உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதையாவது படிப்பது, எதையாவது எழுதுவது. மீதி நேரங்களில் வேப்ப மரத்தடி! அங்கே சத்தியும் நானும்! எத்தனையோ இன்பக் கதைகளை அந்த வேப்ப மரம் கேட்டிருக்கிறது. பேச்சின் ஒலிக்கு மாத்திரம் சக்தியிருக்குமானால் அந்த வேப்ப மரம், இனிப்பு மரமாக மாறியிருக்கும். அவ்வளவு தித்திப்பான கதைகள். ஒரு நாள் நீண்டு உயர்ந்த மதிலுக்கு உள்ளே ஒரு சிறிய பந்து வந்து விழுந்தது. வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் கையிலிருந்து தப்பி, அது எங்கள் கையில் சிக்கியது. உடனே ஒரு திட்டம் போட்டோம். ஒரு பழைய வேட்டியைக் கிழித்து வலைபோலக் கட்டினோம். எங்கள் கைகளைப் பந்தடிக்கும் மட்டை ஆக ஆக்கிக்கொண்டு தினந்தோறும் விளையாட ஆரம்பித்தோம். அந்த விளையாட்டுக்குப் பந்தயம் எல்லாம் கட்டுவதுண்டு. தோழர் வேணு, தனக்கு வந்த கடலை உருண்டைகளையெல்லாம் பந்தயத்தில் இழந்து, துவரையை இழந்து, சோற்றையும் ஒரு நாள் இழந்து, தரும மகாராஜன் போல நின்று கொண்டிருந்தார். தோழர் ராம சுப்பையா பந்து விளையாட்டில் என்னுடைய கட்சி. வருகிற பந்தையெல்லாம் சாமர்த்தியமாக அடித்துவிடுவார். ஆனால் ஒரு குறை; பந்து வலையைத் தாண்டி அப்புறம் போகாது! அவ்வளவுதான் கஸ்தூரி, சத்தியின் கட்சியிலேயிருந்து விளையாடுவார். பந்து தானாகவே போய் அவரது கையில் மோதி எங்களிடம் திரும்பி வரும் காட்சி அற்புதமாக இருக்கும்; அவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடுவார். அந்த விளையாட்டிலும், இடையே தொய்வு ஏற்பட்டு விட்டது. ஜெயில் ஆகாரத்தைச் சாப்பிட்டு விட்டு இம்மாதிரி வேலைகளை யெல்லாம் எங்களைப் போன்ற பலசாலிகள் செய்யலாமா? எல்லாருக்கும் உடம்பு வலி, உட்கார முடியாது. நிற்க முடியாது; நான் ஊசியும் போட்டுக்கொண்டேன். பிறகு, மீண்டும் ஆசை பிறந்தது விளையாட ஆனால் விளையாட்டுக்கு விரைவில் முடிவு ஏற்பட்டு விட்டது. 244