உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/377

விக்கிமூலம் இலிருந்து

377. கழறுபு மெலிக்கும் நோய்!

பாடியவர் : மடல் பாடிய மாதங்கீரனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சேட்படுக்கப்பட்டு, ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.

[(து-வி.) தலைவன் பாங்கியின் உதவியோடு தலைவியை அடைய முற்படுகின்றான். அவளோ, அவன் வரைந்து கொள்வதன்றிக் களவுறவிலேயே தொடர்ந்த நாட்டம் உடையவனாக இருப்பதறிந்து, அவனுக்கு உதவ மறுக்கின்றாள். அதனைப் பொறாத தலைவன், தன் நெஞ்சோடு சொல்வான் போல, அவளும் கேட்டுத் தனக்கு இரக்கம் காட்டும் வகையில் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]


மடல்மா ஊர்ந்து மாலைசூடிக்
கண்ணகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப்
பண்ணல் மேவலம் ஆகி அரிதுற்று
அதுபிணி யாக விளியலங் கொல்லோ— 5
அகலிறு விசும்பின் அரவுக்குறை படுத்த
பசுங்கதிர் மதியத்து அகனிலாப் போல
அளகஞ் சேர்ந்த சிறுநுதல்
கழறுபு மெலிக்கும் நோயா கின்றே?

தெளிவுரை : அன்ற கரிய வானத்திடத்தே, அரவினாலே விழுங்கப்பட்டுக் குறைப்படுத்தப்பட்ட, பசுமையான கதிர்கள் விரிதலையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல ஒளி வீசுகின்ற, கூந்தலோடு சேர்ந்த சிறு நுதலையுடையவள், சொல்வதானால், என்னை மெலிவிக்கின்ற ஒரு நோயாக ஆகின்றனளே? அதுதான் தீருமாறு, பனை மடலாலே செய்த குதிரையை ஏறிவந்தும், ஆவிரை எருக்கம் போன்ற மலர்களாலான மாலையைச் சூடியும், இடமகன்ற வைப்புக்களையுடைய நாடுதோறும் ஊர்தோறும், ஒள்ளிய நுதலுடையாளின் அழகினைச் சிறப்பித்துக் கூறியபடியாகச் செல்வதனை மேற்கொள்ளாதேம் ஆகி, அரிதாக நிலைப்படுத்தி, அதுவே பிணியாக நலிவிக்க, இறந்து போகவும் மாட்டேமோ? நெஞ்சமே! இனி, என்செய்வேம்.

கருத்து : 'அவள் நோயால் சாவதுதான் செயத்தக்கது போலும்' என்பதாம்.

சொற்பொருள் : மடல்மா – பனைமடலாலாகிய குதிரை. மாலை – எருக்கும் ஆவிரமும் பூளையும் விரவிக் கட்டிய மாலை. வைப்பு – நிலப்பகுதி. நலம் – அழகு முதலியன. அரிதுற்று – அரிதாக நிலைப்படுத்தி வைத்து; அஃதாவது அடக்கற்கரிய ஆசையையும் அடக்கி நிறுத்தி வைத்து. குறைபடுத்தல் – விழுங்கி ஒரு பகுதி மட்டும் வெளித்தோன்றுமாறு விட்டு வைத்திருத்தல்; கூந்தல் நாகமாகவும், நுதல் நிலவாகவும் கொண்டு நுதலானது நாகத்தால் குறைபடுத்தப்படுத்தப்பட்ட நிலவுபோலத் தோன்றும் என்றனன். மேவலம் – மேற்கொள்ளமாட்டோம். அது – அவள் தந்த காமநோயாகிய அது. விளிதல் – சாதல். பசுங்கதிர் மதியம் – பசுமையான கதிர்களையுடைய மதியம். அளகம் – கூந்தல். கழறுபு – சொல்வதற்கு. மெலிக்கும் – மெலிவிக்கும்.

விளக்கம் : அவளைச் சிறப்பித்துக் கூறியது, அவள் தந்த முன்னைய இன்ப நினைவுகளினாலேயாகும். முழுநிலவுபோல இன்பந் தந்தவள், இதுகால் அரவுக்குறைபடுத்த நிலாப்போல எனக்குத் துன்பந்தருவதேன் என்பவன், சிறுநுதலுக்கு அரவுக் குறைபடுத்த அகனிலாவை உவமை கூறுகின்றான். நோய் கொண்டு மெலிந்து மெலிந்து முடிவில் இறத்தலையே அடைவோம் என்பவன், மடலேறி வருதலையும் மேவலம் என்கின்றனன். மடலேறியும் மனமிரங்காளாயின், வரைபாய்ந்து உயிர்துறத்தலே செயத்தக்கது என உறுதிபூண்டு மடலேறத் துணிந்தானாகச் சொல்லியது எனவும் கொள்ளலாம். இதனை உணரும் தலைமகள் அவனுடைய ஆழமான அன்பின் வேகத்தை அறிந்து, அவனுக்கு உதவுதற்கு மனம் நெகிழக் கூடும் எனலாம். "குவிமகிழ் எருக்கம் கண்ணியும் சூடும்" எனவரும் அகம்(10) மடலூர்வார் சூடும் மாலையைக் குறிக்கும். சிறுநுதல் நோய் செய்தலை, 'கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் பிணித்தற்றால் எம்மே' எனக் குறுந்தொகையும் (129) கூறும்.

பயன் : இதனைக் கேட்கும் தலைவி, தலைவியை அவனோடு கூட்டுவித்து, அவன் ஏக்கத்தைப் போக்குவாள் என்பதாம்.

பாடபேதங்கள் : மடல் பாடிய மோதங் கீரனார், அணிநிலாப் போல கழறும் மெலிக்கும்; அரிது துற்றது; துற்றது— நுகர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/377&oldid=1698699" இலிருந்து மீள்விக்கப்பட்டது