உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/375

விக்கிமூலம் இலிருந்து

375. நன்னுதல் உவப்ப வருக!

பாடியவர் : பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி.
திணை : நெய்தல்.
துறை : வரையாது நடுங்காலம் வந்தொழுக, தலைமகளது நிலையுணர்ந்து தோழி, வரைவுகடாயது.

[(து-வி.) மணம் செய்துகொள்வது பற்றிய நினைவே இல்லாமல், நெடுங்காலம் களவுறவிலேயே தலைவியோடு இன்பம் நுகர்ந்துவரும் தலைவனின் போக்கு தலைமகளுக்கு மிகுந்த வருத்தம் தருகிறது என்றாலும், அவளால் வெளிப்படச் சொல்லவும் இயலவில்லை. இந்நிலையில் தோழி, தலைமகனிடம் தம்முடைய நிலையைக் குறிப்பாக உரைத்து வரைவு வேட்டுக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


நீடுசினைப் புன்னை நறுந்தாது உதிரக்
கோடுபுனை குருகின் தோடுதலைப் பெயரும்
பல்பூங் கானல் மல்குநீர்ச் சேர்ப்ப
அன்பிலை; ஆதலின் தன்புலன் நயந்த
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப 5
வருவை ஆயினோ நன்றே—பெருங்கடல்
இரவுத்தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத்திரை
எறிவன போல வரூஉம்
உயர்மணல் படப்பைஎம் உறைவின் ஊரே!

தெளிவுரை : நீண்ட கிளைகளைக் கொண்ட புன்னையின் நறிய பூந்தாது உதிரும்படியாக, அக்கிளைகளின்மீது அழகாக அமர்ந்திருக்கும் நாரைக்கூட்டம், அக்கிளைகளை அலைத்தபடி பெயர்ந்து உலவாநிற்கும். பலவாகிய பூக்களையுடைய கானற் சோலைகளையும் மிக்க உவர்நீர்ப் பெருக்கையும் உடைய சேர்ப்பனே! நீதான் என்பால் அன்புள்ளவன் அல்லை! ஆதலினாலே, பெரிதான கடலிடத்து இரவுப் பொழுதிலே திங்கள் மண்டிலம் வானிடத்தே வெளிப்பட்டதனாலே, வலிய அலைகள் எழுந்து கரையை வந்து மோதுவனபோல வாரா நிற்கும், உயர்ந்த மணல்மேட்டுப் பகுதியிலுள்ள கொல்லையிடத்ததான, எம்முடைய வாழ்தற்கு இனிதான ஊருக்கு, அவளது கருத்தின்படியே விருப்போடு நடக்கும் என்பாலும் தன் துயரத்தை வாய்விட்டுச் சொல்லுவதற்கு வெட்கப்பட்டிருக்கும், நறிய நுதலையுடையவளான தலைவி உவப்படையுமாறு, நீதான் வரைவொடு வந்தாயானால், மிகவும் நலமாயிருக்கும்.

கருத்து : 'அன்பிலை எனினும், கடமை கருதியாவது நீதான் வரைந்து வருதல் வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : நீடுசினை – நீண்ட கிளைகள்; உயரமாக வளர்ந்திருக்கும் கிளைகளும் ஆம். புன்னை – புன்னைமரம். தாது – மகரந்தம். தோடு – தொகுதி. தலைப்பெயரல் – புறப்பட்டுப் போதல். மல்கு நீர் – மிகுதியான நீர்வளம். புலன் – அறிவு; கருத்து. என்னும் – என்பாலும். மண்டிலம் – திங்கள் மண்டிலம். பெயர்தல் – வானிலே எழுதல். உரவு – வலிமை. எறிவன – மோதித் தாக்குவன. படப்பை – தோட்டப்புறம். உறைவின் ஊர் – உறைதற்கு இனிதான ஊர்.

உள்ளுறை : 'புன்னைக் கிளையிலே தங்கி மகிழ்ந்த நாரைக் கூட்டம், பின்னர் அதன் பூக்களிலுள்ள மகரந்தத்தை உதிர்த்த படி, அதற்குத் தீமை விளைத்துப் போகும் பல்பூங்கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப' என்றனள். அவ்வாறே, நீயும் களவிலே கூடியின்புற்று மகிழ்ந்தனையாகி, இப்போது அவள் கலங்கித் துயரடையுமாறு கைவிட்டு அகன்றனை என்பதாம். அப்பழிதான் தீரும்படிக்கேனும், அவளை வரைவொடு வந்து மணந்து கொள்வாயாக என்பதுமாம்.

இறைச்சி : திங்கள் வானிலே எழுதலைக் கண்டதும், கடலானது பொங்கியெழுந்து ஆரவாரித்து வரவேற்கும் என்றது, அவ்வாறே நீதான் வரைவொடும் வரின், எம் ஊரவர் மகிழ்ச்சியால் ஆரவாரித்தவராக நின்னை வரவேற்று வரைவுடன் படுவர் என்றதாம்.

விளக்கம் : 'அன்பிலை' என்றதன்பின், 'வதுவை ஆயின் நன்றே' என்றது, நினக்கு இயல்பாக இருத்தற்குரிய அன்பில்லை என்றபோதும், நின்னாலே துயருள் வீழ்த்தப் பெற்ற தலைவியைக் காக்கும் பொருட்டாகவேனும், நீ வந்து அவளை மணந்து கொள்வாயாக என்பதாம்.

பயன் : தலைவன் தெளிவுற்று வரைவொடு வர, மணவினையும் தமர் இசைவுடன் நிகழ்ந்திட, அவர்கள் இல்லற வாழ்விலே இன்பத்துள் திளைத்துத் துயரம் தீர்வர் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/375&oldid=1698696" இலிருந்து மீள்விக்கப்பட்டது