைநாள் முறுவல் தோற்றித்
10
தகைமலர் உண்கண் கைபுதைத் ததுவே!
தெளிவுரை : பாணனே! இங்கே வருவாயாக. நேரான அணிகலன்களை அணிந்தவள் நம் தலைவி. அவள் சுற்றத்தாரால் பேணப்படும் தலைச்சூலினைக் கொண்டாளாக, நம் குடிக்குப் புதல்வனையும் தந்து உதவினாள். நெய்யுடனே கலந்து ஒளி வீசுகின்ற சிறு வெண்கடுகாகிய திரண்ட விதைகளை மாளிகையுள் அவளிருந்த இடம் எங்கும் பேய்க்காப்பாக விளங்கும்படித் தூவிவைத்திருந்தனர். அதற்கிடையே படுத்திருந்தவளை நெருங்கி, 'புதல்வனைப் பெற்றதனாலே தாய் என்னும் வேறொரு பெயரினையும் பெற்றனையாய், அழகிய வரிகளும் தித்தியும் உண்டய அல்குலைப்பெற்ற முதுபெண்டாகித் தூங்குகின்றாயோ, மென்மையோடு அழகிய சிலவாக முடிக்கப்பெறும் கூந்தலையுடையாளே!' என்று சொல்லி, பலவான மாட்சியுடைய அவள் வயிற்றிடத்தே என் கையிடத்துள்ள குவளை மலரால் ஒற்றிய படியே சிலபொழுது சுருதினேன். அங்ஙனம் சிந்தனை வயப்பட்டு நின்ற என்னைக் கண்டு, அவளும், முல்லையின் நாளரும்பைப் போன்ற குறுநகையினைத் தோற்றுவித்தனள். சிறந்த நீல மலர்போன்ற மையுண்ணும் தன் கண்களையும் கையால் மறைத்து மூடிக்கொண்டனள். அதனை நினைத்து எப்போதும் நான் மகிழ்ந்து நகையுடையவனாவேன். இப்போதும் நகுகின்றேன். நீயும் என் நிலைமையைக் காணாய் என்பதாம்.
கருத்து : "குடும்பத் தலைவியான அவளை யான் என்றுமே மறந்தேனில்லை" என்பதாம்.
சொற்பொருள் : பாணன் – பாணர் குலத்தவன்; தலைவனுக்குப் பரத்தையர் உறவிற்குத் துணையாக நின்று உதவும் பணியாளன். நேரிழை – நேரிய அணிகளை உடையவள்; பிற மகளிரினும் சிறந்தவள் என்று வியந்து பாராட்டிக் கூறியது. கடும்பு – சுற்றம். கடுஞ்சூல் – தலைச்சன் பிள்ளைப்பேறு. நம்குடி - நம்குடும்பம். நகர் – மாளிகை. ஐயவி – சிறு வெண்கடுகு. திதலை – தேமற்புள்ளிகள். பெயர் பெயர்த்து – பெயர் வேறொன்றாகி; புதல்வன் தாயாகி. அவ்வரி – அழகிய கோடுகள். அகடு – வயிறு. குவளை – குவளை மலர். குவளை ஒற்றி – கண்களை ஓடவிட்டுப் பார்த்து என்றும் சொல்லலாம். முகை நாண் முறுவல் – முல்லையது நாளரும்பு போன்ற மென்முறுவல்; முல்லைமுகையும் நாணித் தோற்கும் இளமுறுவல் எனினும் ஆம்.
விளக்கம் : 'குடிக்கு விளக்காகிய புதல்வனைப் பெற்றுத் தந்த சிறப்புடையவள்; என் புதல்வன் தாய் எனப் புதிய தகுதியும் பெற்றவள்; அவளை எவ்வாறு மறப்பேன்?' என்று தலைவன் தன் உள்ளன்பை இதன்மூலம் உணர்த்துகின்றான். இதனால், அவள் புதல்வனைப் பெற்று வாலாமையில் இருந்திட்ட காலத்திலே, அவன் புறம்போந்து பரத்தையொழுக்கத்திலே ஈடுபட நேர்ந்தது என்பதும் அறியலாம். அவள் பெற்று, அந்தக் களைப்புடன் கிடந்து துயின்றபோது அவன் சென்று கண்டதும், அவள் முறுவலித்துக் கையாற் கண்புதைத்ததும் சிறந்த குடும்ப ஓவியமாகும். 'நகுகம்' என்றது, 'அத்துணை உறவுடையாளே இப்போது நம்மை வெறுத்து ஒதுக்குகின்றனள்; நம் நிலை இத்தகையதோர் நிலைக்குத் தாழ்ந்ததனை நினைத்து நாம் நகுவோம்' என்று, விரக்தியாற் கூறினதாகக் கொள்க.
கருவுயிர்த்த பெண்களின் வயிறு மீண்டும் பழைய நிலைக்கு வருமுன், உயிர்த்த சில நாட்களில், வரியும் திதலையுமாகத் தோன்றும் என்பதனையும் நயமாகக் காட்டியுள்ளனர் ஆசிரியர்.பாடபேதங்கள் : துறையினை, 'ஊடல்நீட ஆற்றானாய் நின்றான், முன் நிகழ்ந்தனைப் பாணற்குக் சொல்லியது' என ஒன்றாக்கிக் கொள்வர்; இலங்கு நகர் விளங்க; நின்றனன் அல்லனோ யானே எற்கண்டு; உண்கண் புதைத்து வந்ததுவே.
பயன் : இதனைக் கேட்கும் தலைவி, தன்னுடைய பொறுப்பின் கடமையை நினைந்தாளாய்த், தலைவனை ஏற்றுக்கொள்வாள் என்பதாம்.