உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/376

விக்கிமூலம் இலிருந்து

376. சிறிய உரைமின்!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.

[(து-வி) தலைவன் களவு உறவிலேயே மனவீடுபாடு கொண்டு தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். அவன் ஒரு நாள் வந்து, ஒருபுறமாக நிற்பதனைக் கண்டாள் தோழி. கிளிகளுக்குச் சொல்வாள்போல, அன்னை இற்செறித்த செய்தியைத் தலைவனும் கேட்டுணருமாறு தெரிவிக்கின்றாள்.]


முறஞ்செவி யானைத் தடக்கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைந்தாட் செந்தினை
வரையோன் வண்மை போலப் பலவுடன்
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்!
குல்லை குளவி கூதளங் குவளை 5
இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்
சுற்றமை வில்லன் செயலைத் தோன்றும்
நற்றார் மார்பன் காண்குறில் சிறிய
நன்கவற்கு அறிய உரைமின்; பிற்றை
அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி 10
வறும்பும் காவல் விடாமை
அறிந்தனிர் கொல்லோ அறனில் யாயே?

தெளிவுரை : முறம்போலும் செவியையுடைய யானையது, வளைந்த கைபோல வளைந்து தலைசாய்த்த கதிர்களைக் கொண்டன பசுமையான தாளினையுடைய செந்தினைப் பயிர்கள். அவற்றை வரையாது கொடுப்பவனின் வள்ளன்மை போலக் கருதி, பலவாகக் கிளையோடும் உண்ணுகின்ற வளைந்த வாயையுடைய பசிய கிளிக்கூட்டமே! தலைவன் நம்மோடு உறவாடிப் போயினதன் பின்னர், பின்பு, நம்மை அணங்கு தாக்கி வருத்துவது என்பதும் நிகழும்போலும்! அறநெறியில் நில்லாத அன்னையானவள் எம்மை வருத்தி, காவலின் அழிகின்ற தினைப்புனத்திற்குக் காவலின் பொருட்டுச் செல்வதற்கு விடாதிருத்தலையும் நீவிர் அறிவீர் அல்லவோ! ஆதலின், குல்லை, மலைப்பச்சை. கூதாளி, குவளை, தேற்றா என்பவற்றின் மலராலே புனைந்த ஈரிய தண்ணிய பூமாலையை உடையவனும், வரிந்து கட்டிய வில்லை உடையவனுமாக, அசோக மரத்தின் அடியிலே எம்பொருட்டாக வந்து நிற்கும், நல்ல தாரணிந்த மார்பனான எம் தலைவனைக் காண்பீரானால், சிறிதளவேனும், அவனுக்கு நன்றாகப் புரியும்படியாக எம்முடைய துயரத்தை உரைப்பீராக.

கருத்து : இனி அவனை எம்மால் களவிற் கண்டு கூடுதல இயலாது என்பதாம்.

சொற்பொருள் : முறஞ்செவியானை – முறம்போலும் காதுகளைக் கொண்ட யானை. தடைஇ – வளைந்து. இறைஞ்சிய –தலைதாழ்ந்த, பைந்தாள் – பசுமையான தாள். செந்தினை – சிவப்புத் தினை. வரையோன் – வரையாது வழங்கும் வள்ளல். பலவுடன் – பலவாக. வளைவாய் – வளைந்த வாயினையுடைய. ஈர்ந்தண் கண்ணி – ஈரிய தண்ணிய தலைமாலை. சுற்றமை வில் – வரிந்து கட்டிய வில். செயலை – அசோகு. சிறிய – சிறிதளவு. அவற்கு நன்கு அறிய – அவனுக்கு நன்றாகப் புலப்படுமாறு. அணங்கு – தெய்வம். அறனில்யாய் – அறமற்ற தாய்; அறமற்றவளானது, கன்னியர் காதல் கொள்வது அறமே என்பதை ஆன்றோர் வாக்காலும், தன் அநுபவத்தாலும் அறிந்திருந்தும் அதற்கு மாறானவே கருதும் தாய் என்பதால். வறும்புனம் – காவலிழந்துபோன புனம்.

விளக்கம் : செந்தினைக் கதிர்களை வள்ளலின் கொடை போலக் கருதிக் கிளியினம் தம் கூட்டத்தோடு கவர்ந்து உண்ணும் என்றது, அவ்வாறே தலைவியை இதுகாறும் தலைவன் தன் விருப்பம்போல் களவிலே இன்புற்றனன்; இனி அதுதான் இயலாது என்றதாம். 'சிறிய அவற்கு நன்கு அறிய உரைமின்!' என்றது, சிறிதளவேனும் எம் நிலையை அவன் நன்கு புரிந்து கொள்ளும்படியாகச் சொல்வீராக என்றதாம். 'பிற்றை அணங்கும் அணங்கும் போலும்' என்பது தலைவியின் எழிலிலே தோன்றும் புதிய மாறுதல்கள் அவனை நினைந்து ஏங்கும் ஏக்கத்தின் விளைவாயிருக்க, இனி வேறு ஓர் அணங்கும் தாக்கி வருத்துமோ என்பதாம். 'வரையோன்' என்பது வரையான் என்பதன் திரிபு.

பயன் : இதனைக் கேட்டலுறும் தலைவன், இனிக் களவு உறவு வாயாதென்பதும், தன்னையன்றி அவள் வாழாள் என்பதும் உணர்ந்தானாய், விரைவிலே மணந்துகொள்ளும் முயற்சிகளிலே ஈடுபடுவானாவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/376&oldid=1698698" இலிருந்து மீள்விக்கப்பட்டது