உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/381

விக்கிமூலம் இலிருந்து

381. வேர்கிளர் மாஅத்து அம் தளிர்!

பாடியவர் : ஔவையார்.
திணை : முல்லை.
துறை : பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் பருவ வரவின்கண் சொல்லியது.

[(து-வி) : வினைவியிற் பிரிந்து போகும்போது, 'இன்ன காலத்து வருவேன்' எனக் குறித்துச் சென்றனன் தலைவன். அந்த காலம் வரும்வரை பொறுத்திருந்த தலைவி, அது வரவும் அவனை வரக்காணாதாளாகத் துடித்துச் சோர்கின்றாள். அவள் தன்னுள்ளே வருந்திக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது.]


'அருந்துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப்
பெரும்பிறி தின்மையின் இலேனும் அல்லேன்;
கரைபொரு திழிதரும் கான்யாற் றிகுகரை
வேர்கிளர் மாஅத்து அந்தளிர் போல


நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை 5
யாங்கனந் தாங்குவென் மற்றே!—ஓங்குசெலல்
கடும்பகட்டு யானை நெடுமான் அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசைசேண் விளங்கத்
தேர்வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே! 10

தெளிவுரை : தலை நிமிர்ந்தவாய்ச் செல்லும் விரைந்த நடையையுடைய களிற்றியானைப் படையினையும், விரைவாகச் செல்லும் குதிரைப்படையையும் உடையவன் அஞ்சி என்பவன். அவன், குளிர்ந்த உள்ளத்தோடு, தன் புகழானது நெடுந்தொலைவுக்கும் சென்று விளங்குமாறு, தன் நாளோலக்கமாகிய அரசிருக்கையிடத்தே வந்து, இரப்பவருக்குத் தேர்களையே பரிசிலாக வீசுவான். அவனது நாளிருக்கைபோல் மேகமானது நிலைத்திருந்து மழையையும் பெய்யத் தொடங்கியது—

'தாங்குவதற்கு அரிதான துயரினாலே வருந்துதலால் உண்மையாகவே சாகும்' எனச் செத்தொழியாமையினாலே, அவர்பால் அன்பில்லாதவளும் யான் அல்லேன். கரையைப் பொருதி ஓடுகின்ற காட்டாற்றின் இடிகரையிடத்தேயுள்ள, வேர்கள் எல்லாம் வெளிப்பட்டுத் தோன்றும் மாமரத்தின் அழகான தளிரைப்போல, நடுங்குதல் நீங்காத நெஞ்சத்தோடு, இந்தத் துன்பத்தையும் எவ்வாறு தாங்குவேனோ?' என்பதாம்.

கருத்து : இனியும் இத்துயரம் தாங்கேன் என்பதாம்.

சொற்பொருள் : உழத்தல் – உழன்று வருந்துதல். பெரும் பிறிது – சாக்காடு. இலேனும் – இல்லாதேனும்; இல்லாமற் போனது அன்பு. இகுகரை – இடிந்து கொண்டிருக்கும் கரை. மாஅத்து – மாமரத்தின். வேர்கிளர் – வேர் பறிக்கப்பட்ட. ஆனா – நீங்காத. இடும்பை – துன்பம். ஓங்கு செலல் – தலையுயர்த்துச் செம்மாந்து நடத்தல். பகட்டுயானை – களிற்றியானை. நெடுமான் – விரையச் செல்லும் குதிரை; நெடுமான் அஞ்சி பெயரும் ஆம். ஈரநெஞ்சம் – இரக்கமுள்ள குளிர்ந்த நெஞ்சம். தேர்வீசு இருக்கை – தேர்களைப் பரிசாகத் தருவதைக் குறித்து அமர்ந்திருக்கும் பரிசில் இருக்கை. மாரி – மழை.

விளக்கம் : மேகம் நிலையாக நின்று மழை பெய்வதற்கு அஞ்சியின் வழங்குதல் வேண்டுமென்னும் ஈரநெஞ்சத்தோடு அமர்ந்திருக்கும் இருக்கையை உவமித்தது மிகவும் சிறப்பாகும். ஆற்றங்கரையிலே இடிகரையிலிருக்கும் மாமரம், வேர் பறிக்கப் பட்டு எந்தநேரம் வீழுமோ என்ற நிலையிலே தந்தளித்தபடியிருக்கும்; அதன் அழகிய தளிர் சிறிது பொழுதிலேயே அழிவை அடையக்கூடும்; இவ்வாறு பிரிவுத் துயரம் தன் உயிரை வேரறுக்கத் தானும் மாந்தளிர்போல உயிர்கொண்டு இருப்பதாகத் தலைவி கூறுவது சோகத்தின் இறுதி எல்லையாகும்.

பாடபேதங்கள் : ஈரநெஞ்சம் ஓடிச் சேண் விளங்க.

பயன் : இதனால் அவள் மேலும் சிறிதுகாலம் அவன் வரவுநோக்கிப் பொறுத்திருப்பாள் என்பதும், அவனும் சொற்பிழையானாய் வந்து சேர்ந்து அவள் துயர் தீர்ப்பான் என்பதும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/381&oldid=1698703" இலிருந்து மீள்விக்கப்பட்டது