உள்ளடக்கத்துக்குச் செல்

நன்னெறி நயவுரை/நன்னெறி

விக்கிமூலம் இலிருந்து

கற்பனைக் களஞ்சியம்

நல்லாற்றூர்ச் சிவப்பிரகாச அடிகளார்

இயற்றிய

நன்னெறி நூலும்

முனைவர் சுந்தர சண்முகனார்

எழுதிய

நயவுரையும்

காப்பு-கடவுள் காத்தல்

மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.

உரை:

ஒளி வீசும் சடை முடியை உடைய விநாயகனின் திருவடிகளைத் தொழின், நன்னெறி நூலின் நாற்பது வெண்பாக்களும் நன்கு வரும்.

நூல்

என்றும் முகமன் இயம்பா தவர் கண்ணும்
சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர் - துன்றுசுவை
பூவிற் பொலி குழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து. 1

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினி தேனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க-ஈசற்கு
நல்லோன் எரிசிலையோ நன்னுதலாய் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு. 2

தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட் குரியவரால் தாங்கொள்க-தங்கநெடுங்
குன்றினாற் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப சுறந்து. 3

பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம்-பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. 4

நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர் பெருமை நொய்தாகும்-பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம். 5

நன்னெறி நயவுரை


மலரால் பொலிவு பெற்ற கூந்தலை உடைய பெண்ணே ! பொலிவுள்ள கைகள் மிக்க சுவை யுணவை நாக்கிற்கு நயமாகத் தருவது புகழ் பெறவா? (இல்லை; இயற்கையாய் நடைபெறுகிறது.) அதுபோல், குற்றம் அற்ற நல்லோர், எப்போதும் தம்மிடம் இச்சகம் பேசாதவரிடத்தும் சென்று இயற்கையாய்ப் பொருளுதவி செய்வர். 1

நல்ல நெற்றி யுடையவளே! சிவனுக்கு விருப்பமானது தீய நோக்குடன் மன்மதன் எய்த மலர் அம்பு அன்று; நன்மனத்துடன் சாக்கிய நாயனார் எறிந்த (அர்ச்சனைக்) கல்லே விருப்பமானது.அதுபோல, குற்ற மில்லா நன்மனத்தர் கண்டிக்கும் கடுஞ்சொல் நன்மைதரும். தீய நெஞ்சினரின் இன்சொல் வஞ்சகம் செய்யும். 2

பெரிய தங்கக் குன்றால் செய்தாற் போன்ற மார்பகம் உடையவளே! பசுவின் பாலை அதன் கன்றின் உதவியுடன் கறந்து கொள்வர். அதுபோல, தங்கட்கு உதவாதவர் கையிலிருந்து தாமொன்று பெற வேண்டின், அவர்கட்கு வேண்டியவரைக் கொண்டு பெற்றுக் கொள்க. 3

பிறர்க்கு உதவாத கரிய கடல் நீரை மேகம் போய்மொண்டு வந்து மழையாகப் பெய்து கொடுப்பது போல், பிறர்க்கு உதவாதவரின் பெரிய செல்வம், பிறர்க்கு உதவும் வேறுயாராவது ஒருவர் மூலம் பெறப்ப்ட்டுத் தரப்படும். 4

மலர்க் கூந்தலாளே! நெல்லின் உமி சிறிது பிரிந்த பின் முன்புபோல் மீண்டும் சேர்த்தாலும் ஒட்டுறுதிநிலை போய்விடல்போல, பிரியாத இருவர் மாறுபட்டுப் பிரிந்து விடின், மீண்டும் சேர்ந்தாலும், காணுங்கால் அவர்களின் நட்பின் சிறப்பு அற்ப மாகவே தோன்றும். 5

காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதில் ஒருகருமம் செய்யவே—ஒதுகலை
எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கில்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண். 6

கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடலே றனையசெருக் காழ்த்தி—விடலே
முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும். 7

உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க—வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு. 8

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத்தாம் மருவின்—பலியேல்
கடவுள் அவிர்சடைமேல் கட்செவியஞ் சாதே
படர்சிறையப் புள்ளரசைப் பார்த்து. 9

தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறுஉம்
வெங்குறைதீர்க் கிற்பர் விழுமியோர்—திங்கள்
கறையிருளை நீக்கக் கருதா துலகில்
நிறையிருளை நீக்கும்மேல் நின்று. 10

சொல்லப்படும் பதினாறு கலைகளும் பொருந்திய முழு நிலவு போன்றது என்று கூறக்கூடிய முகத்தாளே! பார்க் கும்போது இரண்டு கண்களும் ஒரு பொருளை மட்டுமே பார்க்கமுடிவது போல்,உண்மைக் காதல் உடைய மனைவியும் கணவனும் மாறுபாடு இல்லாமல், தீதற்ற நல்லதொரு செயலை ஒருமித்துச் செய்வர்.

6

பேரொலி செய்யும் குளிர்ந்த பெரிய கடலும். முனிவர்க்கு அரசாகிய அகத்தியன் கையால் வாரிஎடுத்து உண் ணப்பட்டு விட்டது. எனவே, யாம் செல்வத்தில் கடல் போன்றோம்; வலிமையில் சீயம் (சிங்கம்) போன்றோம் எனச் செருக்கு கொள்ளின் அமிழ்ந்து விடுவர். 7

வெள்ளத்தைத் தடுப்பது அருஞ் செயலா? பெரிய கரையை உடைத்து விடுதல் அருஞ் செயலா? சொல்க. தடுத்தல் போல், மனத்தை ஈர்த்து ஓங்கி எழுகின்ற சினத்தை அடக்கிக் காக்கும் பண்பேசிறந்த பண்பு என்று கொள்க. 8

(தாருகாவனத்தில்)பிச்சை ஏற்ற சிவனது விளங்குகிற சடைமேல் உள்ள பாம்பு, (திருமால் ஏறிவரும்) படர்ந்த இறக்கைகளை புடைய பறவை யரசனாகிய கருடனைக் கண்டு அஞ்சாதது போல், மெலிந்தவர் வலியவரைத் துணையாகக் கொள்ளின் வலிமையுடைய பகைவர்க்கு அஞ்சார். 9

நிலா தன் கறுப்புக் கறையை நீக்கக் கருதா விடினும், விண்ணின்மேல் இருந்து, உலகில் நிறைந்துள்ள இருளைப் போக்குதல் போல், சான்றோர் தமது தேவைக் குறைவைத் தீர்க்கக் கருதாமல்,பிறர்க்காகத் தளர்ந்து அவர்க்கு உற்றுள்ள கொடிய குறை பாட்டைத் தீர்ப்பர். 10

பொய்ப்புலன்கள் ஐந்தும்நோய் புல்லியர்பால்
                                     அன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம்—துப்பின்
சுழற்றுங்கொல் கல்தூணை ; சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு. 11

வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை—திருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு. 12


பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கேற்ப
விருப்ப மொடுகொடுப்பர் மேலோர்—சுரக்கும்.
மலையளவு நின்றமுலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர். 13


தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோம் என்று
தலையா யவர்செருக்குச் சார்தல்—இலையால்
விரைக்கும்வண் டூதுமலர் ஈர்ங்கோதாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு. 14


இல்வானுக் கன்பிங் கிடம்பொருள் ஏவல்மற்
றெல்லாம் இருந்துமவற் கென்செய்யும்—நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூல்; தெரியும்
விழியிலார்க் கேது விளக்கு. 15

சூறாவளிக் காற்று தன் வலிமையால் கல் துாணைச் சுழலச் செய்யாது; சிறிய அற்பத் துரும்பையே சுழலச் செய்யும். அதுபோல, நிலையற்ற ஐம்புலன்கள், அற்பர்கட்கன்றி, உண்மை யறிஞர்க்குத் துன்பம் தரா.

11

திருந்திய அணிகலன் அணிந்தவளே!குளிர்ந்த நீர் பொத்தல் குடத்தில் நிற்காதது வியப்பன்று-நின்றாலே வியப்பு அதுபோல, வருந்துகிற உயிர், ஒன்பது பொத்தல்களையுடைய உடம்பிலிருந்து ஒடிவிடாமல் உள்ளே பொருந்தியிருப்பதுதான் வியப்பு. 12

பால் சுரக்கின்ற-மலையளவு அமைந்த மார்பகத்தையுடைய பெண்ணே!பதினாறுகலையுடை நிலவுக்கு அன்றன்றைக்கு எத்தனை கலை உண்டோ அதற்கேற்ப ஒளியின் அளவும் இருப்பது போல, உயர்ந்தவர், பொருள், மிகுதியாகவோ குறைவாகவோ இருக்கும் அளவிற்கு ஏற்பப் பிறர்க்கு விருப்பத்துடன் அளிப்பர். 13

மணக்கின்ற- வண்டு கோதுகின்ற குளிர்ந்த மலர் அணிந்த கூந்தலாளே! பெரிய மேரு மலைக்கும் (சிவனால் வில்லாக) வளைக்கப்படும் நிலை நேர்ந்தது. ஆதலால் உயர்ந்தவர், அழியாத பெரிய செல்வநிலை உடையோம்,என்று தருக்கு கொள்ளுதல் இல்லை. 14

நல்ல பெண்ணே! மொழி அறியாதார்க்குப் பழம்பெரும் நூல்களால் ஏது பயன்? பார்க்கும் கண் இல்லாதார்க்கு விளக்கால் ஏது பயன்? இல்லாதது போல், அன்பு இல்லாதவனுக்கு,இவ்வுலகில்இடம்-பொருள்-ஏவல்-மற்றும் எல்லாம் இருந்தும்,அவை அவனுக்கு என்னபயன் தரும்? 15

தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர்
தம்மை. மதியார் தமையடைந்தோர்—தம்மின்
இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு
கழியினும்செல் லாதோ கடல். 16

எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன்
மைந்தர்தம் ஈகை மறுப்பரோ—பைந்தொடீ
நின்று பயனுதவி நில்லா அரம்பையின் கீழ்க்
கன்றும் உதவும் கனி. 17

இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே—பொன்செய்
அதிர்வளையாய் பொங்கா தழல்கதிரால் தண்ணென்
கதிர் வரவால் பொங்கும் கடல் 18

நல்லோர் வரவால் நகைமுகங்கொண் டின்புறீஇ
அல்லோர் வரவால் அழுங்குவார்— வல்லோர்
திருந்தும் தளிர்காட்டித் தென்றலால் தேமா
வருந்தும் சுழல்கால் வர. 19

பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவர் என்க—தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிறவுறுப்பைக்
கண்டு கலுழுமே கண். 20

பெரிய கடல் நீர் சுருங்கிய உப்பங்கழியிலும் எதிரேறிச் செல்லுதல் போல, உயர்ந்தவர், தம் பெருமையையும் தலைமை நிலைமையையும் பொருட்படுத்தாமல், தம்மை அடைந்தவர் தம்மினும் இழிந்தவ ராயினும் அவர்பால் சென்று அவரது துயர் துடைப்பர்.

16

அழகிய வளையல் அணிந்தவளே! நிலை நின்று கனிதந்து பின் அழிந்து விட்ட வாழை மரத்தின் கீழ்க்கன்றும் அவ்வாறே கனி தருவது போல், இரப்பவர்க்குக் கொடுத்துக் கொடுத்து என் தந்தை ஏழையானான் என்று காரணம் கூறி அன்னாரின் பிள்ளைகள் கொடுப்பதை நிறுத்த மாட்டார்கள் (நிறுத்தக்கூடாது). 17

பொன்னால் செய்த ஒலிக்கின்ற வளையல் அணிந்தவளே! கடல், வெப்பக்கதிராகிய ஞாயிறால் பொங்காது, குளிர்ந்த கதிராகிய திங்களாலேயே பொங்குவது போல், இப்பெரிய உலகினர், இன்சொல்லால் அல்லாமல், வன்சொல்லால் என்றும் மகிழார். 18

இனிய மாமரம், தென்றல் காற்று வீசின் தளிர் துளிர்த்து வளரும்; சுழல் காற்று வீசின் சிதையும்; இது போல், செயல் வல்லவர், நல்லோர் வரின் சிரித்த முகத்துடன் இன்புறுவர்; தீயவர் வரின் வருந்துவர். 19

தேர்ந்த அணிகலம் உடையவளே! கண்ணானது மிகுந்த நோயால் வருந்துகிற மற்ற உறுப்புகளைக் (அங்கங்களைக்) கண்டு அழும். இதுபோல், பெரியோர், பிறரது பிணியைக் கண்டு, தமக்கு வந்த பிணிபோல் எண்ணி, நெருப்பில் கொட்டிய நெய்போல் உள்ளம் உருகி வருந்துவர் என்று அறிக. 20

எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்தறிவார்க் காணின் இலையாம்—எழுத்தறிவார்
ஆயும் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில்
வீயும் சுரநீர் மிகை. 21

ஆக்கும் அறிவா னலது பிறப்பினால்
மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க—நீக்கு
பவரார் அரவின் பருமணிகண் டென்றும்
கவரார் கடலின் கடு. 22


பகர்ச்சி மடவார் பயிலநோன் பாற்றல்
திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம்—நெகிழ்ச்சி
பெறும்பூரிக் கின்றமுலைப் பேதாய் பலகால்
எறும்பூரக் கல்குழியு மே. 23

உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங்கீழ்
கொண்டு புகல்வதவர் குற்றமே—வண்டுமலர்ச்
சேக்கை விரும்பும் செழும்பொழில்வாய் வேம்பன்றோ
காக்கை விரும்பும் கனி. 24

கல்லா அறிவிற் கயவர்பால் கற்றுணர்ந்த
நல்லார் தமதுகனம் நண்ணாரே—வில்லார்
கணையிற் பொலியும் கருங்கண்ணாய் நொய்தாம்
புணையிற் புகும்ஒண் பொருள். 25

நூல் கற்றோர் தெளிந்து வணங்கும் சிவனது ஒளிவிடும் திரு முடியைக் கண்டதும், விண்ணிலிருந்து விழுந்த தேவகங்கையின் வெள்ளம் முடிக்குள் புக்கு அடங்கியது. அதுபோல், நல்ல நூல்களின் ஆழம் அறியாமல் நுனிப்புல் மேய்ந்தவரின் கல்வியின் அகலம் முழுதும், ஆழ்ந்த கல்வியுடையோர் முன்னே மறைந்துவிடும்.

21

கொடிய பாம்பிடமிருந்து வந்த உயர்ந்த மாணிக் கத்தை வேண்டிய தில்லை என விலக்குபவர் யார்? யாருமிலர். உயர்ந்த கடலிலிருந்து வந்த நஞ்சை எவரும் விரும்பார். அதுபோல், உயர்த்தும் கல்வியறிவாலன்றி, பிறந்த குலத்தைக் கொண்டு, மேலான உயர்வையோ கீழான தாழ்வையோ தீர்மானிக்கலாகாது. 22

நெகிழ்ந்து விம்முகின்ற மார்பகம் உடைய பெண்ணே! வன்மையான கருங்கல்லிலும், எளிய எறும்புகள் பலகாலம் ஊர்ந்து செல்லச் செல்லக் குழி விழுந்து விடுவது போல், உடம்பை விற்கும் விலை மகளிரும், நல்ல நோன்பு செய்வதைப் பலகாலம் மேற்கொள்ளக் கொள்ள, அவரது நல்ல மன வலிமை சிறப்பு தரும். 23

வண்டுகள் மலர்ப் படுக்கையை விரும்பும் செழுமையான சோலையில், காக்கை விரும்புவது கசக்கும் வேப்பங்காய் கனியைத் தானே! அது போல, ஒருவரிடம் உயர்ந்த குணங்கள் பல இருப்பினும், கீழோர், அவரிடம் உள்ள ஒரு குற்றத்தையே எடுத்துப் பேசுவர். 24

வில்லிலிருந்து வரும் அம்புபோல் பொலிவு பெற்றகரிய கண்களை உடையவளே! (நீரில் மிதக்கும்) தெப்பத்தில் ஏற்றப்படும் கனமான பொருள்களும் இலேசாகத் தோன்றுவதுபோல், கற்றறியாத கீழ்மக்களின் நடுவே, கற்றுணர்ந்த நல்லவர் தமது பெருமை தாழ்த்தப்படுவர். 25

உடலின் சிறுமை கண்டொண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார்—மடவரால்
கண்ணளவாய் நின்றதோ காணும் கதிரொளிதான்
விண்ணளவா யிற்றோ விளம்பு. 26


கைம்மா றுகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மால் இயலுதவி தாம் செய்வர்—அம்மா
முளைக்கும் எயிறு முதிர்சுவைநா விற்கு
விளைக்கும் வலியன தாம் மென்று. 27


முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்
கனிவினும் நல்கார் கயவர்—நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்
தாயினும் ஆமோ அறை. 28


உடற்கு வருமிடர்நெஞ் சோங்குபரத் துற்றோர்
அடுக்கும் ஒரு கோடி யாக—நடுக்கமுறார் பண்ணிற்
புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ மண்ணில்
புலியைமதி மான். 29

கொள்ளும் கொடுங் கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளம் கனிந்தறம்செய் துய்கவே—வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகு தற்கண் என் செய்வார் பேசு. 30

இளம் பெண்ணே! ஞாயிற்றின் ஒளி, நம் கண்பார்வை செல்லும் தொலைவு மட்டுக்குமா உள்ளது? அது விண்வெளி முழுதும்இருக்கிறதல்லவா?சொல்லுக. இது போல, நல்லறிஞர், ஒருவரின் சிறிய உருவத் தோற்றத்தைக் கண்டுவிட்டு, அவரது கடலனைய கல்விப் பெருமையைப் புறக்கணிக்க மாட்டார்கள்.

26

அம்மா! முளைத்துக் கொண்டிருக்கும் பற்கள் கடினமான உணவுப் பொருள்களையும் கடித்து மென்று நாக்கிற்கு மிகுந்த சுவையைக் கொடுப்பது போல, கற்றறிந் தோர், பதிலுதவி எதிர்பார்க்காமல், தம் உடல் வருந்தியாவது தம்மால் இயன்ற உதவியைப் பிறர்க்குச் செய்வர். 27

வாழை மரம், நன்கு முற்றுதல் இல்லாத காய் நிலையிலும் கறிக்கு உதவும். எட்டி மரம் பழுத்தாலும் உதவுமோ? சொல்! இதுபோல, பேரறிஞர் சினங்கொண் டிருக்கும்போதும் வந்தவர்க்கு உதவி செய்வர்; கீழோர் மனம் கனிந்து மகிழ்ச்சியா யிருக்கும் போதும் பிறர்க்கு உதவார். 28

பண்ணென இனிக்கும் குளிர்ந்த மொழியாளே! மண்ணுலகில் உள்ள புலியைக் கண்டு விண்ணில் நிலாவில் உள்ள (களங்கமாகிய) மான் அஞ்சாதது போல், மனத்தை உயர்ந்த பரம்பொருளாகிய கடவுளிடம்செலுத்தியவர்கள், கோடி கோடியாக உடம்புக்கு அடுக்கி வரும் துன்பங்கட்கு அஞ்சமாட்டார்கள். 29

வெள்ளம் வருவதற்கு முன்பே அணைக்கரை கட்டிவைக்காதவர்கள், வெள்ளம் பெருகிவரும் போது என்ன செய்ய முடியும்? சொல்லுக. இவ்வாறே, உயிரை வாங்கும் கொடிய எமன் கொல்வதற்கு வரு முன்பே, மன நெகிழ்வுடன் அறச் செயல்கள் புரிந்து உய்ய வேண்டும். 30

பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கைசென்று தாக்கும் கடிது. 31


பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்
காழொன் றுயர்திண் கதவு வலியுடைத்தோ
தாழ்ஒன் றிலதாயின் தான். 32


எள்ளா திருப்ப இழிஞர்போற் றற்குரியர்
விள்ளா அறிஞரது வேண்டாரே - தள்ளாக்
கரைகாப் புளதுநீர் கட்டுகுளம் அன்றிக்
கரைகாப் புளதோ கடல் 33


அறிவுடையார் அன்றி அதுபெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறிதும்- பிறைநுதால்
வண்ணஞ்செய் வாள்விழியே யன்றி மறைக்குருட்டுக்
கண்ணஞ்சு மோஇருளைக் கண்டு 34


கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர்தாம் என்றும் மதியாரே - வெற்றிநெடு
வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி
பால்வேண்டும் வாழைப் பழம்
35

</poem>}} அழகிய அணிகலன் அணிந்தவளே! உடம்பின் மேல் போய்த் தாக்குகின்ற பெரிய தடி அடியை, கையானது விரைந்து சென்று தன்மேல் தாக்கத் தடுப்பது போல, பேரறிஞர்கள், பிறரைத் தாக்கும் துன்பத்தை வீரமொடு விரைந்து சென்று தாம் தாங்கி அவர்களைக் காப்பர். 31

நல்ல நெற்றியாளே! வயிரம் பொருந்திய உயர்ந்த வன்மையான கதவு, ஒரு தாழ்ப்பாள் இல்லையெனில் காக்கும் வலிமை இல்லாதது போல், அறநூல்கள் எடுத்துச் சொல்லும் பயனுள்ள அறங்களை ஆராயும் அறிவு இல்லாதவர்கள், ஒப்புக்காகச் செய்யும் அறச்செயல்கள் நீடிக்கும் வலிமை இல்லாதனவாகும். 32

நீர் நிறைந்த குளத்திற்குத் தள்ள முடியாத கரையின் காவல் வேண்டியுள்ளது. மற்று, பெரிய கடலுக்குக் கரைகாப்பு தேவையில்லை. அது போல, இழிசெயலுடையவர்கள், தம்மை யாரும் இகழாதபடி தற்காப்புக்காக என்னென்னவோ செய்வர் ; நீங்காத நல்லறிவினர்க்கு அத்தகைய நிலை தேவையில்லை. 33

பிறை நிலாவைப் போன்ற நெற்றியாளே! அழகு தரும் ஒளியுள்ள கண்ணே இருட்டைக் கண்டு அஞ்சுமே தவிர, பார்வை மறைந்த குருட்டுக் கண் அஞ்சாது. அதுபோல், அறிவுடையவர் பழிக்கு அஞ்சுவாரேயன்றி, அவ்வறிவு பெறாதவர் தம்மிடம் உள்ள பெரும் பழிக்குச் சிறிதும் அஞ்சார். 34

நீண்ட வெற்றிவேல், வடிவமைப்பு அழகை விரும்பு கிற ஒளியுடைய கண்களை உடையவளே! வாழைப் பழம் பாலோடு சேர வேண்டுமே தவிரப் புளித்த காடி நீரோடு சேர வேண்டுதல் இல்லை. அது போல, மேலோர், கற்றறிந்தவர்களை விரும்புவரே யன்றி மற்றவர்களை என்றும் மதிக்கார். 35

தக்கார்க்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்லென்று
மிக்கார்க் குதவார் விழுமியோர்—எக்காலும்
நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக் கிறைப்பரோ போய் 36


பெரியார்முன் தன்னைப் புனைந்துரைத்த பேதை
தரியா துயர்வகன்று தாழும்—தெரியாய்கொல்
பொன்னுயர்வு தீர்த்த புணர்முலையாய் விந்தமலை
தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து 37


நல்லார் செயுங்கேண்மை நாடோறும் நன்றாகும்
அல்லார் செயுங்கேண்மை ஆகாதே—நல்லாய்கேள்
காய்முற்றின் தின்தீங் கனியாம் இளந்தளிர்கள்
போய்முற்றின் என்னாகிப் போம் 38


கற்றறியார் செய்யும் கடுநட்பும் தாங்கூடி
உற்றுழியும் தீமை நிகழ் வுள்ளதே—பொற்றொடீ
சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த
அன்றே மணமுடைய தாம் 39


பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தாம் மற்றொவ்வார்—மின்னுமணி
பூணும் பிறவுறுப்பு பொன்னே அதுபுனையாக்
காணுங்கண் ஒக்குமோ காண் 40

                      நன்னெறி நிறைவு

எப்போதும் நெல்லுக்கு நீர் இறைப்பரே தவிர உலர்ந்து போன காட்டுப் புல்லுக்கு யாரும் நீர் இறைக்கார். அதுபோல, உயர்ந்தோர், யாரும் தக்கார்க்கே உதவுவர்-தகாதவர்க்கு உதவுபவர் இல்லை-என்னும் நியதியால் ஒழுங்கு மீறிப் போனவர்க்கு உதவ மாட்டார்கள்.

பொன்னின் உயர்வைப் போக்கிய அழகிய இரண்டு மார்பகங்களை உடையவளே! அகத்தியரை விஞ்சிய விந்த மலை பின் அவரால் தாழ்த்தி அமுக்கப்பட்டுத் தன் உயரமும் உயர்வும் நீங்கியதை நீ அறியாய் போலும்! அது போலவே, பெரியோர்களின் முன் தன்னை உயர்வாகக் கற்பனை செய்து புகழ்ந்து கொள்ளும் அறிவிலி, பின், நிலை பெறாமல் உயர்வு நீங்கத் தாழ்ந்து போவான். 37

நல்லவளே, கேள்! காய் முதிர்ந்தால் தின்னக் கூடிய இனிய பழமாகும். இளந்தளிர்கள் முதிர்ந்தால் என்ன ஆகும்? சருகாய் உதிர்ந்து போகும். அவ்வாறே, நல்லவ ரோடு கொள்ளும் நட்பு நாளும் வளர்ந்து நன்மை பயக்கும்; தீயவருடன் கொள்ளும் தொடர்போ நாளுக்குநாள் குறைந்து தீமை செய்யும். 38

பொன் வளையல் அணிந்தவளே! படர்ந்து செல்லும் செழுமையான கொடியில் மெல்லிய பூக்கள் மலர்ந்த அப் பொழுதே மணம் வீசும். அது போல், கல்வியறிவற்றவ ரோடு கொண்ட அழுத்தமான நட்பும், அவரோடு கூடிய அந்த நேரத்திலேயே (முதல் சூழ்நிலையிலேயே) தீமை தருவதாக இருக்கும். 39

பொன் போன்றவளே! மின்னுகின்ற அணிகலன் அணிந்த மற்ற உறுப்புகள், அந்த அணி பூணாத-பொருள் களைப் பார்க்கக் கூடிய கண்ணுக்கு நிகர் ஆகுமோ? ஆகா-அறிவாயாக! அது போல், பொன் அணிகள் பூண்ட மன்னர்கள், அவை அணியாத-பெரிய கல்வி பெற்ற அறி ஞர்கட்கு ஒப்பாக மாட்டார்கள். 40

நன்னெறி நயவுரை நிறைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=நன்னெறி_நயவுரை/நன்னெறி&oldid=1702221" இலிருந்து மீள்விக்கப்பட்டது